Header Ads



சிந்தனைக்கு சில நபித் துளிகள் - புனித ரமழான் அறிவுப் போட்டி (கேள்வி 23)

மூன்று நாட்களுக்கு மேல் பேசாமலிருந்தால்...

ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்திக்கும்போது அவரும், இவரும் முகத்தை திருப்பிக் கொள்வர். இவ்விருவரில் சிறந்தவர் யார் எனில், யார் ஸலாமை முதலில் தொடங்குகிறாரோ அவர்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்-5003, புகாரி-6077)

மூன்று பேரில் இரண்டு பேர்...

நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது உங்கள் நண்பரை விட்டு விட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம். அவ்வாறு பேசுவதை அவரை வருத்தமடையச் செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்-4401, புகாரி-6290

மூன்று முறை துப்பி விடுங்கள்...

உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே, நான் தொழுதுகொண்டிருக்கும்போது எனக்கும் எனது தொழுகைக்கும் எனது ஓதலுக்குமிடையே ஷைத்தான் தடையாய் நின்று எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவன்தான் கின்ஸப் எனப்படும் ஷைத்தான் ஆவான். அவனை நீங்கள் உணர்ந்தால் அவனிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் கோரி, உங்கள் இடப்பகத்தில் மூன்று முறை துப்பி விடுங்கள் என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்-4431)

மூன்று பேர் வந்தனர்....

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுன் நபவி) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்று பேர் வந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். மற்றொருவர் (கண்டு கொள்ளாமல்) சென்று விட்டார். (உள்ளே வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவைக்கு) முன்னால் வந்து நின்றார்கள். அவர்களில் ஒருவர் வட்டமான அந்த அவையில் இடைவெளி இருப்பதைக் கண்டு, அதில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் பின்வரிசையில் அமர்ந்து கொண்டார். மூன்றாமவரோ திரும்பிப் போய்க் கொண்டிருந்தார். 

நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசி முடித்ததும் அம்மூவரைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவரோ அல்லாஹ்விடம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவர் விடயத்தில் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சிப்படுத்தினார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான் என்று கூறினார்கள். (புகாரி-474, முஸ்லிம்-4389)

மூன்று இரவுகள்....

எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று இரவுகளுக்கு மேல் பயணம் மேற்கொள்ள வேண்டாம். (ஆதாரம்: முஸ்லிம்-2605)

மூன்று பள்ளிவாசல்கள்...

நான் அபூ ஸயீத் அல் குத்ரி (ரழி) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை செவியுற்றேன். அது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இதை தாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் இருந்து செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்காததையா அவர்கள் கூறியதாக சொல்வேன். நபி (ஸல்) அவர்கள் எனது இந்த (மஸ்ஜிதுன் நபவி) பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்ற இடங்களுக்கு (நன்மையை நாடிப் புனிதப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று கூறியதையும் மற்றும் எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அல்லது கணவருடன் தவிர இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று கூறியதையும் நான் கேட்டேன் என்று கூறினார்கள். (புகாரி-1197, முஸ்லிம்-2602)

மூன்று செயல்கள்....

மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன. முதலாவது நிலையான தர்மம் இரண்டாவது பயன்பெறும் கல்வி. மூன்றாவது அவனுக்காக பிரார்த்திக்கும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்-3358)

மூன்று தோழர்களின் முடிவு...

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களின் மனைவியிடம் நபி (ஸல்) அவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினார். (அவர்கள் கூறிய மறுமொழியைக் கேட்ட பின்) அவர்களில் ஒருவர் நான் பெண்களை மணம் முடிக்க மாட்டேன் என்று சொன்னார். மற்றொருவர் நான் புலால் உணவு உண்ண மாட்டேன். மூன்றாமவர் நான் படுக்கையில் உறங்க மாட்டேன் என்று கூறினார். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள் இறைவனை வாழ்த்திப் போற்றி விட்டு சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், நான் (இரவில்) தொழுகிறேன். உறங்கவும் செய்கிறேன். நோன்பு நோற்கிறேன். நோன்பை விடவும் செய்கிறேன். என் வழிமுறையை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம் 2714)

மூன்று முடிச்சுகள்...

உங்களில் எவரேனும் தூங்கி விட்டால் ஷைத்தான் அவரின் பிடரியின் மீது மூன்று முடிச்சுகளை போட்டு ஒவ்வொரு முடிச்சிலும் இன்னும் நீண்ட இரவு மீதமிருக்கிறது. நன்றாக தூங்கி விடு என்று ஊதி விடுகின்றான். ஆனால், அம்மனிதர் இரவில் எழுந்து அல்லாஹ்வை புகழ்வாரேயானால் ஒரு முடிச்சு தானாக அவிழ்ந்து விடும். பிறகு (தொழுகைக்காக) வுழூ செய்தால் இரண்டாவது முடிச்சு தானாக அவிழ்ந்து விடும். மேலும் அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்து விடும். அவர் அதிகாலையில் தெளிவான மனதுடன் மகிழ்ச்சி பொங்க எழுந்து விடுகிறார். அவ்வாறு இல்லை என்றால் அன்றைய காலைப் பொழுதை சோம்பல் நிறைந்தவராக தீய மனமுடையவராக எழுந்திருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி-3269)

மூன்றில் ஒன்று....

ஸஅத் பின் அபி வக்காஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்காவில் (உடல் நலிவுற்றிருந்த) என்னை நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுந்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஏன் அழுகிறீர் என வினவினார்கள். சஅத் பின் கவ்லா இறந்ததைப் போல நாடு துறந்து சென்ற இந்த மண்ணிலேயே (மக்காவிலே)இறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன் என்று நான் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இறைவா ஸஃதுக்கு குணமளிப்பாயாக என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள். 

அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. எனக்கு என் ஒரே மகள் மட்டும் (இப்போது) வாரிசாக இருக்கிறாள். ஆகவே என் செல்வங்கள் அனைத்திலும் இறுதி விருப்பம் தெரிவித்து விடட்டுமா? என்று கேட்டேன். அதற்கு நான் மூன்றில் இரண்டு பாகங்களில் என்று கேட்டேன். அதற்கும் வேண்டாம் என்றார்கள். அப்படியானால், பாதியிலாவது அதற்கும் வேண்டாம் என்று சொன்னார்கள். அப்படியானால் மூன்றில் ஒரு பாகத்தை என்று கேட்டேன். மூன்றில் ஒரு பாகமா? அது கூட அதிகம்தான். நீர் உமது செல்வத்திலிருந்து பிறருக்குக் கொடுப்பது தர்மம்தான். நீர் உமது குடும்பத்தாருக்குக் கொடுப்பதும் தர்மம்தான். உமது மனைவிக்குக் கொடுப்பதும் தர்மம்தான். நீர் உமது வீட்டாரை மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச் செல்வதை விட (பொருளாதார நலத்துடன் விட்டுச் செல்வதே சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்-3352)

மூன்று நாளுக்கு மேல் தடை...

அப்துல்லாஹ் பின் வாகித் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள் என்று கூறினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் வாகித் சொன்னது உண்மையே என்றாலும் ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அழ்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப் புர ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம் குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்து வையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள். அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆனபோது மக்கள் அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியின் தோலிலிருந்து தோல் பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக் கொள்கின்றனர் என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதனால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் நம்மை நாடி வந்திருந்த ஏழை மக்களுக்காகவே மூன்று நாட்களுக்கு மேலாக குர்பானி இறைச்சியை உண்ண வேண்டாமென உங்களைத் தடுத்தேன். இனி நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்து வையுங்கள். தான தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள். (முஸ்லிம்-3986)

கேள்விகள்

கேள்வி – 1 மனிதன் மரணித்தால் எந்த மூன்று அமல்கள் அவனது கப்ருக்கும் பயனளிக்கும் ?
கேள்வி – 2 நபி (ஸல்) அவர்கள் எந்த இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிட தடை செய்தார்கள்?

No comments

Powered by Blogger.