Header Ads



வங்குரோத்து..!

(தம்பி)

தேர்தல் திருவிழாவொன்று ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் 03 மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தமது தேர்தல் பிரசாரமாக ஆகக் குறைந்தது ஒவ்வொரு விடயத்தைத் தூக்கிப் பிடிக்கும். கிழக்குத் தேர்தலில் தம்புள்ளை பள்ளிவாசலை வைத்து வீர முழக்கமிட்டு வண்டியோட்டிய மு.காங்கிரஸ் - இந்த தேர்தல்களில் எதைத் தூக்கிப் பிடிக்கப் போகிறதோ தெரியவில்லை. மஹியங்கனை பள்ளிவாசல் பூட்டப்பட்டுக் கிடக்கும் விவகாரம் மு.கா.வின் கண்ணெதிரே உள்ளபோதும், அதுகுறித்து இந்தத் தேர்தலில் மு.கா. மூச்சு விடாது என்பதை மட்டும் அடித்துச் சொல்லலாம். மு.காங்கிரஸ் என்பது இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கென உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு கட்சியாகும். ஆனால், இப்போதைய நிலையில் முஸ்லிம் சமூகத்தின் கச்சைத் துண்டைக் கூட அந்தக் கட்சியால் காப்பாற்ற முடியவில்லை. கிட்டத்தட்ட இலங்கை முஸ்லிம் சமூகம் ஆடைகள் உருவப்பட்டு அம்மணமான நிலையில் நிற்கிறது. ஆனால், அதுகுறித்து முஸ்லிம் அரசியல் தலைமைகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் எவ்வாறு போட்டியிடுவதென்பது குறித்து சூடான வாதப் பிரதிவாதங்களும் - தீர்மானங்களும் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் மு.காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளது. அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - ஆளும் வெற்றிலைக் கட்சிக் கூட்டணியில் இணைந்து போட்டிடவுள்ளது. இந்தக் கூத்து மேடையில் அமைச்சர் அதாஉல்லா களமிறங்க போவதில்லை. அவரின் பருப்பு இங்கெல்லாம் வேகாது என்பது அவருக்கே தெரியும்.  இதில் ஒரு ஏமாற்றம் நிறைந்த பகிடியும் உள்ளது. நதிகள் வேறு வேறானாலும் - அவை சேருமிடம் கடல்தான் என்பார்கள். அதுபோல், முஸ்லிம் அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தல்களில் எப்படிப் பிரிந்து நின்று, என்னென்ன சின்னங்களில் களமிறங்கினாலும், கடைசியில் 'சால்வை'யிடமே அவை சரணடையப் போகின்றன.

வக்கிழப்பு

முஸ்லிம் அரசியல் தலைமைகள் வக்கிழந்து நிற்கின்றன. மஹியங்கனை பள்ளிவாசல் அடாத்தாகப் பூட்டப்பட்டுக் கிடக்கிறது. ஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் வெறும் ஊடக அறிக்கைகளில் மட்டும்தான் - மடித்துக் கட்டிக் கொண்டு வீரம் பேசுகின்றன. வேறு உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. முஸ்லிம் அரசியல் தலைமைகளின் இயலாமை குறித்து நாட்டின் ஆட்சியாளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். அதனால்தான், முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை அவர்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

வடக்குத் தேர்தலில் மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்பது ஒரு பெரிய புரட்சியல்ல. அதற்காக, அரசுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்று சொல்ல வரவில்லை. ஆளும் வெற்றிலைக் கட்சியுடன் இணைந்து மு.கா. போட்டியிடுமாயின் - இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் அத்தனையையும் ஒத்துக் கொண்டதாகப் போய் விடும் என்பது ஏராளமானோரின் கருத்தாகும்.  மத்திய அரசில் - ஆளும் தரப்புடன் மு.காங்கிரஸ் இணைந்திருந்து கொண்டு, மாகாண சபைகளில் அரசை எதிர்த்துச் செயற்படும் என்று நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. கிழக்கு மாகாணசபையில் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஒரு பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த மு.காங்கிரஸானது, கடைசியில் பொத்திக் கொண்டு பின்வாங்கிய சம்பவம் - மு.கா.வின் இயலாமைக்கான அண்மைய உதாரணமாகும். 

எனவே, வட மாகாணசபையில் மு.கா. ஒரு சில ஆசனங்களைக் கைப்பற்றுமென வைத்துக் கொண்டாலும், அந்த ஆசனங்களால் அரசுக்கு மகுடி ஊதுவதைத் தவிர மு.கா.வால் வேறொன்றும் செய்ய முடியாது.  மு.காங்கிரஸ் - எதிரணியில் இருந்ததற்கும் அரசுக்குள் இருப்பதற்குமிடையில் பெரிதாக வித்தியாசங்கள் எவையுமில்லை. ஆட்சியை விட்டும் விலகிப் போனால் - மு.கா.வின் மக்கள் பிரதிநிதிகளை ஆட்சியாளர்கள் பறித்தெடுத்து விடுவார்கள் என்கிற பயம் அந்தக் கட்சியின் தலைவருக்கு உள்ளது. ஆனால், இப்போதும் ஆட்சியாளர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக, ஆளும் தரப்பில் மு.காங்கிரஸ் இணைந்திருக்கும் போதே, அந்தக் கட்சியின் வடமேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஏ. எஹியாவை ஆட்சியாளர்கள் சுதந்திரக் கட்சிக்குள் எடுத்துக் கொண்டமையைக் குறிப்பிடலாம். 

ஆக, ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மு.கா.வுக்கு இது ஆபத்தானதொரு தருணம். அதாவது, மெல்லவும் முடியவில்லை துப்பவும் முடியவில்லை என்கிற நிலையாகும். ஆனால் இரண்டில் ஒன்றைச் செய்தே ஆகவேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் துப்புவதை விடவும் மெல்வது ஆபத்தானது. தமிழர்களின் அதிகப்பட்ச ஆதரவைப் பெற்றுக் கொண்ட த.தே.கூட்டமைப்பினரால் ஆட்சியாளர்களை எதிர்த்துக்கொண்டு அரசியல் செய்ய முடியுமென்றால், மு.கா.வால் ஏன் முடியாது என்கிற கேள்வி – முஸ்லிம் சமூகத்துக்குள் பரவலாக எழத் தொடங்கியுள்ளது. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இல்லை என்பார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக ஆயிரத்தெட்டு நெட்டூரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அரசை விட்டும் - மு.காங்கிரசினரால் விலக முடியாது என்றால் - அவர்களிடம் ஏதோ பிழை இருக்கிறது. 

முட்டிக் கொள்ளும் தலைகள்

இந்தக் கூத்து ஒரு புறமிருக்க, மு.கா. தலைவர்களுக்கிடையில் அண்மைக் காலமாக ஏற்பட்டு வரும் குத்து வெட்டுக்கள் அந்தக் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் வகையிலானவை. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் - தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோருக்கிடையே  அண்மையை காலங்களில் வெளிப்படையான மோதல்கள் இடம்பெறத் துவங்கியுள்ளன. உண்மையில், இந்த மோதல்கள் திடீரெனத் தோன்றியவையல்ல. நீண்ட நாள் புகை - இப்போது எரியத் துவங்கியுள்ளது.  மு.காங்கிரசின் தவிசாளர் - அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொண்டதன் பிறகுதான், தலைவருக்கும் - தவிசாளருக்குமிடையிலான நெருப்பு கடுமையாக எரியத் துவங்கியது. கட்சித் தலைவருக்குத் தெரியாமல் பஷீர் அந்தப் பதவியைப் பெற்றுக் கொண்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். 

ஆனால், கட்சித் தலைவருக்குத் தெரிந்திருந்தால் - அந்தப் பதவி பஷீருக்குக் கிடைக்திருக்க மாட்டாது என்பது இன்னொரு பக்க வாதமாக உள்ளது. ஏனென்றால், ஹக்கீம் அதை அனுமதிக்க மாட்டார் என்று கட்சிக்காரர்களே கூறுகின்றனர். கட்சிக்குள் - தான் மட்டுமே அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர் ஹக்கீம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். தலைவரின் இந்த மனநிலையை நிரூபிப்பதற்கு நிறையவே கதைகளும் உள்ளன. இதேவேளை, இப்படி சண்டைக்கும் சர்ச்சைகளுக்கும் மத்தியில் தலைவரும் - தவிசாளரும்  பெற்றெடுத்த அமைச்சுக்களால் முஸ்லிம் சமூகத்துக்கு ஆனபலன்தான் என்ன என்று கேட்டால்ளூ ஒன்றுமேயில்லை. கூர்ந்து கவனித்தால், தலைவர் - தவிசாளர் மோதலுக்கிடையில் ஓர் 'ஈகோ' (தான் எனும் முனைப்பு) மறைந்திருப்பதை அவதானிக்க முடியும். 

இந்த 'ஈகோ' அபாயகரமானது. அஷ்ரஃப் எனும் தலைவருக்கும் - சேகு இஸ்ஸதீன் என்கிற தவிசாளருக்குமிடையில் உடைவு வருவதற்கும் இந்த 'ஈகோ'வே காரணமாக இருந்தது. தலைவர் அஷ்ரஃப்பின் பிழையொன்றினை அப்போதைய தவிசாளர் சேகு இஸ்ஸதீன் ஊடகங்களில் சுட்டிக்காட்டியபோது, அவர்களுக்கிடையில் மறைந்திருந்த 'ஈகோ' தனது கோர முகத்துடன் வெளிப்படத் துவங்கியது. அதுவே – மு.கா.வை விட்டு சேகு வெளியேற்றப்படுவதற்குக் காரணமாயிற்று. பின்னாளில் சேகு இல்லாமல் போனதன் இடைவெளியை தலைவர் அஷ்ரஃப் காலத்திலேயே மு.காங்கிரஸ் உணர்ந்து கொண்டமை வேறு கதை. 

ஆக, தற்போது மு.கா. தலைவருக்கும் - தவிசாளருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. இந்த மோதல் தொடர்வது கட்சிக்கு ஆபத்தானது. ஏற்கனவே, கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் மு.கா. உள்ளது. இன்னொரு புறம், இந்த மோதலை ஊதிப் பெருப்பித்து கட்சியை உடைப்பதற்கு ஆயிரத்தெட்டுக் கூட்டம் காத்து நிற்கின்றன. 'புத்தியுள்ள பிள்ளைக்கு செவ்வரத்தம் பூ நஞ்சு இல்லை' என்பார்கள். தலைவரும் - தவிசாளரும் புரிந்து கொண்டால் சரி என்கிறனர் கட்சித் தொண்டர்கள். 

நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில், மு.கா. எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து கட்சிக்குள் மாறுபட்ட அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே மு.கா. தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது தலைவர் ஹக்கீமுடைய கருத்தாகும். ஆனால், மு.கா. தனித்துப் போட்டியிடுவதென்றால் அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்று – சுதந்திரமாகப் போட்டியிட வேண்டும் என்பது தவிசாளர் பஷீருடைய கருத்து. 

கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை எல்லோருக்கும் உள்ளது. ஆயினும், கட்சியின் பெரும்பான்மை விருப்புக்கு மதிப்பளித்துச் செயற்படுதல் அவசியமாகும் என்கிறார் மு.கா.வின் அம்பாறை மாவட்ட உயர்பீட உறுப்பினரொருவர்.  அந்தவகையில், வடக்கில் மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென அந்தக் கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது. ஆனாலொன்று. மீளவும் சொல்கிறோம். வடக்குத் தேர்தலில் மு.கா. தனித்துப் போட்டியிடுவதென்பது ஒரு பெரிய புரட்சியல்ல. 

இணைய முடியாதவர்கள்

வடக்குத் தேர்தலில் மு.காங்கிரசும், அமைச்சர் றிஸாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரசும் இணைந்து போட்டியிடவுள்ளதாக கதையொன்று பரவியிருந்தது. உண்மையில், அப்படியொரு அரசியல் கூட்டு நிகழ்வதுதான் பாரிய புரட்சியாகும். அப்படியொரு புரட்சி நடக்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் விருப்பமாகவும் உள்ளது. ஆனாலும் அது நடக்காது. தமிழ் தேசிய அரங்கில், புலிகளை முற்று முழுதாக எதிர்த்துச் செயற்பட்டு வந்த ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியும், புலிகளால் போஷித்து வளர்க்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயற்படுகின்றன. ஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இவ்வாறானதொரு இணைவுக்கத் தயாராக இல்லை. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவேனும் ஹக்கீம் - றிசாத் இணையத் தயாரில்லை. முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு சமூக நலனை விடவும் தாங்கள் சார்ந்த கட்சி அரசியலும், தலைவர் பதவிகளுமே முக்கியமானவையாகும். 

இன்னொரு புறம், முஸ்லிம் காங்கிரசுடன் மேற்சொன்னவாறு தேர்தல் கூட்டு ஒன்றினை வைத்துக் கொள்வதற்கு அமைச்சர் றிசாத் பதியுத்தீனை ஆட்சியாளர்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள். ஆட்சியாளர்களைப் பகைத்துக் கொண்டு – சுயாதீனமான அரசியல் நிலைப்பாடொன்றினை எடுப்பதற்கான அரசியல் பலமோ முதிர்ச்சியோ அமைச்சர் றிசாத்திடமும் இல்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், இப்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசைப் பகைத்துக் கொள்வதென்பது – அமைச்சர் றிசாத்தைப் பொறுத்தவரை விஷப் பரீட்சையாகும். அப்படியொரு காரியத்தைச் செய்வதற்கான 'துணிவு' றிசாத்திடம் கிடையாது.  ஆக, தேர்தல்களில் முஸ்லிம் தலைமைகளும் கட்சிகளும் கூட்டணி அமைத்துக் கொள்ளவுள்ளதாக வரும் கதைகள் கனவில் ருசிக்கும் இனிப்புகள் போலானவை. அவை நிஜமில்லை. கண் விழிக்கும் வரையில்தான் இனிக்கும். 

கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் விமோசனம் இப்போதைக்குக் கிடைப்பதாக இல்லை. ஆனால், அரசியல் விமோசனத்தைப் பெறுவதென்பது 'சீன' வித்தையல்ல. ரோசமும், நெஞ்சுரமும் மிக்க தலைமைகள் சமூத்துக்குக் கிடைக்கும் போது அது சாத்தியப்படும். 

3 comments:

  1. Thambi Ningal Sonnathu ellam Sari ila sila Vidayangal Sari

    Vadamahana thil SLMC enru votes ilai ok ethil vanni la ACMC LEADER HON RISAD BATHIRUDEEN MINISTER waihirathu than sattam awaruku than Vanni'il selawaku athikam ningal wanthu parungal Mannar,Vauniya & Mullaitivu Districts Risad Bathirudeen Minister da servaienai RAUFF HAKEEM Suyanalathidkaha Vanni'il thanithu pottri iduhinrar awaruku Vadamahana Muslimgal Patriya kawalai ilai Muslimgal mithu irakam irunthal ACMC Udan sernthu therthalil Podti idtrurupar

    ReplyDelete
  2. My tears rolled down when I think about our Muslim society.As a Muslim community why can't we recognise a genuine and straight forward leadership among us?

    ReplyDelete
  3. முஸ்லிம்களுக்கு ஒரு நேர்மையான அரசியல் தலைமையை இம்தியாஸ் பாக்கீர் மாக்கரால் தர முடியும். என்ன செய்ய? புல்லுருவிகளையே தலைவர்களாக ஆக்கி சமூகம் புத்தியைக் காவு கொடுத்து விட்டதே!

    ReplyDelete

Powered by Blogger.