சவூதி அரேபியாவின் நவீன ஆயுதங்களை எதிர்பார்க்கும் சிரியா போராளிகள்
(Tn) சவூதி அரேபியாவின் நவீன ஆயுதங்கள் விரைவில் போராளிகள் வசம் கிடைக்கவுள்ளதாகவும் அது கள நிலவரத்தை மாற்றிவிடும் என்றும் சிரிய அரச எதிர்ப்பாளர்களின் தேசிய கூட்டணியின் புதிய தலைவர் அஹமத் ஜாபர் நம்பிக்கை தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் நெருங்கிய உறவைப் பேணும் அஹமத் ஜாபர் சிரிய தேசிய கூட்டணியின் தலைவராக கடந்த சனிக்கிழமை தேர்வானார். இதனைத் தொடர்ந்து அவர் முதல் முறையாக ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தமது இராணுவத்தினர் பலம் பெறும்வரை அமெரிக்கா, ரஷ்யா இணைந்து நடத்தும் அமைதிப் பேச்சுவார்த்தையிலும் பங்கேற்காது என அவர் குறிப்பிட்டார்.
“தற்போதைய சூழலில் பேச்சு சாத்தியமில்லை. களத்தில் வலுவாக இருந்தாலே அந்த பேச்சுவார்த்தைக்குப் போவதாக இருந்தால் போவோம். தற்போதைய நிலையில் நாம் பலவீனமாக இருக்கிறோம்” என்று ஜாபர் ராய்ட்டருக்கு அளித்த பேட்டியில் கூறினார். எனினும் சவூதி அரேபியாவின் நவீன ஆயுதங்கள் விரைவில் கிடைக்கப்பெறவிருப்பதாக அவர் கூறியுள்ளார். “தற்போது நிலைமை சாதகமாக மாறி வருகிறது. இந்த ஆயுதங்கள் விரைவில் சிரியா வந்து சேரும்” என்றார்.
இதனிடையே புனித ரமழான் மாதத்தில் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்க ஜாபர் சிரிய அரசை கோரியுள்ளார்.
Post a Comment