Header Ads



கல்முனை அரச செயலகக் கட்டடத் தொகுதி நவீனமயப்படுத்தப்படுமா..?

(ஏ.எல்.ஜுனைதீன்)

    கல்முனை நகரில் சுமார் 30 வருடங்களுக்கு முன் இங்குள்ள அரச அலுவலகங்கள்  சகலவற்றையும் ஒரே இடத்தில் இயக்கி மக்கள் இலகுவில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப் பிரதான நோக்காகக் கொண்டு முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் அரச செயலகக் கட்டடத் தொகுதி ஒன்றை இங்கு பாரிய தொகைப் பணத்தில் மத்திய அரசின் அனுமதியுடன் அமைத்துக் கொடுத்தார். இக் கட்டடத் தொகுதியில் இன்று அரச அலுவலகங்கள் செயல்படாத நிலையில் பாழடைந்து கொண்டிருப்பது குறித்து இப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இக்கட்டடத் தொகுதியில் சுமார் 30 அரச அலுவலகங்கள் இயங்கக்கூடிய வசதிகள் உண்டு. ஆனால் தர்போது 15 க்கும் குறைந்த அலுவலகங்களே செயல்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. இக் கட்டடத் தொகுதி முறையான பராமரிப்பு இல்லாதது, தலைமைக் காரியாலயத்தின் பாராமுகம், கட்டடங்கள் தற்காலத்திற்கு ஏற்ப நவீனப் படுத்தப்படாதது என்பன போன்ற காரணங்களால் இங்கு செயல்பட்ட பல அரச அலுவலகங்கள் தமது வசதிகள் கருதி தற்போது வேறு இடங்களுக்கு இடம் மாறிச் சென்றுள்ளன என இதற்கு காரணங்கள் கூறப்படுகின்றது. 

    கடந்த காலத்தில் இக் கட்டடத் தொகுதியில் மக்கள் பயன்பெறும் நோக்கில் பல அரச அலுவலகங்கள் இயங்கி மக்களுக்கு சேவையாற்றி வந்தன. கல்முனை வலயக் கல்வி அலுவலகம்,  கல்முனை (தமிழ் பிரிவு) பிரதேச செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அலுவலகம், மது வரி அலுவலகம், பிரதான தபால் அலுவலகம் என்பன போன்றவை இவ்வாறு இங்கு இயங்கி மக்கள் ஒரே இடத்தில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளமுடிந்தது. ஆனால் அரச செயலகக் கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டதன் நோக்கம் இன்று கல்முனையில் நிறைவேற்றப்படாமல் கட்டடங்கள் பாழடைந்து கொண்டிருப்பதுடன் மக்களும் ஒரே இடத்தில் தமது அலுவல்களை முடித்துக் கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வெவ்வேறு இடங்களில் இயங்கும் அரச அலுவலகங்களுக்குச் சென்று தமது தேவைகளைக் கஸ்டப்பட்டு முடித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    இந்த அரச செயலகக் கட்டடத் தொகுதியைச் சுற்றி இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான மின்சாரத் தூண்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதுடன் பழுதடைந்த தளபாடங்கள் மற்றும் கழிவுப் பொருட்களும் குவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அரச செயலகக் கட்டடத் தொகுதிப் பிரதேசம் ஒரு அசிங்கமான தோற்றத்தில் காணப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

    கல்முனையின் அரச செயலகக் கட்டடத் தொகுதி தற்காலத்திற்கேற்ப நவீனமயப்படுத்தப்படுவதுடன் இக் கட்டடத் தொகுதி உள்ள பிரதேசமும் அழகு படுத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கை இங்குள்ள அரசியல்வாதிகளிடம் இப்பிரதேச மக்களால் விடுக்கப்படுகின்றது.


No comments

Powered by Blogger.