சோதனை முயற்சி தோல்வி - செயற்கை மூச்சுக்குழல் பொருத்தப்பட்ட குழந்தை மரணம்
அமெரிக்காவில் செயற்கை மூச்சுக்குழல் பொருத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை இறந்து விட்டது. உலகிலேயே மிகக் குறைந்த வயதில் இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தை இது. கொரியா மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த ஹன்னா வாரன் என்ற குழந்தை மூச்சுக் குழாய் இல்லாமலே பிறந்தது. இந்த குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் 99 சதவீதம் இறந்து விடுகின்றன. ஆனால், ஹன்னாவுக்கு வாயையும், நுரையீரலையும் இணைக்கும் வகையில் குழாய் வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து வைத்திருந்ததால் அவள் உயிர் பிரியாமல் இருந்தது.
இந்நிலையில், ஹன்னாவுக்கு ஆய்வுக் கூடத்தில் செயற்கையாக மூச்சுக்குழாயை தயாரித்து பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஹன்னாவின் எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களையும், பிளாஸ்டிக் பைபரால் செய்யப்பட்ட குழாயையும் பயன்படுத்தி ஆய்வகத்தில் செயற்கையாக மூச்சுக்குழாயை உண்டாக்கி அதை அறுவை சிகிச்சை மூலம் இணைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
நம் உடலில் இருக்கும் எந்த வகை செல்களைப் போலவும் ஸ்டெம் செல்களை வளர்க்க முடியும். அந்த செல்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகளை நமது உடல் ஏற்றுக்கொள்ளும். அதுமட்டுமின்றி புதிய திசுக்கள் வளர்வதும், குணமடையும் திறனும் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். எனவே, ஹன்னாவுக்கு ஆய்வகத்தில் செயற்கை முறையில் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மூச்சுக்குழாய் உருவாக்கப்பட்டது.
இல்லினாய் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி செயற்கை மூச்சுக்குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் அமைந்துள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் டாக்டர் பாலோ மக்கியாரினி அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அவர் ஏற்கனவே இதுபோன்ற 6 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட அனுபவம் பெற்றவர்.
அறுவை சிகிச்சை முடிந்த ஒரு மாதத்துக்கு பிறகு ஹன்னா தானாகவே சுவாசித்து வந்தாள். ஆனால் அவரது நுரையீரல் படிப்படியாக பாதிப்படைந்து இறந்து விட்டாள். இதனால், குழந்தையின் பெற்றோர் மட்டுமின்றி டாக்டர்களுக்கு வேதனை ஏற்பட்டது. இல்லினாய் குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மார்க் ஹால்டர்மென் கூறுகையில், ''செயற்கை மூச்சுக்குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சை செய்தபோது ஹன்னாவின் உணவுக் குழாயிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த காயம் ஆறவே இல்லை'' என்றார்.
Post a Comment