Header Ads



தமிழ் பாடசாலையில் முஸ்லிம் மாணவியர் பர்தா - தீர்த்துக்கொள்ள ஒழுங்கு செய்துதர கோரிக்கை

நிலாவெளி தமிழ் மகாவித்தியாலயத்தில் முஸ்லிம் மாணவியர் பர்தா அணிவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள ஒழுங்குகள் செய்து தருமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் .எஸ். தண்டாயுதபாணிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திருகோணமலை கல்வி வலயத்தின் நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்தில் முஸ்லிம் மாணவியர் தமக்கான கலாசார சீருடையை பாடசாலைக்குள் அணியக்கூடாது என்று தடைசெய்த விவகாரம் தற்போது பூதாகரமாக விஸ்வரூபமெடுத்துள்ளதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். 

ஓவ்வொரு இனத்துக்கும் தனித்துவமான கலாசாரப் பண்புகள் இருப்பது போல முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது. அந்த வகையில் முஸ்லிம் பெண்களின் உடை விவகாரம் முக்கியமானது. இதனால் அரசாங்கமும் இலவசச் சீருடையின் போது பர்தாவுக்கென மேலதிகத் துணியை முஸ்லிம் மாணவிகளுக்கு வழங்கி வருகின்றது.

இப்படியான ஒரு சூழ்நிலையில் நிலாவெளி தமிழ் மகா வித்தியாலய நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலாசாரச் சீருடைத் தடையானது தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தமக்குள் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே நமக்கான உரிமைகளைப் பெற முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதனைத் தாங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள ஒழுங்குகள் செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய அனுபவமுள்ளவர் என்ற வகையில் இவ்விவகாரத்தை தங்களால் சிறப்பாகக் கையாள முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. நிலாவெளி தமிழ் மகாவித்தியாலய அதிபருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சட்ட ஒழுங்கினை இந்த அதிபர் மீறியுல்லார். தமிழ் இனவாதத்தின் மற்றுமோர் மிகக் கேவலமான முகம்.

    ReplyDelete

Powered by Blogger.