குண்டாக இருந்தமையால் விசாவை நீடிக்க மறுப்பு..!
தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த ஒருவர் குண்டாக இருப்பதை காரணம் காட்டி, அவரது விசாவை நீட்டிக்க நியூசிலாந்து அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் பியூடென்ஹுயிஸ் என்பவர், நியூசிலாந்தின் தெற்கே உள்ள தீவு நகரான கிரைஸ்ட் சர்ச்சுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் வந்து குடியேறினார். அப்போது ஆல்பர்ட்டின் எடை 160 கிலோவாக இருந்தது. கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் விசாவை நீட்டிக்க விண்ணப்பித்த போது அந்நாட்டு அரசு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் விசாவை நீட்டித்தது. தற்போது ஆல்பர்ட்டின் எடை 130 கிலோவாக (286 பவுண்ட்) குறைந்துள்ளது. இந்நிலையில் இப்போது விசாவுக்காக விண்ணப்பித்த போது அவரது மனு நிராகரிக்கப்பட்டது.இதுகுறித்து ஆல்பர்ட் மனைவி மார்த்தி கூறுகையில்,என் கணவரின் எடையை காரணம் காட்டி விசாவை நீட்டிக்க மறுத்ததால் நாங்கள் இந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளோம்.
அவர் அதிக எடையுடன் இருக்கும்போது விசாவை புதுப்பித்த அரசு, எடை குறைந்துள்ள நிலையில் விசா மறுப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.நியூசிலாந்து குடியேற்றத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆல்பர்ட் டின் உடல்நலம் அவர் இங்கு இருக்க தகுதியற்றவராக ஆக்கி விட்டது. அவருக்கு சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து சுகாதார துறையின் செலவுகளை குறைக்க இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.உலக அளவில் குண்டானவர்கள் அதிகம் வாழும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா, மெக்சிகோவுக்கு அடுத்து நியூசிலாந்து 3வது இடத்தை வகிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Post a Comment