'தம்புள்ள பள்ளிவாசலை அகற்ற தொடர்ச்சியாக சதித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது'
பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினூடாக தம்புள்ள பள்ளிவாசலை சூழவுள்ள கட்டடங்களை அகற்றக்கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன்போது பள்ளிவாசலும் அகற்றப்படும். ஜனாதிபதிக்கு தெரியாமல் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இது முஸ்லிம்களின் மத உரிமையை முற்று முழுதாக பறிப்பதற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதமே. இதற்கு ஜனாதிபதியே பதில் கூற வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
தம்புள்ளை பள்ளிவாசலை சூழவுள்ள கட்டடங்கள் எதிர்வரும் ஏழு தினங்களுக்குள் அகற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில்,
தம்புள்ள பள்ளிவாசலை சூழவுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சினூடாக அனுப்பப்பட்டுள்ள கடிதமானது முஸ்லிம்களின் மத உரிமைகளை பறிப்பதற்கான கடிதமாக கருத வேண்டியுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பள்ளிவாசலை அகற்றுவதற்கான சதித் திட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இது அரசின் திட்டம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புனித பூமி திட்டத்தின் கீழ் பள்ளிவாசலை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். ஆனால் அந்த பகுதியில் உல்லாச விடுதிகளும், மதுபான சாலைகளும் நிரம்பியிருக்கின்றது. இந்த நிலையில் அரசாங்கம் பேரினவாத சக்திகளினூடாக பள்ளிவாசலை அகற்றுவதற்கான நடவடிக்கையையே முன்னெடுத்து வருகின்றது. கடும் போக்குவாதிகளின் சக்திகளுக்கு அரசு அடிபணிந்து வருகின்றமை தெளிவாகிறது.
மஹியங்கனை பள்ளிவாசலை மூடுமாறு கடந்த வாரம் ஊவா மாகாண சபை அமைச்சர் ஒருவர் உத்தரவிட்டுள்ளார். தம்புள்ளை பள்ளிவாசலை சூழவுள்ள கட்டடங்களை அகற்றுமாறு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் அமைச்சின் திணைக்களமொன்றினால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது ஜனாதிபதிக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
முஸ்லிம்களுக்கெதிராக நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் தனக்கு தெரியாது என ஜனாதிபதி மேடைகளில் கூறி வருகிறார். மட்டுமின்றி முஸ்லிம் அமைச்சர்கள் இது தொடர்பில் தனக்கு அறியப்படுத்தவில்லை என அமைச்சர்களையே சாடுகிறார். ஆனால் தற்போது ஜனாதிபதிக்கு கீழ் இயங்கும் அமைச்சினால் தம்புள்ளை பள்ளிவாசலை சூழவுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்போது பள்ளிவாசல் அகற்றப்படும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. இதற்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை ஜனாதிபதியும் அவரின் அரசாங்கமுமே முன்னெடுக்கின்றன என அவர் தெரிவித்தார்.
Post a Comment