Header Ads



எகிப்து இராணுவத்தின் அழைப்புக்கு எதிராக பத்வா

(Tn) எகிப்து இராணுவத் தளபதியின் ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை புறக்கணிக்குமாறு எகிப்தியர்களுக்கு முன்னணி இஸ்லாமிய அறிஞர் கலாநிதி யூசுப் அல் கர்ழாவி தலைமையிலான முஸ்லிம் அறிஞர்களின் சங்கம் மார்க்கத் தீர்ப்பு (பத்வா) வழங்கியுள்ளது.

வன்முறையை தூண்டுவது அல்லது சிவில் யுத்தத்திற்கு வழிவகுக்கும் செயற்பாட்டை (எகிப்தியர்) தவிர்த்துக்கொள்ள வேண்டும் என புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட பத்வாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எகிப்து இராணுவத் தளபதி ஜெனரல் அப்தல் பத்தாஹ் அல் சிசி தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக வெள்ளிக்கிழமை (இன்று) ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்தே இந்த மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டோஹாவை மையமாக கொண்டு செயற்படும் மேற்படி அறிஞர்கள் அமைப்பின் அறிவிப்பில், ‘அனைத்து தரப்பையும் வீழ்ச்சியை நோக்கி கொண்டுசெல்லும் சிவில் யுத்தத்திற்கு வழிவகுக்கும் செயல்முறையை இராணுவம், பொலிஸ், பிற தரப்புகள் என அனைத்து எகிப்தியரும் தவிர்த்துக்கொண்டு, நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘தற்போதைய பிரச்சினையில் இருந்து மீள அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்களை அமைதியான முறையில் நடத்தி எல்லா தருணங்களிலும் அமைதியை கையாள வேண்டும்’ என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே போன்று எகிப்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மற்றும் அரபு, முஸ்லிம் உலகுக்கு அச்சுறுத்தலான இந்த பிரச்சினையை தீர்க்க ஏனைய நாடுகளும் முன்வர வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.