தேசிய சூறா சபை சில பகிர்வுகள்..!
(Ansaf Thous)
தேசிய சூறா சபை சமகாலத்தில் பேசப்படுகின்ற பொதுக்கருத்தாக மாறியுள்ளது. உண்மையில் இக்கருத்து நிலைக்கொத்த அல்லது இதே விடயம் பல வருடகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும் அண்மைய காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் மீது குறிப்பாகவும் , முஸ்லிம் சமூகத்தின் சகல தரப்புக்கள் மீதும் பொதுவாகவும் பிரயோகிக்கப்பட்ட கருத்தியல், சிந்தனை செயற்பாட்டுத்தளத்திலான வன்முறைகள், அழுத்தங்களின் விளைவாக இக்கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டுள்ளமையே யதார்த்தமாகும். ஆரம்பகால தனி மனித ஆளுமைகளின் சமூக சீர்திருத்தப்பங்களிப்பு (சித்தி லெப்பை முதல் ............) பிற்பாடு இயக்கப் பரிமாணம் பெற்றது. இயக்கப் பரிமாணத்தை தாண்டிய பொதுத்தளம் பற்றிய கருத்து,அதன் அவசியம் அண்மித்த காலப்பகுதியில் பலராலும் உணரப்பட்டும், கூறப்பட்டும் வந்த நிலையில் அண்மைய நெருக்கடி அதனை செயல்பாட்டுத்தளத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் கருதலாம். இவ்வகையில் முஸ்லிம் சமூக இயங்கியலின் பரிணாம வளர்ச்சியாகவும் அடுத்த கட்ட நகர்வின் அடிப்படையாகவும் இதனை கருதுவது பொருத்தமானதாகும். இப்பகைப்புலத்தில் தேசிய சூறா சபையின் முக்கியம்,தேவை போன்ற சதாவும் பேசப்படும் விடயங்களைத் தவிர்த்து ஒரு சில பகிர்வுகளை முன்வைக்கலாம் என நினைக்கிறேன்.
சாதாரணமாக குறிப்பிடப்படும் காரணிகளுக்கப்பால் தேசிய சூறாசபையின் அவசியம் பற்றி இரு விடயங்களை குறிப்பிட வேண்டும். முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை இது காலவரை சமூகம் சார்ந்த முடிவுகளை எடுக்கும் போது சில குறித்த இயக்கங்கள்,செல்வாக்கு மிக்க தனிநபர்கள் போன்றோரே இம்முடிவுகளை எடுத்தனர். இம்முடிவுகளை எடுப்போர் பெரும்பாலும் கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்ட மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்த ஆங்கிலம் பேசும் (அதையே பெருமயாக கருதும் காலனித்துவ வியாதியுடைய) சிலரும் கிராமப் புறங்களிலிருந்து படித்த புத்திஜீவிகளாக நிறைவேற்றதிகார தொழில்களிலீடுபடும் சில புத்திஜீவிகளும் (முதலில் குறிப்பிடப்பட்ட தரப்பில் உள்வாங்கப்பட விரும்பினும் முடியாத நிலையிலும் , தமது அதிகார நிலை காரணமாக மேற்குறித்த தரப்பினருடன் சமநிலைமிக்க உறவுகளைப் பேணிவருவோர்) ஆவர். இவர்களைப் பொருத்தவரை முஸ்லிம் சமூகத்தின் இயங்கியல் பற்றிய ஆழமான அறிவோ,அதன் உள்ளார்ந்த பிரச்சினைகள் பற்றிய பிரக்ஞையோ இன்றியே இம்முடிவுகளை எடுத்தனர். முஸ்லிம்களின் பாடசாலைகள் 1000 பாடசாலை திட்டத்தில் உள்ளீர்க்கப்படுவது தொடர்பில் முடிவெடுக்கும் போது இவர்களது பிள்ளைகள் சர்வதேசப் பாடசாலைகளில் அல்லது முதற்தர பிரபல பாடசாலைகளில் படிக்கின்ற நிலை என யதார்த்தமாக கூறமுடியும். இதற்கும் மேலாக இவர்களுக்கு ஆழ்ந்த இஸ்லாமிய பின்புலமின்மை தொடர்பிலான பிரச்சினைகளும் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இத்தரப்புடன் எமது சுயநலமிக்க அரசியல்வாதிகளும் இணையும் போது முஸ்லிம் சமூகத்தின் நிலை பரிதாபகரமானதாக மாறியது. எனவே உத்தேச சூறாசபை அமையும் போது தம்மை பற்றிய முடிவுகளை தாமே எடுக்கக் கூடிய நிலை ஏற்படுவதே மிகப் பெரும் சாதகமான விடயமாகும். முடிவுகள் யாருக்காக பெறப்படுகின்றவோ (Subject) அவர்களுக்கே தன்னைப் பற்றிய முடிவுகளில் பங்கேற்கும் உரிமை வழங்கப்படுகிறது. சமகால அரசியல் தளத்தில் சனநாயகத்தின் பெயரால் பொது சனங்களின் உரிமையை திருடுகின்ற ஒரு நிலைக்கு முரணான சகலரதும் கருத்துக்களுக்கும் இடம் தருகின்ற ஒரு நிலையாக இதனைக் கருதமுடியும். எனவே முதலில் எமது இவ்வுரிமைக்கு வழிவிட்டு சகல அதிகார வர்க்கத்தினரும் மேட்டுக்குடியினரும் இம்முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் வினயமாக கேட்டுக் கொள்கிறோம். மாறாக சமூக அபிலாசைக்கு குறுக்காக நிற்கும் போது இயல்பாகவே நீங்கள் ஓரங்கட்டப்படுவீர்கள் என்ற வரலாற்று யதார்த்தத்தையும் நினைவூட்டுகிறோம். அதேநேரம் இங்கு ஏற்கனவே குறிப்பிட்டது போல முடிவெடுத்தல் சம்பந்தமான உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் உத்தேச சூறாவின் கட்டமைப்பு கொழும்புப் பிரமுகர்களை மாத்திரம் உள்வாங்கும் வகையில் மட்டுப்படுத்தப்படாது பிராந்திய, கிராமிய மட்டம் வரையான பங்கேற்பை உறுதிப்படுத்தும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இக்கருத்தை முன்வைக்கிறோம் என்பதுடன் அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திகிறோம். இல்லாதவிடத்து இதுவும் ஒரு பிரயோசனமற்ற மாற்றாகவே விளங்கும். ஏனெனில் சமூகத்திற்காக முடிவெடுக்கும் அதிகாரத்தை எந்த தனிநபருக்கோ, அமைப்புக்கோ குத்தகை எடுக்க முடியாது. அவ்வாறு செய்வது மிகத் தெளிவான அநியாயமாகும் என்பதனாலாகும். அவ்வாறே அவ்வகை அநியாயங்களை வரலாறு மிகக் கடினமான முறையில் திருத்தியுள்ளது என்பதானலுமாகும்.
அடுத்த விடயம் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு பொது செயற்பாட்டுத்தளம் பற்றிய அவசியம் நீண்டகாலமாக உணரப்பட்டது என்பதனாலாகும். ஆரம்பகாலத்தில் தனிமனித ஆளுமைகளாலும் பிறகு இஸ்லாமிய இயக்கங்களாலும் முஸ்லிம் சமூகவியல் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்ட போதும் பல காரணிகளின் பின்னணியில் இயக்கங்களைக் கடந்த பொதுத்தளம் பற்றிய கருத்தாடல் முன்வைக்கப்பட்டு அதன் அவசியப்பாடும் உணரப்பட்டே வந்தது. முஸ்லிம் சமூகம் சார்ந்து சாதகமான பல மாற்றங்களை கொண்டு வந்த இயங்கங்கள் பிற்பட்ட காலத்தில் சில பகுதிகளில் சிவில் பலம் பெற்று காணப்படுவது யதார்த்தமாகும். பிற்பட்ட காலப்பகுதியில் ஒரு சில தளங்களில் முடிவெடுக்கும் நிலையில் அல்லது செல்வாக்கு செலுத்தும் நிலையில் சில இயக்கங்கள் காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. ஆனாலும் ஒரு குறித்த இயக்கக் கருத்தியலுக்கு மாற்றுக் கருத்தையுடைய பெரும்பான்மை காணப்படுவதனாலும் (Opposite Majority) பல இயக்கங்கள் காணப்படுகின்ற நிலையிலும், இயக்கத்திற்கு வெளியே சுயாதீனக் கருத்துக்களையுடைய குழுக்கள் காணப்படும் நிலையிலும் இயக்கங்களுக்கு மாத்திரம் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்க முடியாதுள்ளது. இதற்கு மேலாக எத்தகையதொரு அமைப்பிற்கும் இயல்பான தன்னை அதிகாரமாக நிலைநிறுத்தும் போட்டியை விட்டு இயக்கங்களுக்கும் விடுபட முடியாமல் போனமை, தனது இருப்பு,கருத்தியல் சார்ந்து முடிவெடுத்தல்,பணியாற்றல் போன்ற விமர்சனங்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டது. குறித்த இயக்கங்கள் சிலபோது சமூகம் சார்ந்த முதன்மைத் தேவைப்பாடுகளை விட்டும் தனிமைப்பட்டு தம்மை அதிகார சக்தியாக நிலைநாட்டும் பணியில் ஈடுபாடு காட்டியமை பெருத்த விமர்சனத்திற்குள்ளானதுடன் சமூகம் சார்ந்த பொது விடயங்களிலேனும் சமூகநலன் கருதி ஏன் ஒனறுபட முடியாது என்ற கேள்வியும் பலமாக எழுப்பப்பட்டது. எனவே இதற்கு மாற்றாக பொதுவான வேலைத் திட்டங்களை வரையறுத்து அதற்காக ஒன்றிணையும் பொதுத்தளம் ஒன்றின் அவசியப்பாடு வெகுவாகவே உணரப்பட்டது. இதன்மூலம் சமூக நோக்கிலான காத்திரமான செயற்பாட்டுத் தளமொன்றை சகல தரப்பினரின் பங்கேற்புடன் நிறுவவும் சமூகம் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளின் போது பொதுக் கருத்தொருமைப்பாட்டுடன் வளங்களை குவிமையப்படுத்தி இயங்கவும், இயக்கங்களுக்கு வெளியேயுள்ள புத்திஜீவிகளின் பங்கேற்பை சாத்தியப்படுத்தவும் முடியும் என்ற எதிர்பார்ப்பு முன்வைக்கப்பட்டது. இதற்கும் மேலாக பிம்ப வணக்கம், இயக்கவெறி தாண்டிய ஒரு சகவாழ்வுமிகுந்த சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியமும் உணர்த்தப்பட்டது. இவ்வடிப்படையில் இயக்கங்களின் பணிக்கடுத்ததான பரிமாண வளர்ச்சியாகவும் தேவைப்பாடாகவும் தேசிய சூறாசபையைக் கருதலாம். இவ்வடிப்படையில் அடுத்த கட்ட பரிமாண நகர்வாகவும், இயக்கவெறிக்கப்பால் சகவாழ்வுமிக்க சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான அவசியத் தேவைப்பாடாகவும் சமூகத்தின் நிர்ப்பந்த தேவை எனவும் கூற முடியும்.
இறுதியாக இச்சூறா சபையின் கட்டமைப்பு பற்றிய சுருக்கமான சில விடயங்களை பகிர்ந்து இப்பத்தியை நிறைவு செய்யலாம் என நினைக்கிறோம். குறித்த கட்டமைப்பானது பிரதானமாக இரு பிரிவுகளைக் கொண்டதாக அமைய முடியும். முதல் பிரிவு மூலோபாயத்திட்டமிடல் மற்றும் நடைமுறைப் படுத்தல் பிரிவு (Strategic Planning and Implementation). இப்பிரிவைப் பொறுத்தவரை இரு உப அலகுகளைக் கொண்டு அமையலாம். முதல் உப அலகு பொதுவான மூலோபாயத் திட்டமிடல்களில் கவனத்தைச் செலுத்தும் (அரசியல்,பொருளாதாரம்,கல்வி….). குறித்த துறைசார்ந்த புலமைத்துவவாதிகளைக் கொண்ட உப குழுக்களை (Standing committees) தேவைக்கேற்ப இப்பிரிவின் கீழ் நிறுவிக் கொள்ள முடியும். அடுத்த உப அலகு சகோதர சமூகத்துடனான உறவு , தேசம் சார்ந்த பொதுப்பிரச்சினைளுக்கான தீர்வுகள்,பங்களிப்புக்களில் கவனஞ்செலுத்தும். இவ்வலகு முஸ்லிம் சமூகத்தின் நாட்டுக்கான பங்களிப்பு , சகோதர சமூகங்களுடனான உறவு என்பவற்றில் கவனஞ்செலுத்தும்.
இரண்டாவது பிரிவு நெருக்கடி நிலைகளுக்கான பிரிவாக அமையலாம். (Crisis management Unit) இப்பிரிவின் கீழ் அவசரகால துலங்கள் நிலையம் (Emergency response unit) இயங்கும். நாட்டின் எப்பகுதியிலேனும் சடுதியாக ஏற்படும் கலவரங்கள்,அனர்த்தங்கள் தொடர்பில் மையத் தொடர்பாடல் வழிகாட்டும் புள்ளியாக (Central contact point for emergency and guidance) தொழிற்படும். சகல அவசரகால நிலைமைகளிலும் உடனடி தொடர்பாடலும் வழிகாட்டலும் இந்நிலையத்துடன் வரையறுக்கப்படும். அத்துடன் முஸ்லிம் சமூகம் சார்ந்த பொதுவான புள்ளி விபரங்கள்,நெருக்கடி நிலை தொடர்பான முறையான ஆவணப்படுத்தல்களும் இப்பிரிவின் கீழ் உள்ளடக்கப்படலாம்.
தேசிய சூறா மத்திய சூராவையும், பிராந்திய , கிராம மட்டம் வரையான சூறாக்களையும் கொண்டிருக்கும். மேற்குறித்த அலகுகள் மூலோபாய திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மத்திய பிராந்திய, கிராம மட்ட சூராக்களின் பங்கேற்புடனும் ஒத்துழைப்புடனும் முன்மொழிவுகளை தயாரித்து இறுதியாக குறித்த சூறாசபைகளின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தும்.மொத்த முகாமைத்துவம் மத்திய சூறாவின் கூட்டு தலைமைத்துவத்தின் கீழ் அமையும். இதற்கேற்ப தேசிய சூறா சபை கட்டமைப்பு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
மேற்குறித்த பகிர்வு ஒரு முன்குறிப்பேயாகும். ஆரோக்கியமான கருத்துக்களுடன் மிகச் சிறந்த கட்டமைப்புடன் தேசிய சூறாவை உருவாக்க பாடுபடும் இடைக்கால சூறா சபை அங்கத்தவர்களுக்கு உளமார்ந்த நன்றிகளை இங்கு கூற கடமைப்பட்டுள்ளதுடன் இப்பணியை சாத்தியமாக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்பாளிப்பானாக!
Post a Comment