கல்விக் கூடாக சமூக மேம்பாடு
S.L.MOHAMMED IMTHIYAZ (NALEEMI)
சவால் நிறைந்த இன்றைய நவீன காலத்தில் சமூக மேம்பாடு குறித்து பல்வேறு கோணங்களில் ஆராயப்படுகின்றது. சமூக உளவியல் மூலமாக, சமூக மேம்பாட்டுக்கு தடையாக அமையும் காரணிகள், பிறள்வான நடத்தைகளுக்கான காரணிகள் பற்றி ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனடியாக சமூக மேம்பாடு, சமூக மறுமலர்ச்சி, சமூக மாற்றம் என்பன சமகால பேசுபொருளாகப் பரிணமித்துள்ளன.
சவால் நிறைந்த இன்றைய நவீன காலத்தில் சமூக மேம்பாடு குறித்து பல்வேறு கோணங்களில் ஆராயப்படுகின்றது. சமூக உளவியல் மூலமாக, சமூக மேம்பாட்டுக்கு தடையாக அமையும் காரணிகள், பிறள்வான நடத்தைகளுக்கான காரணிகள் பற்றி ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனடியாக சமூக மேம்பாடு, சமூக மறுமலர்ச்சி, சமூக மாற்றம் என்பன சமகால பேசுபொருளாகப் பரிணமித்துள்ளன.
குறிப்பிட்ட சமூகமொன்று மேம்பட்டது என்பதற்கு அச்சமூகத்தின் நவீன உளப்பாங்குகள், விழுமியங்கள், நம்பிக்கைகள் அடிப்படையான மனிதத் தேவைகளின் வளர்ச்சி போன்ற காரணிகளிலேயே தங்கியுள்ளது. இவ்வுயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பிரதான பங்குவகிக்கும் காரணிகளாக தனிமனித, குடும்ப மேம்பாடு மாத்திரமின்றி பொருளாதார அரசியல், கல்வி, கலை, பண்பாட்டு அம்சங்களையும் குறிப்பிட முடியும்.
உண்மையில் சமூக சீர்திருத்தத்திற்கான, சமூக மேம்பாட்டிற்கான வழிமுறைகள், அடிப்படைப் போதனைகள் அல்குர்ஆனிலே நிரம்பிக்காணப்படுகின்றன. ஏனெனில் அல்குர்ஆன் சமூக மேம்பாட்டை மையப்படுத்தியே அருளப்பட்டது. சீரிய சமூக உருவாக்கமே அதன் இலக்காகக் காணப்படுகின்றது. 'ஒரு சமூகத்திலுள்ள மனிதர்கள் தம் உள்ளங்களில் உள்ளவற்றை மாற்றாதவரை நிச்சயமாக அல்லாஹ்வும் அச்சமூகத்திலுள்ள நிலைகளை மாற்றுவதில்லை' (ஸூறா அர்ரஃத்)
இதேபோன்று அல்குர்ஆன் போதனைகளின் செயலுருவாகத் திகழ்ந்த இறுதித்தூதால் முஹம்மத்(ஸல்) அவர்களின் போதனைகளும், முன்மாதிரிகளும்; முழுக்கமுழுக்க சமூக மேம்பாட்டை மையப்படுத்தியதாகவே அமையப்பெற்றன. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட பள்ளிவாயல்கள் வெறுமனே வணக்கவழிபாடுகளை நிறைவேற்றும் தளமாக மாத்திரம் செயற்படாது கல்விக் கூடங்களாகவும் அரசியல் திட்டமிடல்ப் பணிமனைகளாகவும் பண்பாட்டு அம்சங்களின் பயிற்சிக் களமாகவும் காணப்பட்டது. குலபாஉர் ராஷிதீன்கள் காலத்திலும் மஸ்ஜிதுகள் இதே நிலையினை வகித்தது.
இவ்வாறு உன்னத சமூகமாக மேம்பட்டிருந்த இஸ்லாமிய சமூகம் வீழ்ச்சி பெற்றதையடுத்து அவ்வப்போது சீர்திருத்த வாதிகள் தோற்றம் பெற்றனர். அவர்கள் அல்குர்ஆன் ஸூன்னாவை ஆதாரமாகக் கொண்டு சமூக மேம்பாட்டிற்கான வழிமுறைகளை வகுத்தனர். இவ்வாறு நவீனகால இஸ்லாமிய எழுச்சி தனிமனிதர்களது சிந்தனைகளால் தோற்றம் பெற்று சிறிது காலத்தில் இயக்க வடிவினதாக ஆரம்பித்தது. இதேபோன்று எமது பண்டைய முஸ்லிம்களும் இலங்கை சமூகத்தின் மேம்பாட்டிற்காக பலவழிகளிலும் தமது பங்களிப்புக்களை வழங்கியுள்ளமை இலங்கை வரலாற் நிதர்சனமாக நின்று நோக்கும் போது புரிந்து கொள்ள முடியும். அரசியல், கலை, கலாசார, பொருளாதார அம்சங்களில் அபரிமிதமான பங்களிப்புக்களை நல்கியுள்ளனர்.
வரலாற்றாய்வாளரான கலாநிதி ஆர்.வீ மோகன் இவ்வாறு குறிப்பிடுகின்றார் 'இலங்கை முஸ்லிம்களுக்கு நியாயமான ஒரு கடந்தகால வரலாறு இந்நாட்டில் அவர்களுக்கு உண்டு. இவர்கள் இத்;தீவிலிருந்து சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வில் மெச்சத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்'
‘புராதன காலத்திலேயே இந்நாட்டின் வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் ஆழமான தனியுரிமையை முஸ்லிம்கள் கொண்டிருந்தனர்’ என ஆய்வாளர் சேர். எமர்சன் தனது வரலாற்று நூலில் குறிப்பிடும் கருத்து இங்கு நோக்கத்தக்கது.
இவ்வாறு அரசியல், பொருளாதார, பண்பாட்டு அம்சங்களில் தமது நாட்டிற்கு கணிசமான பங்களிப்பை நல்கிய போதும் பிற்பட்டகாலங்களில் தனது சமூக மேம்பாட்டில் போதியளவு கவனமும் பிரயத்தனமும் மேற்கொள்ளவில்லை என்பதனை அண்மைக்கால சமூக செல்நெறிகள் தத்ரூபமாக விளக்குகின்றன.
சிறுபான்மை சமூகம் என்ற காரணம் ஒருபுறம் இருப்பினும் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் நாம் பின்நிற்கின்றோம்.
இந்நாட்டில் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்திய நாம்.... அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்த நாம்... சுகாதாரத்தைக் கற்றுக் கொடுத்த நாம்... கலாசாரப் பண்பாட்டு அம்சங்களில் முன்மாதிரியாக இருந்த நாம்...
இன்று சகல துறைகளிலும் சரிந்து கிடக்கின்றோம் என்ற கசப்பான உண்மையை ஜீரணித்துத்தானாகவேண்டும். இவற்றின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கெல்லாம் அடிப்படைக்காரணமாக, பிரதான சக்தியாக விளங்குவது கல்விரீதியாக நாம் பின்னடைந்தது மாத்திரமின்றி இன்னும் கல்வியைக் கூறுபோட்டு பிரித்து, வினயமற்ற சமூகமாக செயற்பட்டமையே என்பது இருகருத்துக்கு இடமிருக்காது.
உண்மையில் சமூக மேம்பாட்டுக்கு கல்வியின் வகிபங்கு அழப்பெரியது. ஒரு சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானங்களைத் தீர்மானிப்பதும் அவற்றின் நகர்வை உத்தரவாதப்படுத்துவதும் கல்வியேயாகும் 'சமூக முன்னேற்றத்தினையும் சீர்திருத்தத்தினையும் ஏற்படுத்தக் கல்வியை வாலிபர்கள் வயோதிபர்கள் என்ற வேறுபாடின்றி சமூக உறுப்பினர் அனைவருக்கும் வழங்குவது மிக அவசியம்' (எம்.சி சித்திலெப்பை)
1940ம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி முஸ்லிம் கல்விச்சகாய அங்குரார்ப்பண உரையில் அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். 'கல்வியில் மிகவும் பின்தங்கியிருக்கின்ற எமது சமூகத்தின் சிறுவரும் சிறுமியரும் வளர்ந்தோரும் கல்வி பெறுவதற்கான திட்டவட்டமான பரந்த வாய்ப்புக்களை வழங்குவது எமது அவசியத் தேவைகளில் முதன்மையாது. எமது குழந்தைகள் ஆரம்ப இடைநிலை உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழக சமயக் கல்வியைப் பெறுவதற்கான சகல ஏற்பாடுகளையும் நாம் வழங்க வேண்டும்.'
இப்பின்புலத்திலிருந்து நோக்கும் போது கல்வியானது ஏன் இத்தகைய கண்கொண்டு நோக்கப்படுகின்றது. இவ்வளவு தூரம் முன்னுரிமைப்படுத்தப்படுகின்றது என்பதற்கு அளிக்கக் கூடிய நியாயங்களும், காரணங்களும் கணக்கிடமுடியாதவை. இச்சந்தர்ப்பத்தில் மேற்படி எமது சமூகத்தின் கல்வியல் எத்தகைய தரத்தில் காணப்படுகின்றது. அதனால் எமது சமூகத்தின் மேம்பாடு எவ்வாறு பாதிப்படைந்துள்ளது போன்ற விடயத்தினையும் இங்கு சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.
இன்று இலங்கையில் சுமார் 9662 பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் 801 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. தற்போதைய முஸ்லிம் பாடசாலைகளின் ஆரம்ப, இடைநிலைக் கல்வியின் அடைவுகள் திருப்திகரமானதாக இல்லை. குறிப்பாக 'ஸாகிறாக் கல்லூரியின் கடந்தகால அடைவுகள் அதிருப்தியான முடிவுகளையே ஏற்படுத்துகின்றது'.
ஒரு சமூகத்தின் பொருளாதார, பண்பாட்டுத் துறை மேம்பாட்டில் பல்கலைக்கழகக் கல்வியும் பட்டமேற்கல்வியும், துறைசார் நிபுணத்துவமும் இன்றியமையாதது. இக்குறிப்பிட்ட புலங்களுக்கான தகைமை O/L , A/L பரீட்சைப் பெறுபேறுகளை வைத்தே தீர்மானிக்கப்படும் கல்வியல் முறையே எமது நாட்டில் நிலவுகின்றது. எனவே எந்த சமூகம் தமது பாடசாலைக் கல்வியில் தவறிளைக்குமே, அது அதன் அடுத்தகட்ட கல்வி மேம்பாட்டைப் பாதிக்கும் என்பது மறக்கமுடியாத உண்மை
மறுபக்கத்தால் எமது நாட்டில் காணப்படும் பாரம்பரிய அரபு மத்ரஸாக்களில் பலவற்றில் இன்னும் பொதுக் கல்வியைப் பெறுவதற்கு அனுமதிக்கப்படாதநிலை காணப்படுகின்றது. இதனால் சமூக மேம்பாட்டிற்கு வித்திடக்கூடிய எவ்வித ஆக்கபூர்வமான பணிகளையும் முன்னெடுக்கவோ, சமூகத்துக்கு தலைமைத்துவத்தை வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சமூகத்தின் அனைத்து மட்டங்களிலுமுள்ள தனிநபர்கள் இந்த விடயத்தில் அதீத கவனம் செலுத்தவேண்டும். சுயநலத்துக்கு அப்பால் சென்று பொது நலத்துக்காக சேவையாற்றும் அல்லாஹ்வின் திருப்திக்காக பணியாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எம்மிலிருந்து உருவாக வேண்டும். சிறந்த ஆழுமைமிக்க, தார்மீக கடப்பாடு கொண்ட அரசியல் தலைமைகள் எம்மிலிருந்து உருவாக வேண்டும்.
‘'இஸ்லாம் அந்நியமானதாகவே தோன்றியது. மீண்டும் ஒருமுறை அது அந்நியமானதாக மாறும். யார் அந்நேரத்தில் மக்கள் மத்தியில் சீர்திருத்தப்பணியை மேற்கொள்கின்றனரோ அவர்கட்கு நன்மாராயம் உண்டாகட்டும்’’. (அல் ஹதீஸ்)
Post a Comment