மனித உரிமைகளுக்கான பிரதிநிதிகளுடன் நீதியமைச்சர் ஹக்கீம் சந்திப்பு
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், மனித உரிமைகளை பேணுவதிலும் உரிய கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறினார்.
பாராளுமன்ற ஒன்றியங்களின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதிகள் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் நீதியமைச்சர் ஹக்கீமை புதன்கிழமை (10) முற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைவரம் குறித்து வினவிய போதே அவர் இவற்றைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற ஒன்றியங்களின் மனித உரிமைகளுக்கான பிரதி தலைவர் செனட்டர் ஜூஆன் பப்லோ லெடிலியர், அவ்வமைப்பின் மற்றுமொரு உறுப்பினரான செனட்டர் பிரான்ஸிஸ் பங்கிலினன் ஆகியோர் உட்பட்ட குழுவினர் இதில் கலந்து கொண்டு, உரிய விளக்கங்களை பெறுவதற்காக அமைச்சரிடம் சில கேள்விகளை எழுப்பினர்.
யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களாகியும் நாட்டின் மனித உரிமைகள் விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எவற்றையும் காண முடியாதிருப்பதாகக் கூறப்பட்ட போது பதிலளித்த அமைச்சர், மூன்று தசாப்த காலமாக நீடித்த போர் ஓய்ந்துவிட்ட போதிலும். அதனால் பாதிப்புக்குள்ளான நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் சகஜ நிலையும், இயல்பு வாழ்க்கையும் படிப்படியாக ஏற்பட்டு வருவதால் இயன்றவரை மக்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தி, அவர்களின் உரிமைகளை பேணுவதில் கவனம் செலுத்தப்படுகின்றது என்றார்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டும் விடயம் தொடர்பிலும் அவர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, அந்த விடயத்தில் பொறுப்புக் கூற வேண்டிய பொலிஸாருக்கு உரிய பயிற்சி வழங்குவதிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார். சிறைக் கைதிகள் தொடர்பிலும், காணாமல் போனோர் தொடர்பிலும் தகவல்களை அறிந்து கொள்வதிலும் இக் குழுவினர் அதிக ஆர்வம் செலுத்தினர்.
பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சியமளிப்போரையும் பாதுகாப்பதற்கான ஒரு சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் ஊடாக, அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமல் நீதிமன்றங்களில் தமது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்கு வழக்காளிகளுக்கும், சாட்சிகளுக்கும் வாய்ப்புகளும், வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அவ்வாறே, அவர் தொலைதூரத்தில் வேறு இடங்களில் இருந்து கெமராவில் தோன்றி வழக்குகளில் சாட்சியமளிப்போரை நெறிப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை இந் நாட்டு நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்துவது பற்றியும் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
Post a Comment