இம்முறை பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு..!
2012/2013 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழத்திற்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களுக்கு முக்கியமான சிலவிடயங்களை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
சில மாணவர்கள் போதிய பெறுபேறுகளோடு அனுமதிக்காக விண்ணப்பிக்கத் தயாராக இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களுடைய இசட் புள்ளியின் மூலம் அவர்களுடைய அனுமதியை உறுதிப்படுத்தலாம். இருந்த போதிலும் சில மாணவர்கள் தங்களது பெறுபேறு போதியதாக இல்லை. தாங்கள் பல்கலைக்கு விண்ணப்பிக்கலாமா? எவ்வாறான துறைகளுக்கு அல்லது பாடநெறிகளுக்கு விண்ணப்பிப்பது? தங்களுடைய இசட் புள்ளி போதுமானதாக அமையுமா என சந்தேகத்தில் விண்ணப்பிக்காதவர்களும் உண்டு.
சில மாணவர்கள் அனுமதிக்குரிய தகுதிகளைக் கொண்டிருந்தும் எவ்வாறு விண்ணப்பத்தை பூரனப்படுத்துவது என்று தெரியாமலும், தெரிவுகளை முறைப்படி பூரணப்படுத்தாமலும் பல்கலைக்கழக அனுமதிக்குரிய சந்தர்ப்பத்தினை தவறவிடுகின்றனர். சில மாணவர்கள் தங்கள் துறையை எவ்வாறு தெரிவு செய்வது என்று தெரியாமலும் தமக்கு சம்பந்தம் அற்ற பாடநெறிகளுக்கு விண்ணப்பித்து இறுதியில் மனவேதனை அடைகின்றனர்.
ஆகவே முதலில் மாணவர்கள் தங்களுக்குரிய விண்ணப்பம் அடங்கிய கையேட்டினை முழுமையாக வாசித்து விளங்கிக் கொள்வது முக்கியமாகும். அத்தோடு தமது விபரங்களை தெளிவாகவும், உண்மையாகவும் பூரணப்படுத்தல் வேண்டும். பின்னர் தமது துறைக்குரிய கற்கைநெறிகளைப் பூரணமாக வேறாக்கி கொள்ள வேண்டும்.
உதாராணமாக கலைப்பிரிவில் கற்ற மாணவராயின் தான் எந்த எந்த பல்கலைக்கழகங்களுக்கு எந்த கற்கைநெறிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க முடியுமோ அவற்றை வேறுபடுத்தி எடுத்தல் வேண்டும். அவை தனித்தனியே கையேட்டில் காணப்படுகின்றன. இப்போது உங்களுக்குரிய தெரிவுகள் மாத்திரம் உங்களிடம் உள்ளன. அவற்றில் சில கற்கைநெறிகள் உளச்சார்புப் பரீட்சையினைக் கொண்டவையாகவும் அமையலாம். இப்போது நீங்கள் தெரிவு செய்ய விரும்பும் கற்கைநெறிகளை மாத்திரம் அவற்றிலிருந்து வேறுபடுத்துங்கள்.
இவற்றில் கடந்த காலங்களில் அக்கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் அக்கையேட்டிலேயே காணப்படும். அவற்றையும் கற்கை நெறிகளோடு சேர்த்து இணையுங்கள். அதாவது குறித்த கற்கை நெறிகளுக்கு உரிய வெட்டுப்புள்ளிகளை முறையாக எழுதிய பின்னர் அவற்றை ஏறு வரிசைப்படுத்திப் பாருங்கள். இப்போது வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் அவை ஒரு ஒழுங்கு முறையில் காணப்படும். எனவே எந்த கற்கை நெறிகளை நாம் தெரிவு செய்யலாம், எவற்றுக்கு நமது இசட்புள்ளி போதுமானதாக இருக்கும் என்பதை இப்போது இலகுவாக காணாலாம்.
உமது கணணிதரவுப் பத்திரத்தை போட்டோகோப்பி செய்து அதில் நீங்கள் உமது தெரிவுகளை ஒருமுறை இட்டுப்பார்த்த பின்னர் உண்மையான தரவுப்பத்திரத்தில் பூரணப்படுத்துவது சிறந்தது. அத்தோடு இசட் புள்ளி அடிப்படையில் இறங்கு வரிசையில் தெரிவுகளை பூரனப்படுத்துவது நன்று. நமக்கு கிடைக்கும் என்றும் நம்பும் கற்கை நெறிகளை இரண்டாம் மூன்றாம் தெரிவுகளாகவும், கிடைக்குமோ இல்லையோ என்று சந்தேகப்படும் கற்கை நெறிகளை முதலாம் தெரிவுகளாகவும் இடவேண்டும்.
அத்தோடு முக்கியமாக உளச்சார்புப் பரீட்சை மூலம் சில கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இதில் மாணவர்களின் பெறுபேறு மட்டுமன்றி உளச்சார்புப் பரீட்சையின் புள்ளியும் முக்கியமான ஒன்று. சிறந்த பெறுபேறு உடைய மாணவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைய தவறுவதால் குறைந்த பெறுபேறு கொண்ட மாணவர்களுக்கு இந்த கற்கை நெறிக்கான வாய்ப்பு கிடைக்கின்றது.
எனவே மாணவர்கள் இவ்வாறன கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் பொது பரீட்சை தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும். குறித்த பல்கலைக்கழகம் பரீட்சை தொடர்பான அறிவித்தலை பத்திரிகைகள் மூலம் வெளியிடும். எனவே அதன் பின்னர் நாம் அந்தப் பரீட்சைக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பரீட்சைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் விண்ணப்பங்கள் அக்கற்கை நெறிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே பரீட்சை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
இருந்த போதிலும் மாணவர்கள் ஆசிரிய துணையோடு அல்லது பல்கலைக்கழகங்களில் கல்விக்கற்கும் மாணவர்களின் துணையோடு விண்ணப்பத்தைப் பூரணப்படுத்துவது முக்கியமான ஒன்றாகும்.
Post a Comment