யாழ்ப்பாண - கிளிநொச்சி முஸ்லிம்களும், வடமாகாண சபை தேர்தலும்
ஏ.எம். அப்துல் மலிக் (மௌலவி)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ்
எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு குறிப்பிட்ட வாழ்வை தந்து அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து நபி(ஸல்) அவர்களின் வாழ்கைப்படி வாழ்வதற்குறிய ஏற்பாட்டை செய்துதந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.
எமது ஒவ்வொருநிமிட மூச்சும் சுவனப்பாதையை நோக்கி நகர வேண்டும் எமது இறுதி மூச்சுவரை கலிமாவுடன் வாழ்ந்து எம்மையும் எமது குடும்பத்தையும் எமது சமூகத்தையும் வாழ வழி செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் கொள்கையில் உறுதியுடன் வாழ்ந்து ஏனைய சமூகங்களுடன் முன்மாதிரியுடன் திகழ்ந்து அவர்களையும் மேலான தீனில் இனைக்க வேண்டியவர்களாய் உள்ளோம். எமது அமல்கள் யாவற்றையும் இஃலாஸூடன் செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய வேண்டும். எமது இறுதி முடிவை நல்லமுடிவாக்கி தந்தருள்வானாக. 'ஆமீன்'
இவ்வாறான தூய்மையான வாழ்வை வாழ வேண்டிய சமூகம் இன்று ஒவ்வொருவரின் சுயவிருப்புக்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் எமது சமூகத்தை பலிக்காடாக்கியுள்ளனர். எமது சமூகத்தின் பூர்வீக இருப்பையும் வாழ்விடவசதியையும் சொந்தலாபத்திற்காக வேண்டி எம்மை அடகு வைத்துள்ளார்கள் 20 வருட யுத்தத்தினால் எமது பூர்வீக இருப்பையும் எமது வாழ்விடத்தையும் இல்லாமல் செய்த பாசிசவிடுதலைப்புலிகளும் அவற்றுள் எமது சமூகத்தலைமை ஏற்று வழிநடத்துபவர்களும் காரணமாக உள்ளார்கள். இதன் விளிம்பில் இருந்து மீளமுடியாத சூழலில் எமது சமூகம் இருந்து வந்தது.
இந்த நிலையில் மீண்டும் எமது தாய்மண்ணில் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தும் எமது இழப்புக்களையும், பொருளாதார வாழ்வாதார வசதிகளையும், பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளோம்! எமது நிலை இலங்கையின் எந்த வகுப்பாறுக்கும் ஏற்படாத நிலையாகும். அரச தரப்பில் இருந்து கிடைக்க வேண்டிய உதவி உபகாரங்கள் திட்டமிட்ட அடிப்படையில் இன்று வரை கிடைக்காமலே! இருட்டடிப்புகளும், இழுத்தடிப்புகளும் நடை பெறுகின்றது. இது கதைக்கப்படுவதை தவிர காரியங்களாக செயல்படுவதில்லை. இன்நிலையில் பலகட்சிகள் இருந்தும், பல முக்கிய உறுப்பினர் இருந்தும், பலமுக்கிய இணைப்பாளர்கள் இருந்தும், பல அமைப்புகள் இருந்தும் தங்களுடைய பதவிப்பட்டங்களுக்காக வேண்டி நான் பெரியவன் நீ பெரியவன்! என்ற மமதையில் போட்டி போடுகின்றனர் தவிர வேறொன்றுமில்லை.
ஆனால் மக்களோ! கவனிப்பார் இன்றி, வழிப்படுத்தல் இன்றி, அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாய் அங்கலாய்கின்றனர். என்ன செய்வது என்று தெரியாது பதிவுகளை மேற்கொள்வதும், அதனை வெட்டுவதுமாய் உள்ளனர்;. இவர்கள் தான் என்ன செய்யமுடியும் வாழ்வாதார வசதி கிடைக்கவில்லை, இழப்பீடு கிடைக்கவில்லை, இருப்பிடவசதியும்மில்லை, தொழில் பிரச்சினை, குடும்பம், பொருளாதார சூழல், வாழ்விட பிரச்சினை போன்றவற்றின் காரணமாக நிரந்தரம் அற்ற பிரஜையாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாழ்ந்து வருகின்றனர் இவ்வாரான நிலை ஒரு சமூகத்தின் விடியலுக்கு அமையாது. அந்த சமூகத்தின் இழிவடையும் நிலைமையை கோடிட்டுக் காட்டுகின்றது.
அற்பசொற் சலுகைகளும் ஒரு சில சில்லறை உதவிகளும் எமது சமூகத்தின் விடிவுக்காக வழியாகாது. இதுவல்ல சமூகத்தின் தேவை! இன்று எமது சமூகத்தில் தடிஎடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்காரர்களாய்மாரியுள்ளனர். இவ்வாறு போனால் எமது சமூகம் சமூகத்தின் இறுப்பு இல்லாமல் போய்விடும். எனவே இவ்வாறான சூழலில் எமது வடமாகான சபை தேர்தல் வந்துள்ளது. இதில் எமது பங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்று காத்திரமாகவும் பக்குவமாகவும் நாம் நடக்க வேண்டியுள்ளது நாம் கடந்து வந்தபாதைகள் ஏராளம் உள்ளன அதில் ஏராளமான பாடங்களை கற்று உணர்ந்துள்ளோம்!
* இந்த வகையில் ஒவ்வொரு கட்சிகளும் எம் சமூகத்திற்கு செய்த சேவைகள் என்ன?
*கட்சி உறுப்பினர்கள் தங்களின் சமூகத்தின் விடியளுக்கு ஆற்றிய சேவைகள் என்ன?
*ஒவ்வொரு அமைப்புகளின் மீள்குடியேற்ற பங்களிப்பு என்ன?
யாழ்.கிளி சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் காத்திரமான வளர்ச்சிப் போக்க என்ன?
* வழங்கப்பட்ட அரச நியமனங்களின் யாழ்ஃகிளி மாவட்டங்களின் தொகை என்ன.? (அண்மையில் வழங்கப்பட்ட அரச சிற்றூழியர், உதவியாளர் 504 வழங்கப்பட்டது இதில் எத்தனை முஸ்லிம்கள்?)
* பல கட்சிகள் இருந்தும் பல அமைப்புகள் இருந்தும் பல இனைப்பாளர் இருந்தும்பல உயர்பதவிகள் இருந்தும் இவர்களினால் சாதித்ததுதான் என்ன.
* வீட்டுத்திட்டத்தின் நிலைதான் என்ன?
* காணி இல்லாதவர்களின் நிலைதான் என்ன?
இவ்வாறான தூர நோக்கற்ற திட்டமிடல் அற்ற சுயநல போக்கான சமூகத்தை விற்றுபிழைக்கும் அரசியலே! இன்று தலைவிரித்து ஆடுகின்றது. இப்போது புரிவீர்கள் யார் யார் எம்பட்டியலில் உள்ளார்கள் என்று
இன்று மக்கள் இருபிரிவினர்களாக அங்கும் இங்கும் வாழ்கின்றனர் அவர்களை வழிப்படுத்தி சீர் அமைத்து கொடுக்க வேண்டியது புத்திஜீவிகளினதும் உலமாக்களினதும் தனவந்தர்களினதும் சமூக நலன் விரும்பிகளினதும், இதயசுத்தியுடன் இயங்கும் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களின் கடமையாகும்.
ஆகவே! கட்சி இஸ்தாபகர்களே! உறுப்பினர்களே! தலைவர்களே! இனைப்பாளர்களே! உங்களுக்கு என்று ஒரு கொள்கை, கோட்பாடு இருக்கலாம் அது தீனுடைய நோக்கமாகவும் வழியாகவும் அமைந்தால் மற்றுமே வெற்றியளிக்கும் மாறாக இருந்தால் அது இன்று நல்லதாக தெரியும் நாளை அதன் பிரதிபலனை அனுபவிக்க வேண்டிவரும்
ஆட்சிக்காக வேண்டி அதிகார மோகத்துக்காக வேண்டி சமூகத்தை சீhழிக்க வேண்டாம் எமது சமூகத்தின் விடிவுக்காகவும், தூரநோக்கத்துக்காகவும் தீனுடைய அடிப்படையில் காத்திரமான நல்ல தீர்மானங்களை ஒற்றுமையுடன் செயல்படுத்தங்கள் பொருத்தமான அறிவுள்ள தூர நோக்கத்துடன் செயல்படக்கூடிய நபர்களை தெரிவு செய்ய ஒத்துழைப்பு வழங்குங்கள் நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பள்ளவர்கள் உங்களுடைய பொறுப்பைப் பற்றி பதில் செல்லியாக வேண்டும் எனவே! பொறுப்புக்கு தகுதியானவர்களை தெரிவு செய்யுங்கள் உறவுக்காக, பணத்துக்காக, பட்டத்துக்காக, வசதிவாய்ப்பிற்காக கட்சியை சார்ந்தவன் என்று பாராமல் பொது நோக்குடன் பொருத்தமான நபர்களை ஒற்றுமையாக முதன்நிலைப் படுத்துங்கள். அல்லாஹ் கூறுகின்றான் ஒற்றுமை என்னும் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள். (அல்குர்ஆன்)
அல்லாஹ் நம்முடைய யாவருடைய செயல்பாட்டை பொருந்திக் கொள்வானாக ஆமீன்.
அபுதர் (றழி) கேட்கின்ன்றார் எனக்கு தலைமைப் பதவி தாருங்கள் என்று நபி (ஸல்) சொன்னார்கள் நீர் இரண்டு பேருக்கும் தலைமை தாங்க தகுதியற்றவர் என்று கூறினார்கள்!
இதன் அடிப்படையில் இருந்தும் யாம் பெரும்பாடம் என்ன
'அல்லாஹ்வுடன் தொடர்பு இல்லாத தலைமைகள்'
'ஹலால் ஹராம் பேணுதல் இல்லாத தலைமைகள்'
'பண்பாட்டு ஒழுக்கம் இல்லாத தலைமைகள்'
'சுய நல போக்குள்ள தலைமைகள்'
இவற்றின் எதிலும் அல்லாஹ்வின் உதவி இல்லை, வெற்றியும் இல்லை, பாதுகாப்பும் இல்லை, எனவே சிந்திப்போம்! நிதானமாய் செயல்படுவோம்! நம்முடைய அமானிதத்தை தகுதியானவர்களிடம் ஒப்படைத்து அல்லாஹ்வின் உதவியுடன் செயல்படுவோம். 'ஆமீன்'
யாழ் - கிளி. மாவட்ட முஸ்லிம்களின் கேள்விகள் இத்தனை இருக்கும்போது, எமது தலைவர்கள் எப்படித் தேர்தலில் தங்களை வெற்றியாளர்களாகக் காட்டிக் கொள்ளலாம்? அதனூடாக எதிர்காலத்தில் என்னென்ன வசதி வாய்ப்புக்களைப் பெறலாம் என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
ReplyDeleteஉண்மையில் மக்களின் வாக்குகளைக் கோர வரும் அரசியல்வாதி, கடந்த காலங்களில் நான் இன்னின்னவற்றைச் செய்திருக்கின்றேன்.. இன்னின்னவற்றைச் செய்வேன்.. எனது எதிர்கால அரசியல் நடவடிக்கை இப்படித்தான் இருக்கும்.. இதனை நான் மீறினால் எனக்கு வாக்களித்த நீங்கள் சட்ட நீதி மன்றங்களில் வழக்காடி எனது உறுப்புரிமையை நீக்குவதற்கும் உங்களுக்கு அதிகாரம் தருகிறேன் என்றெல்லாம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலமாக வாக்காளர்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.
இப்போது அப்படியில்லை. 'அ' கட்சி சார்பில் இன்ன ஹாஜியார் போட்டியிடுகின்றார். 'ஆ' கட்சி சார்பில் இந்தப் போடியாரை நிறுத்தியுள்ளோம். என அறிவித்து விட்டு வர்ணப் போஸ்டர்களையும், அலங்கார சோடனைகளையும், பிரம்மாண்டமான பிரச்சார மேடைகளையும் இலட்சக்கணக்கில் செலவு செய்து (பிரச்சாராம் அல்ல) விளம்பரம் செய்து வேட்பாளர்களை கட்சிகள் வெல்ல வைக்கின்றன.
இவ்வாறு பல இலட்சங்கள் செலவு செய்து வெற்றி பெறும் 'மக்கள் பிரதிநிதி', தான் செலவிட்ட லட்சங்களையும், தனக்காகச் செலவு செய்தவர்களின் லட்சங்களையும் தனது பதவிக் காலத்தில் தேடிக் கொள்வதற்காக பல கோடிகளை உழைத்துக் கொள்வதில்தான் கவனம் செலுத்துவாரே தவிர தனது சமூகத்தின் இலட்சியங்களைப் பற்றி நினைக்கவே அவருக்கு நேரமிருக்காது.
வாக்காளர்கள் ஏமாறுபவர்களாக இருக்கும் வரையில் ஏமாற்றும் அரசியல்வாதிகளையே நாம் நூறு வீதம் குற்றம் சொல்லவும் முடியாது.
ஏனெனில் அவன் அரசியலை சமூக சேவையாகக் கருதாமல் தனது தொழிலாகச் செய்ய வருகின்றான். அதனால் அவன் அரசியல் வியாபாரியே தவிர அரசியல் படித்து மக்களுக்கு விசுவாசமாகத் தொழிற்படும் அரசியலாளனாக ஒருபோதும் இருக்க முடியாது.
எனவே வாக்களிக்கும் மக்களான நாங்கள்தான் அரசியல்வாதியார்? அரசியல் வியாபாரி யார்? அரசியலாளன் யார்? என்பதைப் பற்றிச் சிந்தித்து இனங்கண்டு வாக்களிக்க வேண்டும்.
நாம் நமது வாக்குகள் மூலம் அளித்த அதிகாரங்கள்தான் நம்மை இந்தச் சீரழிவு வாழ்க்கைக்குத் தள்ளியுள்ளன என்பதை உணர வேண்டும்.
அரசியல் மேடைகளில் ஏறி நின்று மணிக்கணக்கில் எதிர்க்கட்சிக்காரணை பொங்கு தமிழில் விளாசித் தள்ளுபவன் அரசியல்வாதியல்ல. 'ஒரு டொன் பேசுவதை விட சில அவுன்சுகள் செய்பவனே அரசியலாளன்'
தலைவலிக்கு தலையணையை மாற்றிப் போடுவதில் பயனில்லை. அப்படியெல்லாம் மாற்றிப் போட்டும் பயனில்லை என அனுபவத்தால் உணர்ந்த நாம் முற்று முழுதாக ஒரு மாற்று சத்திர சிகிச்சை செய்தாவது நோயைக் குணப்படுத்தத் துணிய வேண்டும்.
வடக்கில் அரச தரப்பும், முஸ்லிம் தரப்புகளும் மாத்திரம் போட்டிக் களத்தில் இறங்கியிருக்கவில்லை. பெரும்பான்மையோரின் எதிர்பார்ப்பின்படி மாகாண ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அங்கு களத்தில் இறங்குகிறது.
அவர்களிடமும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்தும், அவர்களின் பார்வையில் முஸ்லிம்களை எவ்வாறு கையாளும் திட்டங்கள் உள்ளன என்பதையும் நீங்கள் பகிரங்கமாகக் கேட்க வேண்டும்.
'முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்' என்பது அரசியல் சாசன விதியல்ல. எனவே நமது வாக்கைக் கோரும் எவரிடமும் நாம் எமது பிரச்சினைகள் பற்றி கேள்வி எழுப்பி பதலளிக்குமாறு கோரலாம்.
'த.தே. கூட்டமைப்பு வட மாகாண ஆட்சியைக் கைப்பற்றினால் முஸ்லிம்களை மீண்டும் விரட்டுமா? அல்லது உள்வாங்குமா? உள்வாங்கினால் முஸ்லிம்களின் குடியிருப்பு, மீள்குடியேற்றம், புனருத்தாரணம், தொழில் வாயப்பு, வாழ்வாதாரம், இழப்பீடு போன்ற விடயங்களுக்கு என்ன தீர்வை வைத்துள்ளீர்கள்?' என்றெல்லாம் இவ்வாறான ஊடகங்கள் மூலம் மக்கள் கேள்வியெழுப்பி விடைகளைப் பெறுவதோடு அவற்றையெல்லாம் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உள்ளடக்கக் கோரி வலியுறுத்தலாம்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-