மௌலவி சலாஹுத்தினின் மறைவுக்கு ரவூப் ஹக்கீம் அனுதாபம்
தலைசிறந்த இஸ்லாமிய சன்மார்க்க அறிஞர் மௌலவி எச். சலாஹுத்தின் (பாரி) அவர்களின் மறைவு இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் பாரிய இழப்பாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கண்டி மௌலானா என கடல் கடந்த நாடுகளிலும் கூட கண்ணியமாக அழைக்கப்படும் மௌலவி சலாஹுத்தீன் இலங்கையின் முன்னணி சன்மார்க்க பிரசாரகர்களில் ஒருவராகவும், பன்னூல் ஆசிரியராகவும் விளங்கினார். அத்துடன் அரபு, உருது, தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் திறமை பெற்றிருந்தார். முஸ்லிம் நாடுகள் உட்பட பல உலக நாடுகளுக்குச் சென்று அவர் இஸ்லாமிய பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இறைவேதமான திருக்குர்ஆனை அதிகமாக ஓதுபவராகவும், அதன்பால் மக்களை அழைப்பவராகவும் அவர் காணப்பட்டார்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையை பலதடவைகள் அவர் நிறைவேற்றியுள்ளதோடு, புனித மக்காவிலும் புனித மதினாவிலும் இந் நாட்டு ஹஜ் யாத்திரிகர்கள் அநேகரை சரிவர நெறிப்படுத்திய ஒருவராகவும் அவர் திகழ்ந்தார்.
தனிப்பட்ட முறையில் எமது குடும்பத்தினருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. வடமத்திய மாகாணத்தில் கெக்கிராவை பிரதேசத்தில் எனது தகப்பனார் பாடசாலை அதிபராக கடமையாற்றிய காலத்தில் அவருடன் சேவையாற்றிய மௌலவி சலாஹுத்தீன், பின்னர் எனது திருமண நிகழ்வின் போது சாட்சியாகவும் கைச்சாத்திட்டார். அன்றைய தினம் மாலையில் கொழும்பில் நடைபெற்ற எனது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அன்று நண்பகல் கண்டியில் தமது மகன் முஸ்லிம் சலாஹுதீனின் திருமணத்தை நடாத்தி வைத்த உடனேயே அவர் வந்து சிறப்பித்தது இன்று போல் எனது மனதில் நிழலாடுகின்றது.
கண்டி ஹனபி பள்ளிவாசல் பேஷ் இமாமாக நீண்ட காலம் பணியாற்றிய மௌலவி சலாஹுத்தீன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜும்ஆ குத்துபா பிரசகங்களை நிகழ்த்தியுள்ளதோடு, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினூடாக பெரிதும் பிரபல்யம் பெற்றிருந்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பிழைகளைப் பொறுத்து, ஜன்னதுல் பிர்தௌசுல் அஃலா என்ற மேலான சுவனபதியை அன்னாரின் நிரந்தர தங்குமிடமாக்கி அருள்வானாக. இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
Post a Comment