அமெரிக்க வைத்தியர்களும் தவறு விடுவார்கள்..!
மூளைச்சாவு அடைந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை டாக்டர்கள் எடுக்க முயன்றபோது, அந்த பெண் கண் திறந்தார். டாக்டர்களை அதிர்ச்சியடையச் செய்த இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. தவறாக சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் கால்லின் பர்ன்ஸ் (41). இவர் கடந்த 2009 அக்டோபரில் அதிகளவில் மருந்துகளை சாப்பிட்டதால் நினைவிழந்தார். நியூயார்க்கில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பர்ன்ஸ் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. அவர் சாப்பிட்ட மருந்தால் அவரது வயிறு, குடல் பகுதிகள் பாதிக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அவரது வயிற்றில் மருந்து தங்கியுள்ளதா என சோதனையிடவில்லை. மூளை செயல்படுகிறதா என்று ஸ்கேன் பரிசோதனை செய்யவில்லை. ஆனால், நீண்ட நாளாகியும் அவர் நினைவு திரும்பாததால், அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் முடிவெடுத்து விட்டனர்.
பர்ன்ஸ் கிட்டத்தட்ட இறந்து விட்டார் என்று அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் கூறவே, அவர்களும் பர்ன்ஸ் உயிரை காப்பாற்ற வைக்கப்பட்டிருந்த உபகரணங்களை அகற்ற சம்மதித்தனர். மேலும், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, பர்ன்ஸ் உறுப்புகளை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். உடலை வெட்டி உறுப்புகளை எடுப்பதற்கு முன் பர்ன்ஸுக்கு சில சோதனைகளை நர்ஸ் செய்தபோது அவரது உடலில் அசைவு தெரிந்தது. ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றபோது அவரது உதடு, நாக்கு அசைந்ததை அந்த நர்ஸ் பார்த்தார்.
ஆனால், நர்ஸ் கூறியதை டாக்டர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு முன் பர்ன்ஸுக்கு நரம்புகளை அமைதிப்படுத்தும் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக பர்ன்ஸ் திடீரென கண் விழித்தார். அவ்வளவு பேரும் ஆடிப் போய் விட்டனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதியானதால், மருத்துவமனைக்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையின் தரத்தை உறுதி செய்ய ஆலோசகரை நியமிக்கவும், மூளைச்சாவு அடைந்ததை கண்டுபிடிக்க நரம்பியல் நிபுணர் மூலம் தனது ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அந்த மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது.
Post a Comment