'இப்தார் நிகழ்வு இனங்களுக்கிடையில் ஒற்றுமையை அதிகரிக்கச் செய்யும்' கல்லூரி பீடாதிபதி ராஜேந்திரன்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
இலங்கையில் கிழக்கு மாகாணம் இன ஐக்கியத்தில் முன்னுதாரனமிக்க மாகாணமாக திகழ வேண்டுமென மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரியின் புதிய பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார். ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு ஜூம்மா பள்ளிவாயலான சிகரம் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சுமார் 100 பெரும்பாலான தமிழ் மக்களுடன் சுமார் 75முஸ்லிம் மக்களும் இணைந்து கலந்து கொண்ட தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு பேணும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை சிகரம் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
ஆதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை நாட்டுக்கு மட்டுமல்லாமல் முழு உலகத்திற்கும் இன ஒற்றுமையும் ஐக்கியமும் அவசியமாகும்.அவ்வாறான மனித குலத்திற்குத் தேவையான ஒற்றுமையை இஸ்லாம் மார்க்கம் மிக அழகாகவும் உன்னதமாகவும் வழங்கி வருகிறது.
இன்று முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியிலுள்ள மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவி வருகிறது. குறிப்பாக இலங்கையில் இன முறுகலை ஏற்படுத்தும் வண்ணம் மத கடும்போக்கு வாதிகளால் பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறான ஒரு காலகட்டத்தில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வண்ணம் இப்படியான இப்தார் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதானது மேலும் மேலும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை அதிகரிக்கச் செய்யும். இவ்வாறு சமயங்களுக்கு மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் நிகழ்வுகள் பள்ளிவாயல்களில் மட்டுமல்லாது இந்துக் கோயில்கள்,கிறிஸ்தவ தேவாலயங்கள்,பௌத்த விகாரைகள் என்பவற்றிலும் இடம்பெற வேண்டும்.
இப்படியான நிகழ்வுகள் இடம்பெறுவதனால் பல மதங்களைச் சேர்ந்தவர்களும் தமது அன்புகளை பரிமாறிக் கொள்ளல்,புரிந்துணர்வு,சாந்தி சமாதானம் உருவாதல் என்பவற்றிற்கு அடிப்படைத் தளமாக அமையும்.
ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் ஒற்றுமையை விரும்புவதைப் போல இந்து மதம் பஞ்சமாபாதம் மூலமும் பௌத்த மதம் ஏனையவர்களைக் கொள்ளக் கூடாது உள்ளிட்ட பிரதான போதனை உள்ளிட்ட போதனைகள் மூலமும் கிறிஸ்தவ மதம் தனது போதனைகள் மூலமும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் சகவாழ்வையும் விரும்பி வருகின்றன.
பொதுவாக கிழக்கு மாகாணம் என்பது பல சமயத்தவர்கள் செறிந்து வாழும் பகுதியாகும். நான் பீடாதிபதியாக இருக்கும் மட்டு தேசிய கல்வியற் கல்லூரியில் பல ஊர்களைச் சேர்ந்த பல மதங்களை பின்பற்றும் மாணவ மாணவிகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமையும் சமாதானமும் மற்றவர்களை புரிந்து நடக்க வேண்டும் எனும் பண்பும் அதிகமாக காணப்படுகின்றது.
ஆகவே மதத்தால்; நாம் வேறுபட்டவர்களாக இருந்தாலும் உணர்வுகளால் ஒற்றுமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் சிறப்பானதோர் சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment