Header Ads



தமிழ்பேசும் ஊடகவியலாளர்களுக்கு மடிகணனி வெறும் கற்பணையா அல்லது கனவா?

(JM.Hafeez)

ஊடகத்துறை அமைச்சினால் வழங்கப்ட்டுவரும் மடிகணனி விடயத்தில் கண்டி மாவட்ட தமிழ் பேசும் ஊடக வியலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக ஊடகவியலாளர்கள் பலர் கவலை தெரிவித்தனர்.

2012ம் ஆண்டு ஊடகவியலளர்களது நலன் கருதி மத்திய அரசினால் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் ஊடக வியலாளர்களுக்கான வரிச் சலுகை கொண்ட வாகனக் கொள்வனவு, தொழிற்துறை தொடர்பான உபகரணங்கள் கொள்வனவிற்கான கடன் வழங்குதல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு இவை ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதாகப் பலரும் தெரிவித்தனர். அதன்அடிப்படையில் 18 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து ஊடகத்துறையில ஈடுபட்டவர்களுக்கு வரிச் சலுகையுடனான வாகனக் கொள்வனவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சைகள் இடம் பெற்று அவை தற்போது முற்றுப் பெற்று விட்டன. அதனடிப்படையில் பலர் அச்சலுகையை பயன் படுத்த சந்தர்ப்பம் திறந்து விடப்பட்டுள்ளது. அது தொடர்பாக அவ்வாறு விண்ணப்பித்தவர்களும் விண்ணப்பிக்காதவர்களும் இது ஊடகத்துறைக்கு ஜனாதிபதியும் அரசும் வழங்கிய ஒரு கௌரவம் எனக்குறிப்பிட்டு அரசுக்கு நன்றி தெவிக்கப்பட்டது.

இவ்வாறு வாகனக் கொள்வனவுச் சலுகையைப் பெற ஆகக் குறைந்த தகைமைகளைக் கொண்ட பலர் தமக்கு வாகனம் தற்போதைக்கு அவசியமில்லை என்பதனால் அச்சலுகையை பெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே நேரம் அரசு பல மாவட்டங்களில் 2012ம் ஆண்டு பிரதேச ஊடக வியலாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக 'லெப்டொப்' மடிகணனிகளை வழங்கியது. கண்டி மாவட்ட ஊடக வியலாளர்களும் இதை எதிர் பார்த்திருந்தனர். அதனடிப்படையில் மத்திய மாகாண ஆளுநரினால் கண்டி மாவட்ட  ஊடக வியலாளர்களின் விபரங்கள் விண்ணப்பப் பத்திரம் ஒன்று மூலம் சேகரிக்கப்பட்டன. இதன்படி இந் நடவடிக்கையானது தமக்கு மடிகணனிகள் கிடைக்கும் என்பதை நம்பிக்கை யூட்டும் ஒரு நடவடிக்கையாக கருதினர். 

நிலைமை இப்படி இருக்க திடீரென ஒரு சிலருக்கு மட்டும் மடிகணனிகள் வழங்கப்படடிருந்தன. அது பற்றி மேலும் தேடிப்பார்த்தில் முழுவதும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது மட்டு மல்ல வழங்கப்பட்டமைக்கான எதுவித அடிப்படையும் தெரிய வில்லை. 

தற்போதும் கூட இயங்கிக் கொண்டிருக்கும் 40 வருட ஊடக சேவையை மேற்கொண்ட 80 வயது தாண்டிய மூத்த பத்தரிகையாளர்கள் கூட புறம் தள்ளப்பட்டிருந்தனர். ஆனால் ஐந்து வருடம் கூட ஊடகத் துறை அனுபவமற்றவர்கள் பலருக்கு வழங்கப்படிருந்தது. அது மட்டுமல்ல பிரதேச ஊடக வியலாளர்களுக்கா? ஊதியம் பெறும் அலுவளக ஊடக வியலாளருக்கா அல்லது அச்சு ஊடகவியலாளருக்கா? இலத்தரனியல் ஊடக வியலாளருக்கா? என்ற எந்தத் தெளிவோ அடிப்படையோ இன்றி இனம் என்ற ஒரு அடிப்படையில் மட்டும் வழங்ப்பட்டிருந்தது. இது பற்றி சிலரது கருத்தைக் கேட்டபோது ஆளுநரின் முறையான விண்ணப்பத்திற்கு எதுவித அங்கீகாரமுமின்றி யாரோ ஊடக அமைச்சருக்குத் தேவையானவர் அவரது நண்பர்கள் சிலருக்கு மட்டும் சிபாரிசு செய்திருக்கலாம் என அபிப்பிராயப்பட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் ஊடக வியலாளர்கள் சிலர் ஜனாதிபதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் போன்றவர்களுக்கு மேன் முறையீடுசெய்தனர். அதன் பிறகாரம் 2013ம் ஆண்டு வழங்குவதாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகப் பலர் கூறினர். 

அதனை அடுத்து மீண்டும் தேசிய பத்திரிகைகள் பலவற்றில் கண்டி மாவட்ட தமிழ் பேசும் ஊடக வியலாளர்கள் கௌரவிப்பு தொடர்பான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. அதன்படி கண்டிமாவட்டத்தில் சுமார் 15 பேரளவில் விண்ணப்பித்திருந்தனர். அது தொடர்பாக இணைப்பு அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஒருவரால் மேற்கொண்ட பரிசீலனையில்  தகவல் துறை அமைச்சின் அடையாள அட்டை இல்லாத ஒரு சிலரது விண்ணப்பம் நீக்கப்பட்டு விட்டதாகவும் மிகுதி 11 பேர் தகைமை பெற்றுள்ளதாகவும் அவர்களுக்கு இதனைப் பெற்றுத் தர முடியுமென்றும் இணைப்பாளர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 2013ம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் இதனை வழங்க உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஜூலை மாதம் 27ம் திகதி கண்டி வாவிக் கரையிலுள்ள 'சம்பத் ரெஸ்ட்டில்' இதனை வழங்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாகப் பறை சாற்றப்பட்டது. இலங்கை தகவல் துறை அமைச்சின் அடையாள அட்டையுள்ள சகலருக்கும் இவ்வாறான கௌரவிப்பு ஒன்றை வழங்க தகவல் ஊடகத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சிரின் தமிழ் மொழிக்கான இணைப்பாளர் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர்  நம்பிக்கை தெரிவித்தார். இதற்கான விண்ணப்பம் கோரியது முதற்கொண்டு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்ட கண்டியைச் சேர்ந்த மேற்படி தமிழ் அரசியல் பிரமுகரை தமிழ்-முஸ்லிம் ஊடக வியலாளர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். 

ஆனால் 2013ம் ஆண்டின் அரைப் பகுதியையும் கடந்து விட்ட போதும்; கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித் துவப் படுத்தும் கௌரவ ஊடகத்துறை அமைச்சரின்  தொகுதி தமிழ் மொழி பேசும் ஊடக வியலாளர்களுக்கு மட்டும் மடிகணனி வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுவருவதாக அவர்களில் பலர் கவலை தெரிவித்;து வருவது பற்றித் தெரிய வந்துள்ளது.

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சேவைபுரிந்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள் உற்பட மலையக தமிழ் பத்திரிகைத் துறையின் முன்னோடியானவர்கள் கூட புறம் தள்ளப்பட்டுள்ளனர். ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மடி கணனி ஊடக அமைச்சரின் தொகுதியிலுள்ள கண்டி தமிழ் பேசும் ஊடக வியலாளர்களுக்கு வெறும் கற்பணையா அல்லது கனவா? என அவர்கள் வினாத் தொடுத்துள்ளனர். 

1 comment:

  1. 'சமூகத்தின் கால் நாய்'களாகத் தொழிற்பட வேண்டிய ஊடகவியலாளர்களை, அரசுக்கு சங்கூதும் சேவகர்களாக மாற்றும் இத்தகைய "இனாம்" வழங்கல் மற்றும் "கௌரவிப்பு" போன்ற பொறிகளுக்குள் சிக்க வைக்காமல் இறைவன் பாதுகாப்பானாக!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.