உலகளவில் இலஞ்சம் வாங்குவதில் பொலிஸ்காரர்தான் முதலிடம்
உலக அளவில் நடைபெறும் லஞ்சம், ஊழல் விவகாரங்கள் அது குறித்த மக்கள் கருத்துக்களை கண்டறியும் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான நாடுகளில் காவல் துறை தான் லஞ்சம் வாங்குவதில் முன்னணியில் இருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் ஊழல் நடைபெறும் நாடுகள், அவற்றில் ஈடுபடும் அமைப்புகள், அது குறித்த மக்கள் கருத்துகளை திரட்டும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சர்வே ஒன்றை நடத்தியது. இதன் முடிவுகள் தி கார்டியன் இதழில் வெளியானது. இந்த ஆய்வில் வெளியான தகவல்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் அரசியல் கட்சிகள்தான் ஊழலுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது தெரியவந்துள்ளது.
அரசு துறைகளிலேயே லஞ்சம் வாங்குவதில் உலக அளவில் காவல் துறை தான் கொடி கட்டிப் பறக்கிறது என சர்வே அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் நீதித் துறை, பொதுத் துறை நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் உள்ளன. 107 நாடுகளில் 1 லட்சத்து 14 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வுகள் பல்வேறு மட்டங்களில் நடத்தப்பட்டது. ஊழலுக்கு முழு முதல் காரணம் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தான் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஊழலில் உலக அளவில் லைபீரியாவும், மங்கோலியாவும் முன்னணியில் உள்ளன. ஊழலுக்கு எதிரான மனநிலையில் டென்மார்க், ருவாண்டா, பின்லாந்து, சூடான், சுவிஸ் ஆகிய நாடுகள் உள்ளன. ஆய்வு நடத்தப்பட்ட 107 நாடுகளில் அஜர்பைஜான், தெற்கு சூடான், ருவாண்டா ஆகியவற்றில் மட்டுமே ஊழல் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது.
ஆய்வு நடத்தப்பட்டவர்களில் 27 சதவீதம் பேர் லஞ்சம், ஊழலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். காவல் துறை தான் மக்களிடம் நேரடியாக லஞ்சம் வாங்குவதாக பலர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் காங்கோ நாட்டு காவல் துறையில் 75 சதவீதம் பேர் லஞ்ச பணத்தில் திளைக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக கானா, இந்தோனேசியா, கென்யா, லைபீரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் காவல் துறையினர் அதிகமாக லஞ்சம் வாங்குகின்றனர்.
காவல் துறைக்கு அடுத்தபடியாக நிலச்சீர்த்திருத்துறை அதிக அளவில் லஞ்ச, ஊழலால் புரையோடி போய் உள்ளது. இந்த துறையில் ஆப்கானிஸ்தான், கம்போடியா, ஈராக், லைபீரியா, பாகிஸ்தான், சியோராலியோன் ஆகிய நாடுகளில் 35 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை ஊழல் நடக்கிறது. ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்ற மக்களின் நம்பிக்கை கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 72 சதவீதத்தில் இருந்து 67 சதவீதமாக சரிவடைந்துள்ளது என்கிறது அந்த அதிர்ச்சி சர்வே.
Post a Comment