கொழும்பு துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டில்..!
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள காணியில் 1.4 பில்லியன் டொலர் செலவில் 'நகர வளாகம்' ஒன்றை உருவாக்குவதற்கான உடன்படிக்கையில் சிறிலங்கா அரசு சீன நிறுவனம் ஒன்றுடன் கைச்சாத்திட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு தெற்கு புதிய துறைமுகத்திற்கு அடுத்ததாக உள்ள 230 ஹெக்ரேயர் நிலப்பரப்பரப்பை துறைமுக அதிகாரசபை பெற்றுக்கொண்டு அதில் சீன நிறுவனத்துக்கு முதலீட்டு வாய்ப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகரின் கரையோரத்தை நவீனமயப்படுத்தும் விதமாக சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் இந்த 'துறைமுக நகரை' உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியாத் பண்டு விக்ரம குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் தற்போது துறைமுகத்திற்கு அருகிலுள்ள நிலத்தை துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அங்கே சிறிய நகரம் ஒன்றை உருவாக்கவுள்ளோம்"
"இது தொடர்பில் சீன நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் செப்ரெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும். புதிய துறைமுக நகரத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிலத்தை மீள உரிமையாக்கும் நடவடிக்கை 39 மாதங்களுக்குள் நிறைவடைந்துவிடும் என நாம் நம்புகிறோம்" எனவும் விக்ரம மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய துறைமுக நகரத்தில் 22 மாடிகளைக் கொண்ட தலைமைப் பணியகங்கள், விடுதிகள், குடியிருப்புக்கள் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புக்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்திடம் 99 ஆண்டுக் குத்தகைக்கு 50 ஹெக்ரேயர் நிலங்கள் வழங்கப்படும் எனவும் சிறிலங்கா அரசின் கீழ் செயற்படும் துறைமுக அதிகார சபையின் தலைவர் விக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment