அதிகார துஷ்பிரயோகம் + ஊழல் - சீனாவின் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை
அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் சீன முன்னாள் ரயில்வே அமைச்சர் லியு சிகிஜுனுக்கு (60) மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அவர் கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு ஊழல், முறைகேடுகள் மூலம் ரூ.63 கோடி பெற்றுள்ளார். அதிகாரத்தை பல வழிகளில் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன.
மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் அது நிறைவேற்றப்படும். தனது குற்றங்களை லியு சிகிஜூன் ஒப்புக் கொண்டதால், தண்டனையை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆண்டுகளில் அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். அதன் அடிப்படையில் நீதிமன்றம் தனது தீர்ப்பை மாற்ற வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் அவரது சொத்துகளை பறிமுதல் செய்வதற்கும், அரசியல் சார்ந்த அடிப்படை உரிமைகளை பறிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. லியு சிகிஜுன், சீன ரயில்வே அமைச்சராக 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். சீனாவில் ஊழல், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பல அரசியல் தலைவர்களுக்கு சமீபகாலமாக அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
Post a Comment