மான் வேட்டையாட சென்றவர்களை வேட்டையாட காத்திருக்கும் புலிகள்..!
இந்தோனேஷியாவில் மான் வேட்டைக்கு சென்ற ஐவரை புலிக் கூட்டம் ஒன்று சுற்றி வளைத்துள்ளதால் கடந்த நான்கு நாட்களாக சுமத்ரா தீவில் உள்ள தேசிய பூங்காவில் மரமொன்றில் சிக்கி தவிக்கின்றனர். இதில் வேட்டைக்கு சென்ற ஆறாவது நபரை புலிகள் அடித்துக் கொன்றுள்ளன.
வேட்டைக்கு சென்ற குழு மானென்று நினைத்து புலிக்குட்டி ஒன்றை தவறுதலாக கொன்றதை அடுத்து புலிக்கூட்டம் இவர்களை சுற்றிவளைத்துள்ளது. புலிகளிடம் இருந்து தப்ப கடந்த வியாழக்கிழமை தொடக்கம் இவர்கள் மரமொன்றில் சிக்கியுள்ளனர்.
இவர்களை தேடி வனத்துறை அதிகாரிகள் காட்டுக்குள் சென்ற போதும் இவர்கள் இருக்கும் இடத்தை அடைய மேலும் மூன்று தினங்கள் அளவு தேவைப்படும் என கூறப்படுகிறது. 30 பேர் கொண்ட தேடுதல் குழு கடந்த சனிக்கிழமை காட்டுக்குள் நுழைந்ததாக பொலிஸ் பிரதானி டிக்கி சொன்டானி கூறியுள்ளார்.
எனினும் அருகில் இருக்கும் கிராமவாசிகள் இவர்களை மீட்க முற்பட்ட போது அவர்களை சுற்றி நான்கு மிகப்பெரிய சுமத்திரா புலிகள் இருப்பதால் அந்த முயற்சியை கைவிட்டு திரும்பி வந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் மாத்திரம் இருக்கும் சுமத்திரா புலிகள் மிக அபாயகரமான புலி இனமாகும்.
Post a Comment