Header Ads



வடமாகாணத்தேர்தலில் - யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு முன்னால் உள்ள தெரிவுகள்

யாழ் முஸ்லிம்:  எந்த அடிப்படைகளில் வடக்கு மாகாணத் தேர்தல் முஸ்லிம்கள் விடயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது

அஸ்மின் அய்யூப்: நிச்சயமாக வடக்குத்தேர்தல் பல்வேறு அடிப்படைகளில் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக; 1990களில் பலவந்த வெளியேற்றத்தைத் தொடர்ந்து 2009கள் வரை வடக்கில் முஸ்லிம்களின் மீள்வருகை குறித்தும், மீள்குடியேற்றம் குறித்தும் புலிகள் இயக்கம் ஸ்த்திரமான வெளிப்படையான எவ்வித நிலைபாடுகளையும் முன்வைத்திருக்கவில்லை. 2009களில் விடுதலைப்புலிகளின் அழிவைத்தொடர்ந்து வடக்கில் முஸ்லிம்கள் மீளவும் குடியேறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம்  வடக்கில் முஸ்லிம்களின் இருப்பு மீளவும் உறுதி செய்யப்பட்டது. இருப்பு மீளுறிதி செய்யப்பட்ட நிலையில் வடக்கில் முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற  முதலாவது மாகாண சபைத் தேர்தலாக இது அமைகின்றமையாலும்  தேர்தல் முஸ்லிம்களைப் பெறுத்தவரை முக்கியத்துவம் மிக்க ஒன்றாகவே அமையும்.

மீளக்குடியேற்றம் நடைபெறுகின்ற சூழலில் இடம்பெற இருக்கின்ற மாகாணம் தளுவிய உள்ளூர் அதிகாரங்களை உள்ளடக்கிய, உள்ளூர் செயற்திட்டத்திற்கான தேர்தல் என்ற வகையிலும் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது. வடக்கில் இருந்து 1990களில் சுமார் 25000 முஸ்லிம் குடும்பங்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். 160 முஸ்லிம் கிராமங்கள் சிதைக்கப்பட்டன, முஸ்லிம்களின் வாழிடங்கள், வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், மதரஸாக்கள் என முஸ்லிம்களின் அடையாளத்தை சுமந்து நிற்கின்ற எல்லா ஸ்தலங்கள் அழிவைச் சந்தித்தன. இவை அனைத்தும் மீளவும் நிறுவப்படவும், முஸ்லிம்களின் மீளக்குடியேற்றம் சாத்தியப்படவேண்டியதுமான காலத்தில் வடக்கு முஸ்லிம்கள் இருக்கின்றார்கள், அதன் அடிப்படையிலும் குறித்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக இருக்கின்றது.

தமிழ்த் தேசியவாதத்தின் கோரிக்கையாக அடையாளப்படுத்தப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கையானது கொள்கையளவிலும் செயற்பாட்டு வடிவிலும் நலிவடைந்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டத்தை எக்காரணம் கொண்டு விட்டுவிட மறுக்கின்ற நிலைமையை நாம் காண முடிகின்றது. இது ஒரு சமூகப்போராட்டத்தின் ஸ்த்திரத்தன்மையைக் குறித்து நிற்கின்றது. தமிழர் போராட்டத்தை சிறுபான்மை சமூகங்களின் போராட்டமாக அடையாளப்படுத்தி இந்த தேசத்தில் எல்லா பிரதேசங்களிலும் சிறுபான்மை சமூகங்கள் தமக்கான முழுமையான உரிமைகளுடன் இந்த தேசத்தின் பல்லினத் தன்மையைப் பாதுகாக்க வேண்டிய ஒன்று சேர்ந்து நல்லிணக்கத்துடன் பயணிக்க வேண்டிய ஒரு சூழலில் குறித்த தேர்தல் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக இருக்கின்றது.

சர்வதேச சமூகங்களின் அவதானங்கள் முழுமையாக வடக்குத் தேர்தலில் குவிக்கப்படுகின்ற ஒரு நிலைமையை நாம் அவதானிக்கின்றோம். இதுவே வடக்கு முஸ்லிம்களுக்கு தமது நிலை குறித்து வெளியுலகிற்கு அறியப்படுத்தவும், வடக்கில் தமது இருப்பை, அடையாளத்தை இனம்காட்டுவதற்குமான ஒரு சூழல் குறித்த தேர்தல் காலத்தில் ஏற்படும், அதன் அடிப்படையிலும் குறித்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக இருக்கின்றது.  மேற்படி விடயங்களின் அடிப்படையில் வடக்கு முஸ்லிம்களுக்கு குறித்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக அமைகின்றது. 

யாழ் முஸ்லிம்: வடக்கு மாகாணத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களது நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன குறிப்பாக தாங்கள் வசிக்கின்ற யாழ் மாவட்டத்தின் நிலைமைகளை சுட்டிக்காட்ட முடியுமா?

அஸ்மின் அய்யூப்: யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும்  குறித்த தேர்தல் பல்வேறு கோணங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே அமைய இருக்கின்றது. குறித்த தேர்தலில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் செயற்பாடானது கூடிய கரிசணையுடன் நோக்கப்படவேண்டிய தேவை இருக்கின்றது. வடக்கில் வன்னி மாவட்டத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்ட முஸ்லிம்களின் நிலைமையை விட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் நிலைகள் சற்று வித்தியாசமானது. யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் 484,791 பதிவு செய்யப்பட்ட வாக்காளர் இருக்கின்றார்கள், அதில் முஸ்லிம் வாக்காளர்களின் தொகையானது 12,630 ஆக அடையாளப்படுத்தப்படுகின்றது இது மொத்த வாக்களர் தொகையில் 3%மாக அமையும் (தகவல் தேர்தல் திணைக்களம்- 2010) 2010-2013 வரையான காலப்பகுதியில் வெளிமாவட்டங்களில் தம்மை பதிவு செய்துகொண்ட யாழ்,கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையானது 4,000 என மதிப்பிடுவோமாயின் எங்கியிருக்கின்ற யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 8,500 என அடையாளப்படுத்தப்படும். தற்போதைய கணக்கெடுப்புகளின் பிரகராம் 10,000 விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்கின்ற ஒருவரே மாகாணசபை அங்கத்தவராக தெரிவாகு நிலை காணப்படுகின்றது. அவ்வாறாயின் யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களின் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஒரு பிரதிநிதியைப் பெற்றுக்கொள்தல் எனத் தீர்மானித்து வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். எனினும் அது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும். கடந்த கால அனுபவங்களின் பிரக்காரம் யாழ்ப்பாண முஸ்லிம்களினால் அளிக்கப்படும் வாக்குகள் சராசரியாக 3500 இனைத் தாண்டியதில்லை. இது இம்முறை மாகாண சபைத் தேர்தலிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே அன்னளவாக 5000 வாக்குகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதுதான் இங்கே இருக்கின்ற வினாவாகும். வாக்காளர் நிலைமைகளை கருத்தில்கொண்டு தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்படவேண்டும்.

யாழ் முஸ்லிம்: வடக்கு மாகாணத் தேர்தலில் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இருக்கின்ற தெரிவுகள்  குறித்து தங்களது கருத்துகள் எவ்வாறு இருக்கின்றன?

அஸ்மின் அய்யூப்: இது ஒரு சிக்கலான கேள்வியாகும். இருப்பினும் யதார்த்தமான நிலைகளைக் கருத்தில் கொண்டு நோக்கும்போது யாழ்,கிளிநொச்சி முஸ்லிம்களுக்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருக்கின்றன என என்னால் கூறமுடியும். மிகச்சாதுரியமான அமைப்பில் தமது சமூக நலன்களை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து அவர்கள் குறித்த இரு தெரிவுகளுள் ஒன்றை நோக்கி நகர முடியும். யாழ்ப்பாண முஸ்லிம்களைப் பெறுத்த வரையில் எல்லாவிதமன அரசியல் கட்சிகளும் கைவிட்ட நிலையினை நாம் கடந்த மூன்று வருட கால மீள்குடியேற்ற செய்ற் திட்டங்களின் மூலம் கண்டுகொள்ள முடிகின்றது. முஸ்லிம்களின் கட்சி என தம்மை அடையாளம் செய்துகொள்ளும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கான அல்லது  இடம்பெயர்ந்தவர்களுக்கான வாக்காளர் உரிமை குறித்து பேசியதே தவிர முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எவ்விதமான பங்களிப்புகளையும் நல்க வில்லை, அந்த வகையில் தமது பதவிகளைத் தக்க வைப்பதற்கான வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தமையானது யாழ்,கிளிநொச்சி முஸ்லிம்களுக்கான தீர்வாக அமையப்போவதில்லை, இதன் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மக்களின் வாக்குகளை கோருவது அரசியல் இங்கிதமற்ற செயல் என்றே கூறவேண்டும்.

அதேபோன்று தென்னிலங்கையின் பெரும் அரசியல் கட்சிகளாக இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பன யாழ்,கிளிநொச்சி முஸ்லிம்களுடன் நெருக்கமான தொடர்புடைய கட்சிகள் அல்ல அவை பங்காளிக் கட்சிகளினூடாகவே யாழ்,கிளிநொச்சி முஸ்லிம்களுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தன. அந்தவகையில் பெரிய கட்சிகளுடன் முஸ்லிம்கள் தேர்தல் காலத்தில் இணைந்திருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதேபோன்று தேர்தல் காலத்தில் மட்டும் முளைக்கின்ற காளான் கட்சிகளுடனும் முஸ்லிம்கள் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்த மாட்டார்கள்

இந்நிலையில் அவர்களுக்கு முன்னால் மூன்று முக்கிய தெரிவுகள் இருப்பதை நாம் உணர்கின்றோம் யாழ் மாவட்டத்தில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருக்கின்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)  கடந்த மூன்று வருடங்களாக யாழ் மாநகர சபையில் முஸ்லிம் 5 முஸ்லிம் பிரதிநிதிகள் குறித்த கட்சியுடன் இணைந்தே செயலாற்றி வருகின்றனர். இருப்பினும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய எவ்வித அபிவிருத்திப்பணிகளையும் குறித்த கட்சி முன்னெடுக்க்கவில்லை என்ற ஆதங்க முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கின்றது. அது மட்டுமல்ல அரச தொழில் வாய்ப்புகள் வழங்கலில் காட்டப்பட்ட புறக்கணிப்புகள், மற்றும் உயர் அதிகாரிகளின் பாரபட்ச்ங்கள், மீள்குடியேறுகின்ற மக்களுக்கு கிடைக்கின்ற உதவிகள் முஸ்லிம்களுக்கு வந்துசேராமை போன்ற காரணிகளின் பின்னணியில் குறித்த கட்சி முஸ்லிம்களின் விடயத்தில் பாராமுகமாக இருக்கின்றது என்ற ஆதங்கம் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. இருந்த போதிலும் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம்கள் அதனை ஒரு தெரிவாக கருத முடியும்

ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கின்ற  வடமாகாணத்தில் ஸ்த்திரமாக இருக்கின்ற முஸ்லிம் கட்சி என்ற வகையில் கௌரவ அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். இதுவரை காலமும் யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களின் முஸ்லிம்களின் மீளக்குடியேற்ற நடவடிக்கைகளில் கரிசணையுடன் செயற்படுகின்ற ஒரு கட்சியாக மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைக்காண்கின்றார்கள் எனவே மக்கள் காங்கிரஸ் முஸ்லிம்களின் ஒரு தெரிவாக இருக்கின்றது

இறுதியாக வடக்கில் முழுமையான மக்கள் ஆதரவினைக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தை கண்டிக்கின்ற முஸ்லிம்களின் இருப்பினை உறுதி செய்கின்ற ஒரு கட்சி என்ற வகையிலும், வடக்கில் குறித்துச்சொல்லக்கூடிய அங்கீகாரத்தையும் கொண்டிருக்கின்ற கட்சி என்றவகையிலும் இதனையும் முஸ்லிம்கள் தமது ஒரு தெரிவாக அடையாளப்படுத்த முடியும். இருப்பினும் தமிழ் மக்களுடனான நல்லிணக்கமானது மேலும் உறுதி செய்யப்படுதல் வேண்டும் அது மாத்திரமல்ல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை ஊக்குவிக்கு அதனை உறுதிப்படுத்துகின்ற அம்சங்களில் எழுத்துமூலமான உடன்பாடுகள் எட்டப்படுமானல் அது தமிழ் முஸ்லிம் உறவை வலுப்படுத்துவதோடு தமிழ்த் தேசியக் கூடமைப்புடன் முஸ்லிம்களை இணைந்திருக்கச் செய்யும்.

இவ்வாறான மூன்று தெரிவுகளுக்கு மத்தியில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது இருப்பு, அடையாளம், பிரதேசத்தின் பாதுகாப்பு, மற்றும் மீள்குடியேற்றத்திற்கான ஊக்குவிப்புகள், ஒத்துழைப்புகள், அபிவிருத்துப் பணிகளில் பங்களிப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் தமது தெரிவினை அமைத்துக்கொள்ள முடியும். இதுவே யாழ்ப்பாண முஸ்லிம்கள் வடமாகாண சபைத் தேர்தல் குறித்து சிந்திக்கின்றபோது முக்கியத்துவப்படுகின்ற அம்சங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

3 comments:

  1. என்ன மௌலவி நீங்கள் மூன்று தெரிவுகளை முன்வைத்துள்ளீர்கள். நீங்கள் அதில் எதைத் தெரிவு செய்யப்போகின்றீர்கள். அதைக் கூறுங்கள் முதலில், சும்மா நழுவல் கதைகள் சரிப்பட்டு வராது. பேச்சு ஒன்று துண்டு இரண்டு என்று இருக்க வேண்டும்.
    மொஹிதீந் நீர்கொழும்பு

    ReplyDelete
  2. யாழ் முஸ்லிம்களுக்கு மூன்று தெரிவுகள் இருப்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

    உண்மையில் மூன்றாவது தெரிவு, யாழ்ப்பான முஸ்லிம்களுக்கு யதார்த்தத்தில் பயனற்றது.

    யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம் முழுமையாக சிதைவடைந்துள்ள நிலையில், அரச ஆதரவுக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு பிரதிநிதியை தெரிவு செய்து, அதன் மூலம் முடியுமான அபிவிருத்திகளை முன்னெடுக்க முயல்வதே பயனளிக்கும்.


    தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு எத்தகைய நன்மையையும் ஏற்படப் போவதில்லை.

    அதே நேரத்தில், கடந்த காலத்தில் யாழ் முஸ்லிம் பிரதேசத்தின் அழிவிற்கு சம்மந்தப்பட்ட யாராவது ஒரு முஸ்லிம் போட்டியிட்டால் அவரை மொத்த முஸ்லிம் சமுதாயமும் புறக்கணிக்க வேண்டும், அதே போன்று எந்தக் கட்சிகளும் இத்தகையவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கக் கூடாது.


    யாழ்ப்பான முஸ்லிம்கள் சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது. இரண்டு மூன்றாக பிரிந்து ஆளுக்கு 3500 வாக்குகளுக்கும் குறைவாகக் கிடைத்து யாரும் வெற்றி பெற முடியாத நிலையை உருவாக்குவதனை விட, அரசாங்கத்துடன் துணை நிற்கும் ஒரு கட்சியின் மூலம் சிறப்பான ஒருவரை மட்டும் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்வதே சாலப் பொருத்தம் ஆகும்.

    ReplyDelete
  3. நண்பர் எழுத்தாளர் ஐயுப் அஸ்மின் ஆரவராமில்லாத செயற்பாட்டாளர் முதன் முதலாக அமையவிருக்கும் வட மாகான சபையில் அவர் உறுப்பினராக ஆளும் தரப்பில் இருந்தால அமைச்சராக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன் ..!
    வட மாகான முஸ்லிம்களில் அக்கறை கொண்டோர் அவரை வேட்பாளராக நிறுத்துவதோடு தேர்தல் செலவினங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.!

    ReplyDelete

Powered by Blogger.