Header Ads



காலை உணவை தவிர்க்காதீர்கள் - இரவில் தாமதமாக சாப்பிடாதீர்கள்..!

காலை உணவை தவிர்த்தல், இரவில் மிகவும் தாமதமாக உணவை உட்கொள்ளுதல் ஆகியவை, இதயக் கோளாறுகள் ஏற்பட, அதிக வாய்ப்பை உருவாக்குவதாக, அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின், ஊட்டச்சத்து துறை நிபுணர் எரிக் ரிம், இது குறித்து கூறியதாவது: உணவுக் கட்டுப்பாடு இன்மை, புகைப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, மதுப் பழக்கம் போன்றவற்றால் மட்டும் இதயக் கோளாறுகள் ஏற்படாது. காலை நேர உணவை தவிர்ப்பதாலும் அதனால், நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளாலும், இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இது தொடர்பாக, 16 ஆண்டுகளாக, 27 ஆயிரம் ஆண்களிடம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,500 பேருக்கு, முதன்முறையாக, இதயக் கோளாறுகள் ஏற்பட்டதையும் காண முடிந்தது.

இரவு நேரத்தில், மிகவும் தாமதமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு, இதயக் கோளாறுகள் ஏற்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களுக்கு, 55 சதவீதம் இதயக் கோளாறுகள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அதே நேரத்தில், இவர்கள், காலை நேர உணவை எடுத்துக் கொண்டு, இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தாலும், நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது. காலை உணவை தவிர்த்தாலோ அல்லது இரவில் நீண்ட நேரத்திற்குப் பின் சாப்பிட்டாலோ அது, நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. காலை உணவை தவிர்ப்பதால், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு சேர்தல் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் அடுத்த கட்டமா, இதயக் கோளாறு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.