முஸ்லிம் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
2013 ஜூலை 24ஆம் திகதி புதன் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் .கூட்டணிக்குமிடையில் வடமாகாணத் தேர்தல் சம்பந்தமான முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் பா.உ. இரா. சம்பந்தன் மற்றும் பா.உ. சுமந்திரன் ஆகியோரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டணி சார்பாக, பொறியியலாலர் அப்துர்ரஹ்மான், நஜா முஹம்மத், சிராஜ் மஸ்ஹூர், டாக்டர் ரிபாஸ், அப்துல் வாஜித் , அஸ்மின் அய்யூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது, தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் பொது நலன்களில் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் கடந்த காலங்களில் அவ்வாறான புரிந்துணர்வை கட்டியெழுப்பக்கூடிய சந்தர்ப்பங்கள் குறிப்பாக, கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது இருந்தும்கூட அந்த சந்தர்ப்பங்கள் சமூக நலன்களை முதன்மைப்படுத்திய வகையில் சரியாகப் பயன்படுத்தப்படாத நிலையில் தற்போது வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் தருணத்தில், தமிழ் முஸ்லிம் உறவினை வலுப்படுத்தி வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களில் இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க அரசியலைக் கட்டியெழுப்புவதற்கான தொடக்க புள்ளியாக, இந்த மாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பயண்படுத்த முடியும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்தகையதொரு நம்பிக்கை தரும் முன்னெடுப்பை த.தே.கூட்டணி மேற்கொள்ளுமாயின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டணி அதனை வரவேற்பதோடு அதற்கான பூரண ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராய் இருப்பதாகவும் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் இந்த சந்திப்பின்போது எடுத்துக் கூறினார்.
மேலும், வட மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகளும் நிறைவேற்றப்படும் வகையிலான உத்தரவாதங்கள் த.தே. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்படுவது இரு சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.
த.தே. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறும்போது 'வடக்கு, கிழக்கில் தமிழர்கள் தமது உரிமைகளை பெற்று கௌரவமாக வாழ விருப்புவது போலவே முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் சகல உரிமைகளும் பெற்று சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றோம். நாம் சிங்கள மக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ இலங்கைக்கோ எதிரானவர்கள் அல்ல.
ஜனநாயகத்தை நம்புகிறோம் அதன் வழி நடக்கிறோம், வடக்கில் முஸ்லிம்கள் அனைவரும் மீண்டும் குடியேற வேண்டும். அங்கு அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அது அவர்களின் அடிப்படை பிறப்புரிமை. அதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்ற உத்தரவாதத்தையும் எம்மால் தர முடியும்.
எதிர்வரும் மாகண சபைத்தேர்தலில் முஸ்லிம் வேற்பாளர்களை நிறுத்தும் எண்ணம் த.தே. கூட்டமைப்பிற்கு இருக்கிறது. . அமையப்போகும் வடமாகாண சபையில் முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்தையும் சுயமரியாதையும் பாதுகாக்கக்கூடிய பிரதிநிதிகளாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றோம். அந்த வகையில் வடமாகாணத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் எதிர்பார்ப்பது போல் உடன்பாடுகளுடன் கூடிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாம் இணைந்து செயற்பட முடியும்' எனவும் மிகவும் ஆணித்தரமாக எடுத்துக்கூறினார். கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் மீண்டும் கூடி இறுதி தீர்மானங்கள் எட்டப்படும் என இரு தரப்பினரும் நேற்றைய கூட்டத்தில் இணக்கம் கண்டனர்.
இது தேர்தல் விளையாட்டு வெல்லுமட்டும் தேனும் பாலும் வென்றபின் கீரியும் பாம்பும் , தலையை தடவி கண்ணைப் பிடுங்கும் வித்தை .
ReplyDeleteகிழக்கு மாகாணசபை தேர்தலிலும் இவ்வாறுதானே காத்தான்குடியில் கூட்டம் போட்டு முடிவு செய்தார்கள். இறுதியில் என்ன நடந்தது. ...........?
ReplyDeleteVery good move.. Ma Sha Allah....
ReplyDeleteதேர்தல் கால விளையாட்டுக்களை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் செய்யாது. அது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் நமது முஸ்லிம் கட்சிகளின் பரம்பரை வியாதி, புற்று நோய் போல.
ReplyDeleteகிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது திருகோணமலையில் த.தே.கூட்டமைப்புடன் ந.ம. இயக்கம் பேச்சு வார்த்தை நடாத்தியபோது நானும் உடன் இருந்தேன்.
அங்கு தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் உறவு நிலை மேம்பட வேண்டும் எனவும், ந.ம.இயக்கமும் மூன்று மாவட்டங்களிலும் சுயேட்சைக்குழுவாகத் தனித்துப் போட்டியிடும் என்றும், தேர்தலில் தமது இயக்கத்திற்கு ஆசனங்கள் கிடைத்தால் தமிழ் - முஸ்லிம் உறவைப் பலப்படுத்தும் வகையிலும், கி.மா. சபையை சிறுபான்மைச் சமூகங்களின் ஆட்சிச் சபையாகவும் அமைப்பதற்கு ந.ம. இயக்கம் ஆதரவு வழங்கும் என்றுமே பேசப்பட்டது.
தவிர ந.ம. இயக்கமானது, த.தே. கூட்டமைப்புடன் இணைந்து கேட்பதென்றோ, கூட்டமைப்பு வேட்பாளராகத் தமது இயக்கத்தவர்களை நிறுத்த வேண்டுமென்றோ சேப்படவில்லைஎன்பதை கருத்தெழுதியுள்ள 'ஈழத் தமிழன்' புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் காத்தான்குடியில் த.தே.கூட்டமைப்புடன் எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை. திருகோணமலையில் சம்பந்தன் அவர்களின் இல்லத்தில்தான் ஒரேயொரு தடவை சந்திப்பு நிகழ்ந்து மேற்படி விடயங்கள் பேசப்பட்டன.
ந.ம. இயக்கம் பட்டங்களுக்கும், பதவிகளுக்கும் ஆசைப்பட்டு சமூகத்தை விற்றுப் பிழைப்பு நடாத்தும் இயக்கமல்ல.
அவர்களில் எம்.பி. மற்றும் மாகாண சபை உறுப்பினர் என்கிற பதவி பட்டங்களையெல்லாம் விட தரமான பட்டங்களும் சுயமான தொழில்களும் பலருக்கும் இருக்கின்றன.
அவர்கள் தங்களின் சமூகக் கடமையாக நினைத்தே இந்த சமூக அரசியல் இயக்கத்தையும், அதனூடான வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இச்சந்திப்பில் கலந்து கொண்ட அப்துர் றஹ்மான் ஒரு உறுப்பினராக இருந்தவர்.
வாழைச்சேனையில் முஸ்லிம்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அந்த சொகும், வசதி வாய்ப்புக்களும் நிறைந்த பதவியைத் தூக்கி எறிந்து ராஜினாமாச் செய்தவர்.
இதுபோலவே த.தே.கூட்டமைப்பும் தேர்தலின் பின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகச் செயற்பட்டால் அதனைப் பகிரங்கமாகக் கண்டிக்கும் துணிவும், சர்வதேச மட்டங்களில் கூட்டமைப்பின் முகத்தைத் தெளிவுபடுத்தும் பொறுப்பும் ந.ம. இயக்கத்தின் பக்கம் சமூகப் பொறுப்புடன் தானாகவே ஏற்படும்.
இன்றேல் அவர்களின் அமைப்புக்கு "நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்" என்று அவர்கள் பெயர் வைத்திருக்கத் தேவையில்லை.
கடந்த காலங்களில் தமிழர் தரப்புடன் இணைந்து அரசியல் செய்த முஸ்லிம் தலைவர்கள் பலரை இந்த நாடு வரலாற்றில் கொண்டுள்ளது.
இனவாத, பிரதேசவாத அரசியல் வளர்க்கப்பட்டு ஊருக்கொரு எம்.பி. வேண்டும் என்கிற அற்பத்தனமான உணர்வுகளும், தமிழர் சமூகத்திற்காக உரிமை கோரும் போராட்டங்கள் ஏற்பட்டதும்தான் இந்த நாட்டில் தமிழ்ச் சமூகத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் இருதுருவங்களாக்கியுள்ளன.
இதில் குளிர் காய்ந்து அரசியல் பிழைப்பு நடாத்தும், பிரதேச இனவாதம் கக்கும் எத்தனையோ குறு நில மன்னர்களை நாம் பாக்க்கின்றோம். இந்தக் கேவலமான சமூகங்களைப் பிரித்தாளும் அரசியல் நோக்கும், போக்கும் எதிர்காலத்திலாவது முளையோடு கிள்ளியெறியப்பட வேண்டும்.
அதற்கு இன்றைய கூட்டமைப்பின் தலைவர் தத்துணிவுமிக்கவராகவே தென்படுகின்றார்.
அதற்கு ஒரு நல்ல உதாரணம்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசரை அவர் அறிவித்திருப்பதாகும்.
இதுபோன்ற பல எதிர்பாராத திருப்பங்களை எதிர்காலத்திலும் அவரால் செய்ய முடியும் என்றே நான் கருதுகின்றேன்.
இப்போது கூட தமிழ் மக்களின் வாக்குகளை நூறு வீதமும் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமான தேர்தல் காலத்திலும் கூட அவர் என்ன சொல்கின்றார்:
முஸ்லிம் மக்கள் மாத்திரமல்ல சிங்களவர்களும் வடக்கில் அவர்களது குடியியல் பிறப்புரிமையையும், சமத்துவமான வாழ்வையும் பெற வேண்டும். நாம் முஸ்லிம்களுக்கோ சிங்களவர்களுக்கோ அல்லது இலங்கைக்கோ எதிரானவர்களல்ல என்று எவ்வளவு தெளிவாகச் சொல்லுகின்றார்.
இதிலிருந்தாவது அவரது மனோ நிலையின் உள்ளாதங்கத்தைப் புரிந்து கொள்ளாமல் 'கீரியும் பாம்பும், தேனும் பாலும்' கதைகளைக் கதைப்பது எவ்வளவு அறியாமையாகும்?
எனவே த.தே.கூட்டமைப்பில் நியமிக்கப்படும் முஸ்லிம் வேட்பாளர் இதுவரை நாம் பார்த்த சராசரி மாமூல் அரசியல்வாதியாக இருக்க மாட்டார் என்பதை முழுமனதுடன் நம்பி முஸ்லிம் சமூகம் தமது முழுமையான ஆதரவை கூட்டமைப்புக்கும், நீதி நியாயத்தை தன் வாழ் நாள் முழுவதும் இந்த நாட்டு மக்களுக்கு வழங்கி 'நீதி அரசர்' எனப் பெயர் கொண்ட முதலமைச்சர் வேட்பாளருக்கும் வழங்க வேண்டும்.
இது காலத்தின் அவசியமும், மாற்றத்திற்கான நல்ல நேரமுமாகும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
ஒரு சிறப்பான பதிலை றஹ்மதுல்லாஹ் அவர்கள் முன்வைத்திருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல, அதிலும் குறிப்பாக கூட்டமைப்பின் பிரதான கட்சியாகவிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி தீவிரவாத கட்சியுமல்ல, அது மிதவாதக் கட்சி. பல்வேறு சந்தர்ப்பங்களில் இ.த.அ.கட்சி முஸ்லிம்களை மதித்து அவர்களது அபிலாஷைகளை அரவணைத்து சென்ற கட்சி என்றே அடையாளப்படுத்தப்படவேண்டும். தலைவர் அஷ்ரப் அவர்களின் அரசியல் தொட்டில் தமிழரசுக் கட்சியே. இன்று தென்கிழக்கு தனி அலகு என்று ஒரு அடையாளத்தை முஸ்லிம்கள் பேசுகின்றார்கள் ஆனால் 1977 வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சபையில் எஸ்.ஜே.வி செல்வநாயகம் “இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் போது அடுத்த கனமே நாம் அங்கே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு தனியான அதிகார அலகை நிர்ணயம் செய்வோம். அது இந்திய சுதந்திரம் அடைந்த மறுகனம் பாகிஸ்தான் என்னும் நாடு உருவானதற்கு ஒப்பாக இருக்கலாம் ஆனால் அதுவே தர்மம்” என்று பேசினார். இப்படியாக முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் புரிந்து செயற்பட்ட ஒரு கட்சியை எப்போதும் போல எமக்கே உரித்தான குறுகிய புத்திகொண்டு பார்ப்பதை நாம் கைவிடவேண்டும்.
ReplyDeleteநல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்- கிழக்கிலங்கை மட்டுமல்ல தேசிய ரீதியில் முஸ்லிம் சமூகத்திற்கு முன்மாதரி அரசியல் அடையாளத்தைக் கொடுக்கும் என்று நாம் நம்புகின்றோம். அத்தோடு அது தற்போது ஏற்படுத்தியிருக்கின்ற அரசியல் கூட்டமைப்பு மிகவும் வலுவானதாக இருக்கும். இருக்கவேண்டும்.
அஜ்மல்-மொஹிதீன், நீர்கொழும்பு