வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக இருப்பது முஸ்லிம் சமூகத்தின் பலவீனம் - அமீன்
மானவல்லையில் நடைபெற்ற பீனிக்ஸ் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம். அமீன் ஆற்றிய உரை.
பீனிக்ஸ் சஞ்சிகை ஜாமியா நளீமிய்யாவின் 6 ஆம் வருட மாணவர்களது வெளியீடாகும். உண்மையில் ஜாமிஆ நளீமிய்யா முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை திட்டமிடுதல் தேவைப்பட்ட அறிவாளிகளை உருவாக்குவதற்காக, மர்ஹும் நளீம் ஹாஜியாரால் உருவாக்கப்பட்ட கல்வி நிலையமாகும். இந்த கல்வி நிலையத்திலே கல்வி கற்கும் மாணவர்களுடைய ஒரு முயற்சியாகத்தான் 'பீனிக்ஸ்' எனும் முத்திங்கள் சஞ்சிகை நடைபெறுகின்றது.
ஜாமிஆ நளீமிய்யா, இந்நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஏற்பட்டிருக்கும் இஸ்லாமிய எழுச்சிக்கு ஓரளவேனும் பங்களிப்பு செய்திருக்கின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில் தங்களது சமூகப் பொறுப்பை உணர்த்துவதற்காக இவ்வாறான பணிகளைச் செய்வதற்கு இந்த மாணவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள் என நான் நினைக்கின்றேன். இளைய தலைமுறைக்கு சமுதாயத்தின் தேவைகளை உணர்த்துவதற்காகவே ஜாமிஆ நளீமிய்யா, மாணவர்களை இவ்வாறான பணிகளில் ஈடுபடச் செய்கிறது என நான் நினைக்கின்றேன்.
மிகவும் பொருத்தமான ஒரு தொனிப்பொருளை இவர்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். முஸ்லிம் பெண்களுக்கு அறிவூட்ட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த 'பீனிக்ஸ்' சஞ்சிகையை ஒரு கன்னி முயற்சியாக வெளியிட்டிருக்கிறார்கள். சகோதரர் ரவூப் ஸெய்ன் அவர்கள், பெண்களுக்கு இஸ்லாத்தில் இருக்கும் முக்கியத்துவம், மற்றும் இந்த சஞ்சிகையில் உள்ளடங்கப்பட்டிருக்கும் விடயங்கள் பற்றி எல்லாம் மிகச்சிறப்பாக கூறினார். உண்மையிலேயே நான் இம்மாணவர்களுடைய முயற்சியை பாராட்டுகிறேன். ஏனெனில், எமது தாய்மார்கள், சகோதரிகளுக்கு அறிவூட்டுவது இன்று மிக முக்கியமாக இருக்கின்றது. ஒரு தாய் அறிவு பெறும் போது தான் அந்தக் குடும்பம் கச்சிதமான, அறிவுள்ள குடும்பமாக மிளிரும். தாய் போதியளவு அறிவு பெறாத குடும்பத்தில் பிள்ளைகள் எப்படியோவெல்லாம் வளரலாம். இந்த வகையில் எமது சமூகப் பெண்களை அறிவூட்டும் இம்முயற்சியை நாம் பாராட்ட வேண்டும்.
எமது சமூகத்தில் இவ்வாறான நிகழ்ச்சிகள் எங்கு நடைபெற்றாலும் கூடுதலாக நாம் பேச வேண்டிய வெறும் கதிரைகளுக்குத் தான். எமது சமூகத்திலே இருக்கின்ற ஒரு பலவீனம் இதுபோன்ற ஒரு நல்ல விடயம், எமது பிள்ளைகள் செய்கின்ற ஒரு நல்ல முயற்சிக்கு ஒரு மணி நேரம் வந்து கலந்து கொண்டு ஆதரவு வழங்குகின்ற பழக்கம் இல்லாத சமுதாயமாகவே நான் காண்கிறேன்.
நான் நிறைய சிங்கள சகோதரர்கள் எழுதுகின்ற நூல் வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்கிறேன். அங்கு குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொண்டு அம் முயற்ச்சிக்கு ஆதரவு வழங்குவார்கள். முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் ஒரு பலவீனம், எம்மிடம் வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக இருப்பதே!
பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்திலே ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்தில் நூல் கண்காட்சி நடைபெறும். இலங்கையிலுள்ள எல்லா புத்தகசாலைகளினதும் காட்சிக் கூடங்கள் இருக்கும். அவற்றில் பல மணி நேரங்கள் வரிசையில் நின்று தான் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அங்கு ஆசைக்காகவாவது எமது சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலரைக்கூட காணமுடியாது.
ஆனால், பூச்சாடி, உணவு வகைகள், ஆடைக் கண்காட்சிகளில் எமது பெண்கள் குவித்திருப்பதனை காணலாம். அறிவோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் பெண்கள் ஆர்வம் காட்டுவது குறைவாகும். நான் இந்நாட்டின் இரண்டு பத்திரிகைகளில் பணி புரிந்தவன் என்ற வகையில் எமது சமூகம் வாசிப்பில் ஆர்வம் குறைவாக இருப்பதை அவதானித்தேன்.
இந்த மாவனல்லை நகரினை எடுத்துக் கொண்டால் சுமார் ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இந்நகரிலுள்ள பத்திரிகை முகவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும் தமிழ்ப் பத்திரிகைகளின் 500 பிரதிகளாவது விற்குமா என்பது கேள்விக்குறியே.
கிண்ணியாவிலுள்ள ஒரு சகோதரர் கூறினார். இங்கு சுமார் என்பத்தையாயிரம் மக்கள் வாழ்கின்றனர். ஆனால், எல்லாப் பத்திரிகைக்கும் என்பத்தைந்து பிரதிகள் தான் விற்கப்படுகின்றன. இது எமது சமூகத்திலுள்ள பலவீனம். பத்திரிகைதான் வாசிப்பது இல்லை என்றாலும் அதற்கு மாற்றீடாக இருக்கும் கணனியை, தொலைக்காட்சியை, ஏனைய விடயங்களை பார்க்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர்கள் பார்ப்பது தொலைக்காட்சி மெகா சீரியல்கள் தான்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம், கொழும்பிலுள்ள முஸ்லிம்களை மையமாகக் கொண்டு தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்பும் நேரம் பற்றிய ஆய்வொன்றை நடத்தினார்கள். அதில் அவர்கள் சொன்ன விடயம் என்னவெனில் பகல் சமயலை முடித்துவிட்டு தொலைக்காட்சிக்கு முன்பு உட்கார்ந்தால், தொடர்ச்சியாக அவர்கள் பார்ப்பது ஆபாசத்தைத் தூண்டும் நாடகங்களையும் திரைப்படங்களையும் தான். இதனால் ஏற்படும் விளைவுகள் பல. இவற்றைப் பார்ப்பதனால் எமது பிள்ளைகளின் எண்ணங்களில் நாம் எதனை விரும்பவில்லையோ அந்தப் பக்கத்துக்கு தள்ளிவிடுபவைகள் தான் ஏற்படுகின்றன.
எமது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சரியான அறிவூட்டல் நடைபெற வேண்டும். மாவனல்லைப் பிரதேசத்தைப் பொறுத்த வரையில் ஜமாஅதே இஸ்லாமி போன்ற அமைப்புக்கள் தொடர்ச்சியாக அறிவூட்டி வருகின்றன. ஆனால் சில கிராமங்களில் அந்த வாய்ப்பு இல்லை. இதனால் தவறான வழியில் செல்லக் கூடிய வாய்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. மறுபக்கத்திலே எமது சமூகத்தைச் சேர்ந்த, கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பெண்கள் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர். சிந்தித்துப் பாருங்கள், அவர்களின் நிலை எப்படி அமையப் போகிறது என்று இவர்கள் தமது கணவன்மாருடைய பொருளாதாரத்தை திருப்திப்படுத்துவதற்காக பலமுறை தொடர்ச்சியாக வெளிநாட்டிற்கு செல்கின்றனர். அவர்களுடைய குழந்தைகளை எந்த வயதில் பண்பாடுகளை ஊட்டி வளர்க்க வேண்டுமோ அந்த வயதிலே அவர்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லை. இதனால் இவர்கள் சீரழிந்து போகின்றனர்.
இவ்வாறான பின்னணியிலேதான் இந்த சஞ்சிகை வெளிவருகிறது. இதுபோன்ற இன்னம் பல சஞ்சிகைகள் வெளிவர வேண்டும். அறிவூட்ட வேண்டும். இது மிக முக்கியமான சமுதாயத் தேவையாகும். ஏனெனில், வானொலி நிகழ்ச்சிகளைச் செவிமடுப்பவர்களும் குறைவு. அண்மையிலே இலங்கை பாராளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவருடன் ஒரு வீட்டின் மேல் உள்ள அலுவலகத்தை பார்வையிடப் போயிருந்தேன். அவ்வீட்டிலிருந்த பெண்கள் வந்த அமைச்சரையோ மற்றவரையுமோ சாட்டை செய்யாது நாடகம் பார்ப்பதிலேயே மூழ்கிப் போயிருந்தனர். இதை ஏன் சொல்கிறேன் எனில், எம்முடைய சமூகம் இதிலே திணிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் குறிப்பட்டதொரு மாவட்டத்தில் நடைபெற்ற அறிவுக்களஞ்சியம்' போட்டியில் பொதுஅறிவு இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்ன மாணவர்கள் இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. இதுதான் எமது இன்றைய சமூகத்தின் நிலை.
அடுத்து முக்கியமாக, இந்த ஷபீனிக்ஸ்' முத்திங்கள் சஞ்சிகையின் அடுத்து வரும் சஞ்சிகைகளில் குறைந்த பட்சம் ஒரு சிங்களப் பாடத்தை உட்படுத்த வேண்டும். இன்றைய நிலைமையில் இது மிக முக்கியம். எமது சகோதரிகள் சிங்களம் தெரியாததால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
வைத்தியரின் சென்றால் ஒழுங்காக எமது நோயை சொல்லத் தெரியாது. எமது அயலில் வசிக்கும் சிங்கள சமயத்தோடு நல்லுறவை வளர்த்துக் கொள்ள எமக்கு மொழி அறிவில்லாதது மிகப்பெரிய சவாலாகும். இது எங்களைப் பற்றிய தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்த வழிவகுக்கின்றது. முஸ்லிம்கள் தனித்து போகிறார்கள். அவர்கள் பர்தாவைப் போட்டுக் கொண்டு, யாரோடும் பேசவும் மாட்டார்கள் என்ற எண்ணம் பிரச்சினைகளை அண்மையில் ஏற்படுத்தியது.
நாம் எம்மைச் சூழ இருக்கும் சிங்கள சமுதாயத்தின் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் பல பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க நேரிடலாம். எனவே சிங்களம் கற்றுக் கொள்ள பல வழிகளில் இருப்பினும் இச்சஞ்சிகையிலும் சிங்களம் கற்றுக் கொள்ள வழிகாட்டலை வழங்குவது சிறப்பானதாகும். அது எதிர்காலத்தை சுபீட்சமாக்கும்.
இன்று எம் நாட்டில் எம்மைப் பற்றி முன்பிருந்தே நல்லெண்ணங்கள் தகர்த்தெடுக்கப்பட்டு தீய செய்திகளே பரப்பப்படுகின்றன. இவற்றை நாம் வெற்றி கொள்ள, நல்லெண்ணம் ஏற்பட பல வேலைகளை நாம் செய்ய வேண்டும்.
நான் அடிக்கடி சொல்லும் விடயம் எங்கள் சமூகத்துக்கென்று தனியான ஊடகம் இல்லை. இலங்கையில் நாற்பத்தொன்பது வானொலி சேவைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுகூட எமது சமூகத்தின் கையில் இல்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகள் கூட இன்று அனுசரணை நிகழ்ச்சிகளாகவே உள்ளன. சமூகத்துக்கு பிரயோசனம் குறைவான விடயங்கள் பற்றி பேசுகின்ற நிகழ்ச்சிகள் தான் காலையிலிருந்து மாலைவரை ஒலிபரப்பப்படுகின்றது.
இன்று எமது நாட்டில் பதினெட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒரு தொலைக்காட்சி கூட எமது கட்டுப்பாட்டில் இல்லை. எங்களைப் பற்றி ஒரு நல்ல விடயத்தைச் சொல்வதற்க, எம்மைப் பற்றிய தெளிவைக் கொடுப்பதற்கு எங்களுடைய கையிலே ஒரு ஊடகமாவது இல்லை. இலங்கையில் பிரதான தொலைக்காட்சியில் கூட மாத்திற்கு இரண்டரை மணித்தியாலங்கள் தான் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு வாரத்தில் இருபத்தைந்து நிமிடங்கள் தான் ஒதுக்கப்பட்டுள்ளன. அதுவும் யாருமே பார்க்காத நேரங்களில் தான் ஒளிபரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு நேரம் என்று இல்லை. இதில் எம்மைப் பற்றி நாம் எப்படி மற்றவர்களுக்கு சொல்வது?
வடக்கு யுத்தத்pன் போது வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் அங்குள்ள தமிழ் மக்களோடு இணைந்து போராடியிருப்பின் இன்று இலங்கை நாட்டின் தலைவிதி ஈழமும் இலங்கையுமாகப் பிரிந்திருக்கும் அவ்வாறு நடைபெறாமல் தேச ஒற்றுமைக்காக இந்தப் பெரிய பங்களிப்பை செய்த முஸ்லிம் சமூகம் யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகியும்கூட இன்னும் சரியாக குடியேறவவில்லை. இவற்றை பேசுவதற்கு எங்களிடம் ஊடகங்கள் இல்லை.
பல பங்களிப்புக்களை எமது நாட்டுக்காக முஸ்லிம்கள் செய்துள்ளனர். இது பற்றிய அறிவையும் தெளிவையும் பெரும்பான்மை சமூகம் உணர்ந்து ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் எங்களை பெரும்பான்மை சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சிகளுக்கு பதிலாக அமையும். இது பற்றிய தெளிவை வழங்க எம்மிடம் சரியான ஒரு ஊடகம் கூட இல்லை. ஆனால் எமது சமூகம் இது பற்றிய உணர்வே இல்லாமல் இருக்கிறது.
இச்சஞ்சிகை முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இது மிகத்தரமானதாக இன்னும் கவர்ச்சிகரமானதாக வெளியிட வேண்டும். உங்களுக்கு மிகச் சிறந்த உதாரணம் இந்திய ஜமாஅதே இஸ்லாமி வெளியீடான ஷசமரசம்' அதில் அழகான அட்டைப்படம், பிரயோசமான உள்ளடக்கம் என கவர்ச்சியாக உள்ளது. இது சமரசத்தை வாங்கத் தூண்டுகின்றது. இதுபொல பீனிக்ஸ் சஞ்சிகையையும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நவீன கலைத்துறையையும் நவீன நுணுக்கங்களையும் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறான சஞ்சிகைகள் வரும், இடையில் நின்றுவிடும். இது பொருளாதாரத்தோடு சம்பந்தப்பட்டது. எனவே, சங்கம் இதனை வாங்க வேண்டும். வாங்கினால் தான் பீனிக்ஸ் உயிர் பெறும். இதுபோல இலங்கை வரலாற்றில் நூற்றுக் கணக்கான முஸ்லிம் பத்திரிகைகள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையில் முதலாவது பத்திரிகையை வெளியிட்ட மர்ஹும் சித்திலெப்பை அவர்கள் முஸ்லிம் நேசனை வெளியிட்ட பிறகு செய்த ஆய்வில் 125 இற்கும் மேற்பட்ட பத்திரிகைகள் வெளியாகி ஒரு வருடம், இரண்டு வருடங்கள் மட்டுமே இருந்து இறந்து விட்டன. இந்த பீனிக்ஸ் இவ்வாறு இறந்து விடக்கூடாது. அதற்கு நாம் கைகொடுத்து உதவ வேண்டும். வசதி படைத்தவர்கள் விளம்பரம் வழங்கி உதவ வேண்டும். அதே போன்று மற்றவர்கள் வாங்க வேண்டும். இதன் விலை அறுபது ரூபா. இன்று அறுபது ரூபாவால் எதனையும் செய்ய முடியாது.
சிங்கள சமுதாயத்தைப் பார்த்தால், அவர்களது பத்திரிகைக் கடைக்குப் போய் பார்த்தால் அவர்களுக்கு பல பத்திரிகைகள் வெளிவருகின்றன. ஒவ்வொரு வயது மட்டத்தினருக்குமான பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன. தூரத்திலிருந்து வரும் தாய்மார் சனி, ஞாயிறு தினங்களில் பல பத்திகைகளை வாங்கிக் கொண்டு போவார்கள். எமது எத்தனை தந்தைமார் இவ்வாறு பத்திரிகைகள் வாங்குகின்றனர்?
சிங்கள சமூகத்துடன் நாம் போட்டி போட முடியாத அளவுக்கு அவர்கள் வாசிக்கின்றனர். இலட்சக்கணக்கான புத்தகங்கள் நாளாந்தம் வெளிவருகின்றன. எமது சமூகத்திலும் இவ்வாறான நிலைமை ஏற்பட வேண்டும். இவ்வாறு மாறினால் தான் எமக்க இவ்வுலகின் நிலையை அறிந்தத கொள்ள வசதியாக இருக்கும்.
எதிர்காலத்தில் சலுகைக்கு இடம் கிடைக்காது, திறமைக்குத்தான் இடமிருக்கும்! இவ்வாறான தரத்திற்கு நாம் எமது பிள்ளைகளை வளர்க்க வேண்டும். இதற்கு, இவ்வாறான தரத்திற்கு எம் பிள்ளைகள் உருவாக இதுபோன்ற சஞ்சிகைகள் உதவும். இன்ஷா அல்லாஹ் இப்படியான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற மனவுறுதியோடு இந்த மண்டபத்தை விட்டு வெளியேறுங்கள். உங்களை சூழ உள்ளோருக்கும் இதனை சொல்லுங்கள். இவர்களை கைதூக்கி விடவேண்டும். அதன் மூலம் எமது சமூகம் எழுச்சி பெறும்.
Post a Comment