இந்தியா என்ன கூறியது என்பதை மக்களுக்கு அரசாங்கம் விளக்க வேண்டும் - அஸாத் சாலி
அரசியல்யாப்பின் 13வது திருத்தச் சட்டம் குறித்து இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்துக்களை இலங்கை மக்களுக்கு அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அரசியல்யாப்பின் 13வது திருத்தத்தில் ஒரு தலைப் பட்சமாக மாற்றங்களைக் கொண்டுவர இலங்கை அரசால் முடியாது என்றும் அதில் எந்த மாற்றங்களும் இன்றி அதன் தற்போதைய வடிவத்திலேயே அது பேணப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியிருப்பதாக இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஆனால் ஜனாதிபதியின் விஷேடபிரதிநிதியாக இந்தியா சென்று இந்திய உயர் மட்டத்தோடு பேச்சுக்களை நடத்திய அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தில் கடும் மௌனம் சாதிக்கின்றார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சில பேச்சுவார்த்தைகள் கணவன் மனைவிக்கு இடையிலான பேச்சுக்களைப் போன்றது எல்லாவற்றையும் வெளியில் கூற முடியாது என்று சமாளித்துள்ளார் என்று உள்ளுர் பத்திரிகைகளில் செய்திகளைக் காணக் கூடியதாக உள்ளது.அப்படியே எடுத்துக் கொண்டாலும் கூட யார் கணவன் யார் மனைவி என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரியாதே அதை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும் அல்லவா? என்று வினா எழுப்பியுள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவா அஸாத் சாலி. அவர் இதுபற்றி ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது.
இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலம் அல்ல என்று பொது பல சேனா இந்திய உயாஸ்தானிகராலயத்துக்கு ஊர்வலமாகச் சென்று எச்சரிக்கை விடுக்கின்றது. சிவசங்கர் மேனன் இலங்கை வரலாம் ஆனால் அவர் 13வது திருத்தம் பற்றி வாய் திறக்கக் கூடாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நிபந்தனை விதிக்கின்றது. ஜனாதிபதியின் செயலாளரும் பாதுகாப்பு செயலாளரும் 13வது திருத்தத்தின் தீமைகள் என்று தினசரி தமது கற்பனையில் உதிக்கின்றவற்றையெல்லாம் பத்திரிகைகளில் பட்டியல் இட்ட வண்ணம் உள்ளனர். இப்படி அரசுக்கு முழு ஆதரவு வழங்கும் இனவாத சக்திகள் எல்லாம் இன்று இந்திய எதிர்ப்புச் சக்திகளாக தூண்டிவிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மட்டும் தனது விஷேட பிரதிநிதியாக இ;தியாவை சமாளிப்பதற்காக பஷில் ராஜபக்ஷவை இந்தியாவுக்கு அனுப்பி இந்தியாவை தாஜாபண்ண முயற்சி செய்கிறார்.
இலங்கை இந்தியாவின் மாநிலம் அல்ல அது எமக்கும் நன்றாகத் தெரியும்.அதில் இமக்கு சந்தேகமும் இல்லை. ஆனால் 13வது திருத்தச் சட்டத்தைப் பொருத்தமட்டில் இந்தியாவை மீறி இலங்கையால் எதுவும் செய்ய முடியாது.தமிழ் மக்களுக்கு நியாயாமான ஒரு தீர்வை nhற்றுக் கொடுக்க வேண்டிய சர்வதேச ரீதியான கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என்பதுதான் நாம் மீணடும் மீண்டும் வலியுறுத்த விரும்பும் விடயமாகும்.இந்த விடயத்தில் யதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல் அர்த்தமற்ற கோஷங்களை எழுப்பிக் கொண்டு,விடயம் புரியாமல் வீதியில் இறங்கி மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இனவாதக் கும்பல்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் பெரும் கூச்சல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ள 13வது திருத்தச் சட்ட விடயத்தில் உண்மையிலேயே அரசு ஒரு ஸ்திரமான நிலையில் இருந்தால் ஏன் பஷில் ராஜாக்ஷ அவசரமாக இந்தியா செல்ல வேண்டும்? அவர் அங்கு பேசிய விடயங்களை குறிப்பாக இந்தியா அவருக்கு என்ன கூறியது என்பதை நாட்டு மக்களுக்கு ஏன் மறைக்க வேண்டும்? வேளியே சொல்ல முடியாத அளவுக்கு இந்தியா அவருக்கு கூறிய அல்லது அவர் இந்தியாவுக்கு கூறிய பரம இரகசியம்தான் என்ன? இவற்றை தெரிந்து கொள்ளும் உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இல்லையா?
13வது திருத்தத்தை உண்மையிலேயே நீக்க அரசுக்கு உத்தேசம் இருக்குமானால் ஏன் அரசு அதே சட்டத்தின் கீழ் இன்னும் மூன்று மாகாணங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது? வட மாகாண சபை சர்ச்சைக்குரியது அது ஒரு புறம் இருக்கட்டும். ஏனைய இரண்டு மாகாணங்களுக்குமான ஆயுள் காலம் இன்னும் ஒரு சுமார் ஒரு வருடம் இருக்கையில் அவற்றை கலைத்து இதே திருத்தத்தின் கீழ் தேர்தல் நடத்த அரசு முடிவு செய்தது ஏன்? ஒருபறம் பாராளுமன்ற தெரிவுக் குழு 13வது திருத்தம் பற்றி ஆராய இருப்பதாகக் கூறப்படுகின்றது. மறுபுறம் அதே 13வது திருத்தத்தின் மூலம் மேலும் மாகாண சபை தேர்தல்களை அரசு நடத்தவுள்ளது. இப்படி முரண்பாடுகளின் மொத்த வடிவமாகவே இன்றைய அரசு திகழுகின்றது.
இந்த நிலை மாற வேண்டும் மக்களை குழப்பும் போக்கை அரசும் அதன் இனவாத ஆதரவு சக்திகளும் நிறுத்த வேண்டும். உண்மையான நிலைமைகளை அரசு மக்களுக்கு உடனடியாகத் தெளிவு படுத்த வேண்டும் என்று அஸாத் சாலி கேட்டுள்ளார்.
தேசிய ஐக்கிய முன்னணி
ஊடக பிரிவு
Post a Comment