Header Ads



வடமாகாண சபைத் தேர்தல் - முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?

(எம்.முஹம்மத்)

வடமாகாண சபைக்கான  தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் வடமாகாணத்தில் மீளக்குடியேறி வாழும் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்று சற்று அலச வேண்டியுள்ளது.  

வடமாகாணத்திலுள்ள மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட முஸ்லிம்கள் என்று ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

ஆனாலும் இம்முஸ்லிம்களின் பொதுவான ஒரு பிரச்சினைகளாக இம்முஸ்லிம்களின் வீடுகள் சொத்துக்கள் என்பன அழிக்கப்பட்டுள்ளமை, அந்த இழப்புகளுக்கான நஷ்டஈடுகள் கிடைக்காமை, மீள்குடியேற்றத்துக்கான உதவிகள் கிடைக்கப் பெறாமை, வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமை போன்ற காரணங்கள் உள்ளன. 

தற்போது வடக்கில் இடம்பெறப்போகும் தேர்தல் இம்முஸ்லிம்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. இத்தேர்தலில் போட்டிக்கு இறங்கியுள்ள சுதந்திர ஐக்கிய முன்னனி அரசாங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளில் எக்கட்சி முஸ்லிம்களின் பிரச்சினைகளை தேர்தலுக்கு முன்பு தீர்க்கின்றதோ அக்கட்சிக்கே முஸ்லிம்கள் வாக்களிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. 

வடமாகாணத்தை பொறுத்த வரை நிர்வாக பதவிகளில் இருக்கும் சிலர் முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதை விரும்பவில்லை. இதன் காரணமாக முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு வழங்கப்பட வேண்டிய 25000 ரூபா கொடுப்பனவு, தளபாடங்கள் சமையல் பொருட்களுக்கான கொடுப்பனவுகள், மீள்குடியேற்ற உதவி கொடுப்பனவுகள் மற்றும் இந்திய வீடமைப்பு திட்டத்தினூடான 550000 ரூபா உதவி என்பன கடந்த நான்கு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் வாழும் உள்ளக பிரதேசங்களுக்கான வீதிகள் சீர் செய்யப்படாமல் கிடக்கின்றன. பள்ளிவாசல்கள் பாடசாலைகள் மற்றும் சமூகநல சொத்துக்கள் என்பன அழிந்து போய் காணப்படுகின்றன. இவற்றை புனரமைக்க வேண்டியுள்ளது. இவற்றை யெல்லாம் செய்து கொடுக்காமல் தமது கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கேட்டால், அவ்வாறு வாக்களிக்க வடமாகாண முஸ்லிம்கள் ஒன்றும் அறிவில்லாதவர்கள் இல்லை. 

மிக நீண்ட காலமாக  நிறைவேற்றப்படாத இந்த தேவைகள் தேர்தலுக்கு முன்பதாக அதாவது ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பதாக நிறைவேற்றப்பட்டாலே வடமாகாண முஸ்லிம்கள் தமது வாக்குகளை வழங்குவார்கள். அல்லாதுவிடின் வேறு ஒரு கட்சிக்கு வாக்களிக்கவோ அல்லது தேர்தலை பகிஸ்கரிக்கவோ செய்வார்கள். 

1 comment:

  1. நல்லதொரு கோரிக்கைதான். ஆனால் அதையும் அரசாங்கத்திலுள்ள எமது முஸ்லிம் ம(த)ந்திரிமார்கள் கச்சதிமாகக் காரியம் பார்த்து வாக்குப்பெட்டி தூக்கியதும் கை கழுவி விடுவார்கள்.

    எப்படியென்று கேட்கிறீர்களா?

    எமது கிழக்கிலும் மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற முன்னர் எமது பிரதேசத்திலுள்ள சில தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டாக வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தபோது அதை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்.

    மள மளவென்று நாளாந்தம் அடிக்கற்கள் நாட்டப்பட்டன. டிப்பர் டிப்பர்களாக கருங்கற்கள், கிறவல்கள் கொட்டப்பட்டன. மஞ்சள் நிறத்திலான பல ரகமான கன ரக வாகனங்கள் ஊரெங்கும் இராப்பகலாக ஓடித்திரிந்தன. சில வீதிகள் வடிகான் வேலைக்கென வெட்டப்பட்டன. மக்கள் மலைத்து விட்டார்கள்.

    காத்தான்குடிக் கடற்கரை எத்தனையோ மில்லின் கணக்கில் நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக்கூடம், பொது வசதிகள், நவீன இருக்கைகள் என்றெல்லாம் 'குட்டி மெரீனா' கடற்கரையாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் அபிவிருத்தி செய்யப்படும் என பாரிய கலர் கட்அவுட்கள் கடற்கரையெங்கும் பல இடங்களில் காணப்பட்டன.

    கடற்கரை வீதியெங்கும் கிறவல் குவியல் குவியலாகக் கொட்டப்பட்டு இருந்த வீதியின் அரைப்பகுதியை விழுங்கிக் கொண்டன.

    தேர்தல் தினம் மக்கள் சாரி சாரியாகச் சென்று வெற்றிலைக்கும் 1,2,3 என மூன்று இலக்கங்களுக்கும் வாக்களித்தார்கள்.

    மாலை 4 மணிக்குப் பெட்டிகள் தூக்கப்பட்டன. அதன் பின்னராக படிப்படியாக இரண்டொரு தினங்களில் எல்லா மஞ்சள் நிற கனரக வாகனங்களும், வெள்ளை நிற டிப்பர் வாகனங்களும் காணாமல் போயின.

    குவிக்கப்பட்ட கருங்கல் கிறஸர் தூள் கற்களை தவிசாளர் தனது சொந்தக் காணிக்கு வீதியமைப்பதற்காக அள்ளிச் சென்றார்.

    கடற்கரை வீதியில் கொட்டப்பட்டு குவியல் குவியல்களாகக் காணப்பட்ட கிறவல் கும்பங்களை அகற்றுமாறு பொதுமக்கள் ஊடகங்கள், இணையதளங்கள் மூலமெல்லாம் வேண்டுகோள் விடுத்து கடைசியில் சென்ற இரு வாரங்களுக்கு முன்னர்தான் அவை அகற்றப்பட்டுள்ளன.

    கர்பலா வீதிக்கு காபட் அமைப்போம். எதிர்கட்சி வேட்பாளர் கொங்றீட் வீதி அமைப்பதாகச் சொல்றார் அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இந்த வீதியில் இருபக்கமும் நாட்டுவதற்காக பிலா மரங்கள், தேசிக்காய் மரங்கள் எல்லாம் காடுகளில் இப்போது பிடுங்கப்படுகின்றன. பிரதான வீதி காபட் வீதியமைப்பு வேலை முடிந்த கையோடு இந்த வீதி வேலைக்காக அவர்கள் இறக்கப்படுவார்கள் என்றெல்லாம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நூறானியா ஜும்ஆப்பள்ளிக்கு அருகில் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து நள்ளிரவைத் தாண்டியும் அபிவிருத்தி பற்றிப் பேசினார்.

    இப்போது வெறும் கொங்றீட் றோட்தான் கால்வாசி வீதிக்கு இடப்பட்டுள்ளது.

    இப்படித்தான் வடக்கு முஸ்லிம்களின் வேண்டுகோளையும் ஆகஸ்ட் 23ம் திகதி நிறைவேற்றுவோம் என வடக்கு அமைச்சர்கள வாக்குறுதி தருவார்கள்.

    கிறவலும், கருங்கல்லும் வீதியெங்கும் கொட்டப்படும். வாகனங்கள் ஓடித்திரியும். கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். எல்லாமே ஆகஸ்ட் 20ம் திகதி வாக்களிப்பு முடிந்ததும் காணாமல் போய் விடும்.

    பிறகு இருக்கவே இருக்கிறது ஜாப்னா முஸ்லிம் போன்ற எமது சமூக ஊடகங்கள். மக்கள் அழுதழுது கேட்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே சிந்தித்துச் செயல்படுவோம்.

    இக்கருத்தை எழுதும் நான் கிழக்கில் காத்தான்குடியைச் சேர்ந்தவன். அதற்காக நான் வடக்கு பற்றி எழுதக்கூடாது என தயவு செய்து யாரும் தடையுத்தரவு இடாதீர்கள்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.