இஹ்வானுல் முஸ்லிமின் தலைமையகம் சூறையாடப்பட்டது - இராணுவமும் காலக்கொடு (வீடியோ)
எகிப்து ஜனாதிபதி மொஹம்மட் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகம் அரச எதிர்ப்பாளர்களால் தீ மூட்டப்பட்டுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தேசிய தலைமையகத்தை நேற்று அதிகாலை ஆக்கிரமித்த எதிர்ப்பாளர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். இதன்போது கட்டிடத்திற்குள் இருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உறுப்பினர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டையும் வெடித்துள்ளது.
இதில் ஒரு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உறுப்பினர் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட் டடிருப்பதாக அந்நாட்டு அரச ஊடகமான மனா குறிப்பிட்டுள்ளது.
எகிப்தில் தொடரும் வன்முறைகளில் இதுவரை குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. இதில் ஜனாதிபதி முர்சிக்கு ஆதரவானவர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கெய்ரோவில் இடம்பெற்ற மோதல்களிலேயே கொல்லப்பட்டுள்ளனர். மத்திய மாகாணமான அசைதாவில் மூவரும், கரையோர நகரான அலக்சான்ட் ரியாவில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை தாக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் 6 மாடி தலைமையக கட்டிடத்திற்குள் நேற்றுக் காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடுருவி, அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்ததோடு ஜன்னல் மற்றும் கதவுகளையும் உடைத்து அழித்தனர். இதன்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அடையாளச் சின்னத்தை அகற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டிடத்தின் மாடி வாயிலில் நின்று எகிப்து தேசிய கொடியையும் அசைத்தனர்.
இதேவேளை எகிப்து இராணுவம் 2 தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலைமைகள் முடிவுக்கு கொண்டுவரப்படாவிடின் இந்த விவகாரத்தில் இராணுவம் தலையிட்டு, இராணுவ ஆட்சி அல்லது புரட்சிக்கு வழியேற்படுமென சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment