ஹமாஸுடன் தொடர்புவைத்ததா முர்ஸியின் கைதுக்கு காரணம்..?
(Inne) எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரான முர்ஸி பாலஸ்தீன போராளி இயக்கமான ஹமாஸுடன் கொண்ட தொடர்பே அவர் கைது செய்யப்பட காரணம் என்று முர்ஸி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கூறியுள்ளார்.
எகிப்தில் மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரான முர்ஸி ஜூலை 3 அன்று ராணுவ புரட்சியின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். ராணுவமோ மக்கள் விருப்பத்துக்கு மாறாக முர்ஸி நடந்ததாலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டார் என கூறியது.
இச்சூழலில் கைது செய்யப்பட்ட முர்ஸி எங்கிருக்கிறார் என்பது ரகசியமாக உள்ளது. முர்ஸி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகள் குரல் கொடுத்த நிலையில், இன்று முர்ஸிக்கு ஆதரவாக மிகப் பெரும் பேரணிகள் நடத்தப்படும் என்று முர்ஸியின் கட்சியான இக்வானுல் முஸ்லீமின் அறிவித்துள்ளது.
இப்பேரணிக்கு எதிர்பேரணி நடத்தி தீவிரவாதத்தை ஒழிக்குமாறு ராணுவம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், முர்ஸியின் கைதுக்கான காரணம் குறித்து முதல்முறையாக தகவல் வெளியாகி உள்ளது. எகிப்தின் சர்வதிகாரி முபாரக்கின் ஆட்சியின் போது சிறையில் இருந்த முர்ஸி முபாரக்கின் வீழ்ச்சியின் போது நடந்த மக்கள் எழுச்சியின் போது சிறையை உடைத்து வெளியேறினர்.
காஸாவை ஆட்சி செய்யும் பாலஸ்தீன போராளி இயக்கமான ஹமாஸின் உதவியுடனே முர்ஸி சிறையிலிருந்து வெளியேறியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உள்ளூர் மக்களின் உதவியுடனே முர்ஸி சிறையில் இருந்து வெளியேறியதாக இக்வானுல் முஸ்லீமின் தெரிவித்துள்ளது.
Post a Comment