Header Ads



'முதுகெலும்பற்ற அரசியல்வாதிகளை வைத்துகொண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளதென காட்டாதீர்கள்'

(Adt) ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் என்று தயா மாஸ்டரின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் பிரேரிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். ஆகவே அரசாங்கம் மனது வைத்தால் நேற்றைய பயங்கரவாதி, நாளைய வட மாகாண முதலமைச்சர் என்று தன்னை சொல்லிக்கொள்ளலாம். 

புலிகளின் முன்னாள் ஊடக துறை பொறுப்பாளரான நண்பர் தயா மாஸ்டரை என்னைவிட ஊடகத்துறையினருக்குத்தான் நன்கு தெரியும். வடக்கின் முதலமைச்சர் ஆவதற்கு அரசு மனது வைத்தால் மட்டும் போதாது, மக்கள் மனது வைக்க வேண்டுமென்பதை அவர் அறிவார் என நினைக்கின்றேன். 

முதலமைச்சர் ஆனாலும், ஆகாவிட்டாலும், முன்னாள் புலிகளாக இருந்து இந்நாள் சிங்கங்களாக மாறிவிட்ட இவர்களுக்கு ஒரு தார்மீக கடமை இருக்கின்றது. உங்களது பொது ஆணைகளை ஏற்று, புலிகளுக்கு தண்ணீர் தந்தார்கள், சாப்பாடு தந்தார்கள், என சிறைகளில் இன்று தமது வாழ்க்கைகளை தொலைத்துவிட்டு வாடும் சுமார் ஆயிரம் பேரை விடுவிப்பதுதான் இந்த கடமை என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று (10) கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, 

நீங்கள் அமைத்துள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு, ஆரம்பிப்பதற்கு முன்னரே புஸ்வான தெரிவுக்குழுவாக மாறிவிட்டது. சிங்களத்தில் இதை "புஸ்வெடில்ல" என்று சொல்வார்கள். அதுதான் பொருத்தமான பெயர். அங்கே தமிழர்களின் அதிக வாக்குகளை பெற்ற கட்சிக்கும், முஸ்லிம்களின் அதிக வாக்குகளை பெற்ற கட்சிக்கும் இடம் இல்லை. அரசாங்கத்துக்கு உள்ளே சர்வகட்சி மாநாட்டுக்கு தலைமை வகித்த திஸ்ஸ விதாரணவுக்கும் இடம் இல்லை. இப்படியான தெரிவுக்குழுவை, புஸ்வான தெரிவுக்குழு சொல்லாமல் வேறு என்ன பெயர் சொல்லி அழைப்பது? 

முதுகெலும்பும், தன்மானமும் இல்லாத சில விலை போன தமிழ் பேசும் அரசியல்வாதிகளை வைத்து கொண்டு தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருக்கின்றது என காட்ட முயற்சிக்க வேண்டாம். உங்களுக்கு துணிவும், நேர்மையும் கொஞ்சமாவது இருந்தால், திஸ்ஸ விதாரண குழுவினர் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளித்த இனப்பிரச்சினை தீர்வுக்கான உங்கள் அரசாங்கத்தின் ஆலோசனை அறிக்கையை, உடனடியாக பகிரங்க படுத்தி, அதிகாரபூர்வமாக வெளிப்படுத்துங்கள். பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 13ம் திருத்தம் ஆகிய அனைத்து ஆவணங்களையும் மேஜையில் வையுங்கள். 

No comments

Powered by Blogger.