ஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்காத அமெரிக்கா
அமெரிக்காவின் என்எஸ்ஏ உளவு நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஸ்நோடென், சீனாவின் செல்போன் நிறுவனங்களை ஊடுருவி அமெரிக்கா தகவல்களை திருடியதாக வெளியிட்ட விவகாரம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணுவ ரகசியங்களை வெளியிட்டதாக ஸ்நோடென்னை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ஹாங்காங்கில் தஞ்சம் அடைந்த ஸ்நோடென் அமெரிக்காவின் எதிரி நாடுகளான கியூபா வழியாக வெனிசூலா தப்ப முயன்றார். இதற்கிடையில் அவரது பாஸ்போர்ட்டை அமெரிக்கா முடக்கியுள்ளது.
இதில் ஸ்நோடென்னுக்கு ஆதரவாக ஏற்கனவே அமெரிக்காவின் வேட்டையில் சிக்கி தற்போது லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள விக்கிலீக்ஸ் இணையதளத்தின் அதிபர் ஜூலியன் அசாஞ்சே ஆதரவு கரம் நீட்டியுள்ளார். இதற்கிடையில் தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டும் என்று ஸ்நோடென் விடுத்த கோரிக்கையை ஈகுவடார் அரசு பரிசீலித்து வருகிறது.
ஸ்நோடென்னை மடக்குவதற்காக ஈகுவடார் அதிபர் ரபேல் கோரியாவிடம் ஸ்நோடென்னுக்கு தஞ்சம் அளிக்கக் கூடாது என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் ஸ்நோடென் வெளியிட்ட ஆவணங்களின் மற்றொரு பகுதியில் அமெரிக்கா தனது நாட்டில் நியுயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகளான இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களை வேவு பார்த்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்நோடென் விவகாரத்தில் பகீர் திருப்பமாக ஐரோப்பிய தூதரகங்கள் அமெரிக்காவால் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஐரோப்பிய நாடுகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
Post a Comment