Header Ads



வலிப்பு நோயை போக்க கரண்டியால் தாய் அடித்ததில் 6 வயது சிறுமி வபாத்

வலிப்பு நோயால் துடித்த 6 வயது மகளை அவரது தாய் மற்றவர்கள் கூறியதால் ஸ்டீல் கரண்டியால் அடித்துள்ளார். இதில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்தாள். மகளின் சடலத்தை பார்த்து தாய் கதறி அழுதார். ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் அடுத்த சிங்காடிகுண்டா பகுதியை சேர்ந்தவர் கவுசியா பேகம் (28). கணவரை பிரிந்து மகள் பர்ஷா பேகம் (6), மகன் ரேஹான் (4) ஆகியோருடன் தனியாக வசிக்கிறார். 

சில ஆண்டுகளாக சிறுமி பர்ஷா பேகம், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். தொடர் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. இதனால் வேதனை அடைந்த கவுசியா பேகம், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தனது மகள் நிலை பற்றி அடிக்கடி கூறி வேதனைப்பட்டுள்ளார். அப்போது சிலர், வலிப்பு வரும்போது முதுகில் ஸ்டீல் கரண்டியால் லேசாக அடித்தால் சரியாகி விடும் என யோசனை கூறியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பர்ஷா பேகத்துக்கு வலிப்பு வந்தது. உடனடியாக கவுசியா பேகம் ஸ்டீல் கரண்டியால் சிறுமியின் முதுகில் 3 முறை அடித்துள்ளார். அப்போதும் வலிப்பு நிற்கவில்லை. அதனால் பலமுறை ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுமி, வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தாள். அதிர்ச்சி அடைந்த கவுசியா பேகம், கதறினார். அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், பர்ஷா பேகத்தை மீட்டு உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு கவுசியா பேகம் கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

1 comment:

Powered by Blogger.