24 வது மாடி ஜன்னல் கம்பியில் தலை சிக்கி தவித்த 5 வயது சிறுமி மீட்பு (படம்)
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் 24–வது மாடி வீட்டின் ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் அந்தரத்தில் தவித்த 5 சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள். இந்த வினோத சம்பவம் சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள தலாய் என்ற இடத்தில் நடந்தது.
இந்த நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 24–வது மாடியில் வசிக்கும் ஒரு பெண், தனது 5 வயது மகளை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு ஏதோ வேலையாக வெளியே சென்று இருந்தார். அந்த வீட்டில் காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்துக்காக பக்கவாட்டில் பெரிய ஜன்னல் உள்ளது.
அந்த ஜன்னல் கம்பியில் ஏறி நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமி, கம்பியை பிடித்தபடியே எப்படியோ வெளியே வந்து விட்டாள். வெளியே வந்த அவள் மீண்டும் வீட்டுக்குள் செல்ல முயன்ற போது, கம்பிகளுக்கு இடையே தலையை நுழைத்து விட்டாள்.
ஆனால் உடலை உள்ளே நுழைக்க முடியாததால் தலை உள்ளேயும், உடல் வெளியேயுமாக கம்பியை பிடித்தபடி ஜன்னலில் நின்றபடி பயத்தில் அழத்தொடங்கி விட்டாள். அதே குடியிருப்பில் பக்கத்து வீட்டில் படித்துக் கொண்டிருந்த ஒரு பெண், திடீரென்று அழுகை சத்தம் கேட்டதும், தனது வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார்.
அப்போதுதான், தலை ஜன்னலில் சிக்கியபடி 70 மீட்டர் உயரத்தில் சிறுமி அந்தரத்தில் தவித்துக் கொண்டு இருப்பது அவருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனே இதுபற்றி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதற்குள் அங்கு ஏராளமான பேர் கூடி விட்டனர். பத்திரிகை மற்றும் டெலிவிஷன் கேமராமேன்களும் வந்து குவிந்து விட்டனர். தீயணைப்பு படையினர், பக்கத்து வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து அதன் வழியாக ஒருவரை வெளியே அனுப்பினார்கள்.
அந்த நபர் தவறி கீழே விழுந்துவிடாமல் இருக்க, அவரது இடுப்பில் கயிற்றை கட்டி பிடித்துக் கொண்டனர். வெளியே வந்த அந்த வாலிபர், ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை சிக்கி இருந்த சிறுமியை லாவகமாக வெளியே எடுத்து பத்திரமாக கொண்டு வந்தார்.
சிறுமி பயத்தில் மிரண்டு போய் இருந்த போதிலும், காயம் எதுவும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டாள். அதன்பிறகே சிறுமியின் பெற்றோரும், அந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவர்கள் மீட்புக்குழுவினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இக்குளந்தைக்கு அல்லாஹ் வளங்கிய ஆயுட்காலம் இன்னும் இருக்குறது.
ReplyDeleteஆச்சிரியப்பட வேண்டிய விடயமல்ல இது......
سبحان الله رب العالمين