Header Ads



மீள்குடியேறிய மக்களுக்கு குடிநீர், சுகாதார வசதி - 116 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

(ஏ.எல்.எம். தாஹிர்)

மீள்குடியேறிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சு 116 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேறிய மக்களின் அத்தியவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் பொருட்டு அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன் ஒருகட்டமாக மீள்குடியேறிய மக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதார  வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை செய்து கொடுப்பதற்கும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டம் கடந்த மார்ச் மாதம் 24ம் திகதியன்று மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற விசேட கூட்டம் ஒன்றின் போது மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

30 வருடகால துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு இத்திட்டமானது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 2012 வருட குடிசன புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மிகக் குறைந்தளவில் மலசல கூடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலமையினைக் கவனத்தில் கொண்டு மீள்குடியேற்ற அமைச்சு இரு மாவட்டங்களுக்கும் முறையே 28.56 மில்லியன் மற்றும் 20.0 மில்லியன் ரூபாய்களையும் ஒதுக்கியுள்ளது. 

இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட இருக்கும் முதற்கட்ட திட்டத்தின் மூலம் மீள்குடியேற்றப்பட்ட 1395 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. மேலும் 164 வெட்டுக் கிணறுகள் அமைக்கப்படுவதன் மூலம் 1640 குடும்பங்களும் இத்திட்டத்தினால் பயனடையவுள்ளன. 

மீள்குடியேற்ற அமைச்சு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்ட செயலகங்களின் அனுசரனையுடன் அம்மாவட்ட மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மதிப்பீடு செய்துள்ளது. கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேற்கொள்ள அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுவரை மீள்குடியேற்ற அமைச்சினால் வடமாகாணத்தில் 153,012 குடும்பங்களும் கிழக்கு மாகாணத்தில் 72,464 குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.