மிகவும் திறந்த மனதுடனேயே செயற்படுகிறோம் - அமைச்சர் றிசாத்
(முல்லைத்தீவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கில் வாழும் சகல சமூகத்தினதும் மேம்பாடுகளுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய இரு கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி என்பன செயற்படுவதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன்,நானும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் அமைச்சரவையிலும் வெளியிலும் மிகவும் திறந்த மனதுடனேயே செயற்படுவதாகவும் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 160 பேருக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை காலை மறுதயன்பற்று பிரதேச செயலகக் கட்டிடத்தில் இடம் பெற்ற அமைச்சர் போது மேற்கண்டவாறு கூறினார்.
முல்லை அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேஷ் சந்திர குமார்,ஹூனைஸ் பாருக்,ஜனாதிபதியின் இணைப்பாளர் கணகரத்தினம்,அமைச்சரின் இணைப்பு செயலாளர்களான றிப்கான் பதியுதீன்,ஜனுாபர் உள்ளிட்ட சமுர்த்தி ஆணையாளர் நாயகம் மற்றும் அதிகாரிகளும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு பேசும் போது-
வன்னி மாவட்டத்திற்கு தேவையான அபிவிருத்தி பணிகளை நாம் எவ்வித இனபாகுபாடு இன்றி தேவையின் அடிப்படையில் செய்துவருகின்றோம்,இந்த அபிவிருத்தி திட்டங்களை இங்கு கொண்டுவருவதில் எம்மால் முன்னெடுக்கப்படும் பணிகளை இன்று விமர்சிக்கின்றனர்.மக்களுக்கான நல்ல பணிகளை செய்யும் போது எம்மை இனவாதியாக காண்பிக்கின்றனர்.இதற்கு எல்லாம் நாம் அஞ்ஞப் போவதில்லை.கடந்த 30 வருடம் ஏற்படுத்திய அழிவுகளை நாம் மீட்டிப் பார்க்கின்றோம்.இனியும் அவ்வாறான ஒரு யுகத்துக்கு செல்ல முடியாது,ஆனால் சிலர் அதனை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.அதற்கு இன்று நியமனம் பெரும் அதிகாரிகளும் துணை போய் விடக்கூடாது.
வடக்கில் இன்று இன உறவு ஏற்பட்டுவருகின்றது.சிலர் அதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.எங்களைப் பொருத்த வரையில் எமது பார்வை எல்லாம் சகல மக்களுக்கும் பணி செய்வதே.நானும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மிகவும் நெருக்கமாக செயற்படுகின்றோம்.தமிழ் பேசும் மக்களின் விமோசனத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றுகின்றோம்.நான் அவருக்கு பலமாகவும்,அவர் எனக்கு பலமாகவும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம்.
இதனை சகித்து கொள்ள முடியாதவர்கள் எமக்கிடையில் பிரச்சினை இருப்பது போன்று காண்பிக்க முயலுகின்றனர்.வறுமைப்பட்ட மக்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்த நாம் முயற்சிக்கின்றோம்.ஆனால் சிலர் இம்மாவட்டத்தில் மீண்டும் மக்கள் இருண்ட யுகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இனவாதத்தை பேசுகின்றனர்.அதற்கு இந்த மக்கள் துணை போகமாட்டார்கள் என்பதை கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.
இன்று நியமனம் பெரும் இந்த அதிகாரிகள் அரச அதிகாரிகள் தங்களை நாடி வரும் சகல மக்களுக்கும் சமமான பணிகளை ஆற்ற வேண்டும்.அதே போல் தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு பங்கம் விளைக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.இந்த சமுர்த்தி திட்டத்தை நடை முறைக்கு கொண்டுவந்தவர் ஜனாதிபதி அவர்கள்,அதே போல் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்கள் இந்த வடமாகாண மக்களுக்கு செய்து வரும் பணிகளை நாம் இங்கு நினைவு கூற வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
இன்றிலிருந்து 6 தினங்களுக்கு சமுர்த்தி நியமனம் பெற்றுக் கொண்டவர்களுக்கான பயிற்சிகள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் அரசாங்கத்துடன் மிகவும் திறந்த மனதுடன் செயல்படுவது புரிகிறது!
ReplyDelete