'உடற்பருமன் ஒரு நோய்தான்' - அமெரிக்க மருத்துவ சங்கம் அறிவிப்பு
"உடற்பருமன் ஒரு நோய் இதை கட்டுப்படுத்தும் முயற்சியில் டாக்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்' என, அமெரிக்க மருத்துவ சங்கம் (எ.எம்.எ.,) தெரிவித்துள்ளது.
"உடற்பருமன் நோய் அல்ல, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், தகுந்த உடற்பயிற்சி இல்லாததாலும் தான் இது ஏற்படுகிறது. எனவே, இதை, ஒரு குறைபாடாக கருதவேண்டுமே தவிர, நோயாக கருதக்கூடாது' என, அமெரிக்காவில், பல ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, உடற்பருமனுக்கு சிகிச்சை பெற்றவர்கள், தங்களது மருத்துவ செலவினை திரும்பப்பெறாத நிலையில் இருந்தனர். மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும், உடற்பருமனுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு காப்பீட்டு தொகை, வழங்க முன்வரவில்லை. இந்நிலையில், "உடற்பருமன் என்பது ஒரு நோய்; நீரிழிவு நோய் டைப்-2, மற்றும் இதயக் கோளாறுகளுக்கு உடற்பருமனே முக்கிய காரணமாக கருதப்படுவதால், உடற்பருமனை நோயாக கருத வேண்டும்' என, அமெரிக்க மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ சங்க உறுப்பினர், டாக்டர் பட்ரைஸ் ஹாரீஸ் கூறியதாவது: அமெரிக்க மருத்துவ சங்கத்தின் இந்த அறிவிப்பு மூலம், நீரிழிவு நோய் மற்றும் இதயக் கோளாறுகளுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். காரணம், உடற்பருமனால்தான், இவை ஏற்படுகின்றன. உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவும் இயலும். இவ்வாறு, அவர் கூறினார்.
Post a Comment