Header Ads



உலக ரத்ததானம் தினம்

எதிர்பாராத விபத்து, மகப்பேறு, அறுவை சிகிச்சை, நோய் ஆகியவற்றின் போது, பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. உலகளவில் ரத்தத்தின் தேவை, ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. தேவைப்படும் ரத்தத்தை, இன்னொருவர் தானம் செய்தவன் மூலம் மட்டுமே பெற முடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்று கண்டுபிடிக்கப்படவில்லை.

ரத்ததானம் செய்வதன் மூலம், ஒருவருடைய உயிர் காப்பற்றப்படுகிறது. இன்னொருவருக்கு ரத்த தானம் செய்ய வழிகாட்டியாக அமைகிறது. இன்று நீங்கள் ரத்த தானம் செய்தால், அது நாளை உங்களுக்கு கூட பயன்படலாம். ரத்ததானம் செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 14ம் தேதி, உலக ரத்ததானம் செய்வோர் தினமாகவும், அக்., 1ம் தேதி தேசிய ரத்த தான தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

யார் வழங்கலாம்:

நல்ல உடல்நிலையுடன், 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்த தானம் செய்யலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த தானம் கொடுக்கும் முன், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்ய வேண்டும். உடலின் வெப்பநிலை 37.50 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சராசரியாக நமது உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின் போது, 350 மி.லி., ரத்தம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பம். 2 நாட்களில் இழந்த ரத்தத்தை மீட்டு விடலாம். 2 மாதங்களில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவுக்கு வந்து விடும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்த தானம் வழங்கலாம்.

பெறுவோருக்கு மட்டுமல்ல; கொடுப்பவருக்கும்:

ரத்தம் வழங்குவதால் மற்றவர் பயன்பெற்றாலும், தானம் செய்பவர்களுக்கும் பலன் அளிக்கிறது. புதிதாக ரத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதை கருதலாம். இதனால் தானம் செய்த ரத்தத்தை இழந்ததாக கருத வேண்டியதில்லை. ரத்தத்தில் இரும்புச் சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள தானம் உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பும், தானம் செய்யும் போது சீரடைகிறது. ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாக பிரித்து, ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்ளெட் என பயன்படுத்த முடியும். இதனால் மூன்று பேர் உயிரை ஒருவரால் காப்பாற்ற முடிகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பேருக்கு எதாவது ஒரு விதத்தில் ரத்தம் தேவைப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், உறவினர்கள், நண்பர்கள் மூலமே ரத்த தானம் செய்யப்படுகிறது. ஒவ்வொருவரும் தானாக முன்வந்து ரத்தானம் செய்தால் மட்டுமே, தேவையான ரத்தத்தை பெற முடியும்.

கொடுத்தாலும் குறையாத "தானம்':

அவசர உலகத்தில் விபத்தும், நோயும் தவிர்க்க முடியாத "தத்துப்பிள்ளைகளாகி' விட்டன. விபத்தில் அடிபட்டு, ரோட்டில் ரத்தம் வீணாக... ரத்தம் தந்து காப்பாற்றினால், உயிர்பிழைக்கும் மனிதஉயிர்கள் ஏராளம். முகமும், முகவரியும் தெரியாதவர்களுக்கு, நம்மால் எப்போதும் செய்ய முடிகிற, கொடுத்தாலும் குறையாத தானம்... ரத்ததானம் தான். 

No comments

Powered by Blogger.