கல்வி அதிகாரிகளாக முஸ்லிம்கள் இருப்பதை கண்டிக்கும் தமிழ் எம்.பி.
(adt) மத்திய கொழும்பு தமிழ் பாடசாலை அபிவிருத்தி சம்பந்தமாக மத்திய கொழும்பு சுதந்திர கட்சியின் இணையமைப்பாளரும் பிரதியமைச்சருமான பைசர் முஸ்தபா ஏற்பாடு செய்திருந்த இரட்டைக் கோபுர வர்த்தக வலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்திற்கு கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுக்காததையிட்டு இதனை முற்று முழுதாக புறக்கணிக்கிறேன்; என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது,
கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலை அபிவிருத்தி பல வருட காலமாக பின் தங்கிய நிலையிலேயே இருந்தது. மனோ கணேசனின் பாராளுமன்ற வருகைக்குப் பின்பு அவருடன் இணைந்திருந்த எனது பங்களிப்புடன் அபிவிருத்தி பாதையில் முன்னோக்கிச் சென்றுள்ளது.
இன்று புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய கொழும்பு இணையமைப்பாளரான பைசர் முஸ்தபா தமிழ் பாடசாலையின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்களை என்னை புறக்கணித்து செய்வாராயின் ஒரு போதும் தமிழ் மக்கள் மனதை வெல்ல முடியாது.
கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளில் குறை நிறைகளை முற்று முழுதாக கவனித்து வருபவன் நான். மத்திய கொழும்பு பதவியை முஸ்தபா பெற்றுக் கொண்டாலும் தமிழ் பாடசாலைகள் என்ற போர்வையில் முஸ்லிம் பாடசாலைகள் மட்டும் அவர் அபிவிருத்தி செய்வாராயின் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏற்கனவே மாகாண கல்வி மட்டத்தில் தமிழ் மொழி மூலம் என்ற பெயரில் கல்வி அதிகாரிகளாக முஸ்லிம் உதவி பணிப்பாளர்கள் இருப்பதை நான் முதலமைச்சரிடம் எனது கண்டனத்தை வன்மையாக தெரிவித்துள்ளேன்.
எனது தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்தி சம்பந்தமாக என்னை கருத்திற் கொள்ளாமல் பைசர் முஸ்தபா எடுக்கும் நடவடிக்கைகளை ஒரு போதும் என்னால் அனுமதிக்க முடியாது. ஆகவே மத்திய கொழும்பு தமிழ் மக்களின் ஆதரவை பைசர் முஸ்தபா பெற வேண்டும் என்றால் என்னுடன் இணைந்து அவர் செயல்பட வேண்டும்.
Post a Comment