முற்றிலும் ஆங்கில கல்வி போதிப்பதை எதிர்க்கிறோம் - ஜமாத் இ இஸ்லாமி
லாகூர்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் 1ம் வகுப்பு முதல் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டால் வரும் தலைமுறையினர் கல்வியறிவு இல்லாத இருட்டில் தள்ளப்படுவதைப் போன்ற அபாயம் ஏற்படும் என்று ஜமாத்,இ,இஸ்லாமி கட்சி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் 9 கோடி பேர் வசிக்கின்றனர். அங்கு அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் ஆங்கில வழி கல்வியும் போதிக்கப்படும் என்று மாநில அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து ஜமாத்,இ, இஸ்லாமி கட்சி தலைவர் சையத் முனவ்வர் ஹசன் கூறியதாவது:
ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டால் வரும் தலைமுறையினர் கல்வியறிவு இல்லாத இருட்டில் தள்ளப்படுவ தைப் போன்ற அபாயம் ஏற்படும். பஞ்சாப் மாகாண மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் குறிப்பாக கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அரசு துரோகம் இழைக்கிறது.
சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் பிற நிதி அமைப்புகளிடமிருந்து கடன் பெறுவதற்காக பஞ்சாப் மாகாண முதல்வர் ஷபாஸ் ஷெரீப் இவ்வாறு செய்துள்ளார். பல நாடுகளில் தாய் மொழியிலோ அல்லது தேசிய மொழியிலோதான் கல்வி போதிக்கப்படுகிறது. தொடக்கக் கல்வி உருது மொழியில் இருக்க வேண்டும் என்று அயூப்கான் தலைமையிலான ஆட்சியின்போது ஏற்படுத்தப்பட்ட ஹமுதுர் ரஹ்மான் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. ஆங்கிலத்தை ஒரு மொழியாக போதிப்பதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. முற்றிலும் ஆங்கில வழி கல்வியாக போதிப்பதை தான் எதிர்க்கிறோம் என்றார்.
Post a Comment