அறிக்கை விடுவதை முபாறக் அப்துல் மஜீட் தவிர்த்துக் கொள்வது சிறந்தது - கல்முனை மேயர்
தனது தனிப்பட்ட குடும்ப அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் எனக் கூறிக்கொண்டு முன்னும் தெரியாமல் பின்னும் தெரியாமல் பத்திரிகையில் அறிக்கை விடுவதை முபாறக் அப்துல் மஜீட் தவிர்த்துக் கொள்வது சிறந்த ஒரு நடவடிக்கையாக அமையும் எனக் கருதுகின்றேன். எனத் தெரிவித்து கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
மக்கள் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் நேற்று பத்திரிகை ஒன்றிற்கு விடுத்திருந்த அறிக்கைக்கு பதில் அறிக்கையிலே முதல்வர் சிராஸ் இவ்அறிக்கையினை விடுத்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது. காலத்திற்குக் காலம் கடைகளின் பெயர்களை மாற்றி நுகர்வோரை ஏமாற்ற நினைக்கும் வியாபாரிகள் போன்று கட்சியின் பெயரை மாற்றுகின்றவராகவும் எதிலும் தெளிவின்றி தான்தோன்றித் தனமாக சுய இலாபங்களிற்காக அறிக்கைகள் விடுபவராகவும் அதனையே தொழிலாக நினைத்து செயற்படுபவராகவும் மஜீட் செயற்படுவது வேதனை அளிக்கிறது.
கல்முனை மாநகர சபையின் அமைய மற்றும் நிமிர்த்த ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு தொடர்பில் அடியும் தெரியாமல் நுணியும் தெரியாமல் முபாறக் அப்துல் மஜீட் அறிக்கை விட்டதனால் என்ன இலாபத்தினை அடைந்தாரோ தெரியவில்லை.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் 2013.05.29ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் புதிய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் வேலைத் தொழிலாளிகளின் அடிப்படை தகைமையாக க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டு பாடங்களில் சீ அடங்கலாக ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு முன்னர் தரம் 08ஆம் ஆண்டு என்பது வேலைத் தொழிலாளிகளின் அடிப்படை கல்வித் தகைமையாக காணப்பட்டது.
இதனால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அமைய மற்றும் நிமிர்த்த அடிப்படையில் நியமனம் பெற்று கடமையாற்றுகின்ற பல ஊழியர்கள் 2014ம் ஆண்டு இடம்பெறவிருக்கும் நிரந்தர நியமனத்திற்கு தகுதியற்றவர்களாக காணப்படுகின்றனர். அத்தோடு எனது காலப் பகுதிக்கு முன்னர் இத்தகைய நியமனங்களிற்கு மாநகர சபையின் அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை என்பது ஊழியர்களின் சுயவிபரக் கோவையினை பரீட்சிக்கின்றபோது அறியக் கூடியதாக இருந்தது. முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தது போன்று 108 பேரும் என்னால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. அதுமட்டுமல்லாது எனது காலப்பகுதியில் நியமிக்கப்பட்டவர்கள் முறையான முறையில் சபையின் அங்கீகாரத்தினை பெற்று நியமனம் செய்துள்ளேன். நான் பதவிக்கு வந்து ஒன்னரை வருடங்கள் தான் ஆகுகின்றன ஆனால் இவ் ஊழியர்கள் 10 வருடங்களாக கடமையாற்றுகின்றனர். இவை தெரியாமல் மஜீட் முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்.
இப்புதிய ஆட்சேர்ப்புத் திட்டத்தினால் பாதிக்கப்படுகின்ற மாநகர ஊழியர்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையிலும், சுகாதார வேலைப் பிரிவில் கடமையாற்றும் ஊழியர்கள் தொடர்ந்தும் கடமைக்குச் செல்லாமல் இருப்பதனால் குப்பைகள் அகற்றப்படாமலும், வடிகான் துப்பரவு செய்யப்படாமலும் தொற்று நோய்கள் பரவக் கூடிய அனர்த்த நிலை காணப்பட்டதனாலும் முதல்வராகிய நான் விஷேட சபை அமர்வு ஒன்றை நேற்று (06.06.2013) கூட்டியிருந்தோன். இச்சபை அமர்வில் குறித்த ஊழியர்களை அமைய மற்றும் நிமிர்த்த அடிப்படையில் தொடர்ந்தும் கடமையாற்றுவதற்கான அங்கீகாரம் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு திட்டத்தில் காணப்படுகின்ற கல்வித் தகைமையினை குறைப்பதற்கு கௌரவ ஆளுநரை வேண்டிக் கொள்வது தொடர்பான பிரேரணை ஒன்று என்னால் சமர்ப்பிக்கப்பட்டது. இப்பிரேரணை சபை அமர்வில் கலந்து கொண்ட மாநகர சபை ஆளும்தரப்பு உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், ஏ.நிசார்டீன், ஐ.எம்.பிர்தௌஸ் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், சி.எம்.முபீத், எச்.எம்.எம்.நபார் ஆகியோரினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. மேற்படி பிரேணையினை கிழக்கு மாகாண ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன்.
இந்த நவீன யுகத்தில் தகவல் தொழில்நுட்பம் அடைந்துள்ள வளர்ச்சியினால் ஊடகத் துறையின் செய்தி பரிமாற்ற வேகம் வளர்ச்சி கண்டிருக்கும் இக்காலகட்டத்தில் சரியான தகவல்கள் தெரியாமல் ஊடகங்களுக்கு பிழையான அறிக்கைகளை வழங்குவதை முபாறக் அப்துல் மஜீட் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
Ahamed S. Mohideen
Media Secretary to the Hon. Mayor
Municipal Council
Kalmunai
Post a Comment