கல்முனையில் மாட்டு வண்டிகாரர் எதிர்நோக்கும் சவால்கள்..!
(ஏ.எல்.ஜுனைதீன்)
அம்பாறை மாவாட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் மாட்டு வண்டியைக் கொண்டு தொழில் செய்யும் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரம் நாளுக்கு நாள் தற்போது நலிவடைந்து வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.
“கல்முனைப் பிராந்திய கரையோர வண்டிற்காரர் நலன்புரி கூட்டுறவு அமைப்பு” என்ற பெயரில் சிறப்பாகத் தொழில் செய்து வந்த எங்களால் தற்போது குடும்பத்தைக் கொண்டு செல்லும் அளவுக்காவது நிம்மதியாகத் தொழில் செய்ய முடியவில்லை எனவும் கூறுகின்றனர்.
இவ் வண்டிக்காரர் நலன்புரி கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான ஏ. நிஸார் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தனது கஸ்ட நிலையைக் கூறுகையில் “கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தைக் காட்டி எங்களை கடற்கரையில் மணல் ஏற்றுவதற்கு பாதுகாப்புத் தரப்பினர் அனுமதிப்பதாக இல்லை. இப்பிரதேசத்தில் சுனாமி ஏற்படுவதற்கு முன் கடற்கரையில் மணல் ஏற்றுவதற்கு எங்களுக்கு பேர்மிட் தருவார்கள் அந்த நடைமுறை கூட இப்போது இல்லை.வீடு கட்டிக் கொண்டிருப்பவர்கள் அவசரத்திற்கு கடல் மண் கேட்டால் களவாக ஏற்றிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. பாதுகாப்புத் தரப்பினர் கடல் மண்ணோடு எங்களை பிடித்து விட்டால் எங்களின் கதி அதோ கதிதான்.
எங்கள் மாடுகளை உயிருடன் வைத்திருக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கு 200 ரூபாவுக்கு தவிடு வாங்கி சாப்பாடாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதே நேரம் குடும்பத்தைக் கொண்டு செல்ல வேண்டும் .மக்களைப் படிப்பிக்க வேண்டும். எங்களுக்கு சீரான தொழில் இல்லாத நிலையில் எமது வாழ்வைக் கொண்டு செல்வது மிகக் கஸ்டமாக உள்ளது.
இளம் வயதினர் இத் தொழிலை விட்டு வெளிநாடு செல்கின்றனர். ஆனால் வயது கடந்து போன எங்களால் வெளிநாடும் போக முடியாது வேறு தொழிலும் செய்ய முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம் .இப்பிரதேச அரசியல்வாதிகள் எங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு வழிகாட்ட வேண்டும் என்றார்.
Post a Comment