அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் பாப்பரசருக்கு விதித்துள்ள நிபந்தனை
(TN) முஸ்லிம்களின் உயர் நிறுவனமான அல் அஸ்ஹர், வத்திக்கானுடனான உறவை மேம்படுத்த விருப்பம் வெளியிட்டுள்ளது. எனினும் பாப்பரசர் பிரான்ஸிஸ், ‘இஸ்லாம் அமைதியான மார்க்கம்’ என பிரகடனம் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. “எமக்கு வத்திக்கானுடன் பிரச்சினை இல்லை. அதன் முன்னாள் தலைமயுடனே பிரச்சினை உள்ளது” என அல் ஹஸ்ஹரின் தலைமை இமாம் அஹமத் அல் தய்யிபின் இராஜதந்திர தூதுவர் மஹ்மூத் அப்தல் கவாத் குறிப்பிட்டுள்ளார். இத்தாலியின் நாளிதழான ‘இல் மஸ்ஸக்கரோ’ வுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். எனினும், அல் அஸ்ஹரின் வாயில் தற்போது திறந்திருப்பதாக அவர் கூறினார். ஓய்வுபெற்ற முன்னாள் பாப்பரசர் 16வது ஆசிர்வாதப்பர் காலத்தில் அல் அஸ்ஹர் மற்றும் ரோமன் கத்தோலிக்க தலைமையகமான வத்திக்கானுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது. 16ஆவது ஆசிர்வாதப்பர் 2006 ஆம் ஆண்டில், 14ஆம் நூற்றாண்டு பைஸாந்திய பேரரசரின் கூற்றை மேற்கோள்காட்டி, இறைத்தூதர் முஹம்மத் தீயதையும் மனிதாபிமானமற்றதையுமே கொண்டுவந்தார் என குறிப்பிட்டார். பின்னர் இது தனது தனிப்பட்ட கருத்து அல்ல என்று கூறிய அவர், அதற்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கவும் தவறிவிட்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து வத்திக்கானுடனான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் சம்பிரதாயமான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.
பின்னர் எகிப்து கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாப்பரசர் வெளியிட்ட கருத்தில் மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் துஷ்பிரயோகத்திற்கு முகம்கொடுத்து வருவதாக கூறினார். இந்த கருத்தை அடுத்து வத்திக்கானுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அல் அஸ்ஹார் அறிவித்தது. எனினும், புதிய பாப்பரசராக பிரான்ஸிஸ் தேர்வானதன் பின்னர் வத்திக்கானுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க முடியும் என அல் அஸ்ஹர் நம்பிக்கை தெரிவித்திருந்தது. எனினும் பாப்பரசர் தனது உரை ஒன்றில் “இஸ்லாம் அமைதியான மார்க்கம் என்றும் முஸ்லிம்கள் யுத்தம் அல்லது வன்முறையை விரும்பவில்லை என்றும் கூறும் பட்சத்தில் இரு தரப்பு உறவு மேம்படும்” என அப்தல் கவாத் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் 15ம் நூற்றாண்டில் உஸ்மானிய பேரரசின் இத்தாலி மீதான படையெடுப்பின் போது இஸ்லாத்தை ஏற்க மறுத்த 800 கிறிஸ்தவர்களுக்கு புதிய பாப்பரசர் கடந்த மே மாதம் புனிதத்துவப் பட்டம் வழங்கினார். இஸ்லாத்தையும் வன்முறையையும் தொடர்புபடுத்தி பாப்பரசர் புனிதப் பட்டம் வழங்குவதாக விமர்சனங்களும் எழுந்தன. எவ்வாறாயினும் எகிப்தின் கொப்டிக் கிஸ்தவ பாப்பரசரான இரண்டாவது டெவட்ரோவின் அழைப்பை ஏற்று பாப்பரசர் எகிப்துக்கு வருகை தரும் பட்சத்தில் அவரை அல் அஸ்ஹருக்கு அழைக்க தயாராக இருப்பதாக அப்தல் கவாத் தெரிவித்தார்.
Post a Comment