சுற்றுச்சூழல் காப்போம் என உறுதிகொள்ளுங்கள்..!
நாம் வாழும் இந்த பூமியில், எதிர்கால தலைமுறையும் நலமாக வாழ வேண்டுமெனில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். உலக நாடுகளுக்கு சவாலான பிரச்னையாக, சுற்றுச்சூழல் பாதிப்பு உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பநிலை உயர்கிறது. மழை குறைகிறது. அன்டார்டிகா, இமயமலை பகுதிகளில் பனிகட்டிகள் உருகுவதால், கடல்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உணவை வீணாக்காதீர் :
உலகில் ஆண்டுதோறும் 130 கோடி டன் உணவு வீணாக்கப்படுகிறது என ஐ.நா., உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவிக்கிறது. 7 பேரில் ஒருவர் பசியுடன் தூங்குகிறார். ஐந்து வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் குழந்தைகள் பசியால் இறக்கின்றன. 700 கோடி மக்களுக்கு உணவளிக்க, தற்போதைய பூமி தடுமாறுகிறது. உணவுப் பொருளுக்கு மூல காரணம் தண்ணீர். சுற்றுச்சூழல் சீர்கேட்டால், தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, "சிந்தித்தல், உண்ணுதல், சேமித்தல்' - என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்தாக வைக்கப்பட்டுள்ளது. இதன்படி உணவுப்பொருளை வீணாக்குவதை தடுப்பது; அனைவருக்கும் உணவு கிடைப்பது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. உணவு சாப்பிடுவதற்கு முன் சிந்தியுங்கள்; சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுங்கள் என அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.
எப்படி பாதுகாப்பது:
சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்கு, ஒருவர் நினைத்தால் முடியாது. கோடிக்கணக்கான மக்கள் நினைத்தால் சாத்தியமாக்கலாம். இதற்கு என்ன செய்யலாம்?
* தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
* வீடுகள், அலுவலகங்களில் குறைந்தது 2 மரங்களையாவது வளர்க்க வேண்டும்.
* பயணங்களுக்கு சொந்த வாகனங்களை தவிர்த்து, பேருந்தை பயன்படுத்தலாம்.
* வழக்கமான குண்டு பல்புகளுக்கு பதிலாக "சி.எப்.எல்.,' "எல்.இ.டி.,' பல்புகளை பயன்படுத்தலாம்.
* "ஏசி'யில் பயன்படுத்தப்படும் "ஏர்-பில்டர்'களை மாதத்துக்கு ஒருமுறையாவது சுத்தப்படுத்த வேண்டும்.
* வீட்டிலிருந்து புறப்படும் முன், மின்சாதன பொருட்கள் "சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
* மரம் மற்றும் கிரானைட் கற்களால் செய்யப்படும் பொருட்களை குறைத்துக் கொள்ளவும்.
* சூரிய சக்தியில் இயங்கும், "வாட்டர்-ஹீட்டர்'களை பயன்படுத்தலாம்.
* கடிதம் எழுதுவதை விட, இ-மெயில் மூலமான தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளலாம்.
* ஸ்பிரே பெயின்ட்களுக்கு பதில், பிரஷ்களையோ, ரோலர்களையோ பயன்படுத்தலாம்.
* கடைகளுக்கு செல்லும் போதே துணிப்பை எடுத்துச் சென்றால், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கலாம்.
* வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகளை அமல்படுத்த வேண்டும்.
* பேப்பரின் இரு புறங்களையம் பயன்படுத்த வேண்டும்.
இது போல ஒவ்வொருவரும், அன்றாட வாழ்க்கை முறையில் மாறுதல்களை செய்வதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிக்க முடியும்.
தண்ணீர் மாசுபடுவது ஏன்:
தண்ணீர் மாசுபடுவதற்கு தற்போதைய முறைகளே காரணம். பழைய முறைகளில் வீடுகட்டும்போதே சுற்றிலும் மரங்களை நடுவது என்று இருந்தது. இதன் மூலம் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, மரங்கள் உறிஞ்சுவதால் தண்ணீர் மாசுபடுவது தவிர்க்கப்பட்டது. தற்போது வீட்டுக்கழிவு நீர், சாக்கடைகள் வழியாக வெளியேறுகிறது. இவை நகர்புறங்களில் உள்ள நீர்நிலை ஆதாரங்களில் தேங்கி மழை நீர் தேங்கும் இடத்தில் மாசு ஏற்படுத்துகிறது.
மரம் வளர்த்தால் போதும்:
சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் வளர்ப்பது மிக அவசியம். சொந்த வீடானாலும், வாடகை வீடு என்றாலும் தோட்டங்கள் அமைக்கலாம் அல்லது முருங்கை, பப்பாளி அல்லது செம்பருத்தி போன்று ஏதாவது ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், 2 லிட்டர் வாட்டர் கேனை கட்டாக்கி, அதில் மணல் நிரப்பி, கீரை, கொத்தமல்லி, வெந்தையக் கீரை, பசலிக்கீரை போன்றவை வளர்க்கலாம். இதற்காக, வீடுகளில் வீணாகும் காய்கறிகளை உரமாக பயன்படுத்தலாம். வார்டுகள் அல்லது தெருக்களில் வீடுகளில் மரம் வளர்க்கும் போட்டிகளையும் அரசு அறிவித்து, நன்றாக வளர்த்தவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாம்.
பொறுமைக்கும் எல்லையுண்டு:
பொறுமைக்கு பூமி தாயை உதாரணம் காட்டுவதுண்டு. பூமி தாயின் பொறுமையை, நாம் அன்றாட செயல்களால் முடிந்தளவு சோதிக்கிறோம். எளிதாக, மலிவாக கிடைக்கிறது என்பதற்காக, பயன்படுத்தும் பிளாஸ்டிக், பூமியின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. 20 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக், 300 ஆண்டுகளானாலும் மக்காதவை. கண்ட இடங்களில் போடப்படும் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் மண்ணில் மக்காமல் கிடக்கின்றன. மழை காலங்களில் தண்ணீர் அடியில் செல்வதில்லை. புதைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து, மீதேன் வாயு வெளியாகி, நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. இந்திய பொறியாளர் கழக தலைவர் ராஜாமணி, ""பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, காகித, துணி பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காதவை என தரம் பிரிக்க வேண்டும். பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகளை முடிந்தளவு மக்காத பெட்டிகளில் போட வேண்டும். இதன் மூலம் ஓரளவு பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதை தவிர்க்கலாம்,
இயற்கையான முறையில் எரிமலை கக்குதல், சதுப்பு நிலக் காடுகளில் வாயு வெளியேறுதல், காடுகளில் தீப்பிடித்தல் மூலம் காற்று மாசுபடுகிறது. ஆனால் மனிதனால் உருவாக்கப்படும் காற்று மாசு தான் அதிகம். தொழிற்சாலை, வாகனங்கள், வீட்டு எரிபொருட்களால் காற்றில் மாசு உருவாகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் வீடுகளில் இருந்து உருவாகும் எரிபொருள் மாசு தான் அதிகம். ஆனால் இதைப் பற்றிய விழிப்புணர்வே யாருக்கும் இல்லை. இன்னமும் 70 சதவீதம் பேர், கிராமப்புறங்களில் விறகு, கரி, மண்ணெண்ணெயை பயன்படுத்தி தான் சமைக்கின்றனர். "காஸ்' பயன்படுத்தினால், வீடுகளில் உருவாகும் மாசு குறையும். சென்னையை பொறுத்தவரை வாகனங்கள் மூலம் காற்றில் சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு அதிகமாக உள்ளது. மதுரையில் இந்த இரண்டு வாயுக்களும் அதிகமாக இல்லை. பெரிய தொழிற்சாலைகளும் இல்லை. வாகனங்கள் செல்வதால், காற்றில் தூசி மிகமிக அதிகமாக உள்ளது. இந்த மாசுவால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படும். கிராமமோ, நகர்ப்புறமோ எந்த ரோடாக இருந்தாலும் முழுமையாக அமைக்க வேண்டும். இரண்டு முனைகளும் தார்ரோடாக்கப்பட்டால் தான் தூசி வெளியேறுவது குறையும்.
நிலம், நீர், காற்று, வாயு, ஆகாயம் என பலன் கிடைப்பதால், சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் மரங்களே முதலிடம் வகிக்கின்றன. ஒரு மரத்தால் விளையக்கூடிய பலன், பண மதிப்பில் ரூ. பல லட்சங்களை தாண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும்போது, மரங்கள் வெட்டப்படும் சூழல் உருவானது. இதனால் ஒரு மரத்தை வெட்டினால், நான்கு மரங்கள் நடப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ்தான் பணிகள் நடந்தன. ஆனால் ஒரு இடத்தில்கூட சாலையோர மரம் நடப்படவில்லை. இதனால் வாகனங்களின் புகை, ஒலி காற்றையும், ஆகாயத்தையும் பாதிக்கிறது.
Elorum sinthithal nalathu nadakum
ReplyDeleteஎல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய விடயம் அத்துடன் இதுபோன்ற செயற்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே பழக்கத்திற்கு கொண்டுவரவேண்டியுள்ளது மிக மிக அவசியமானது. இதன் விழைவுகளை புரியாத மக்களிடையே விழிப்புணர்வுகளை உண்டாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை.
ReplyDeleteநம் ஒவ்வொருவரின் கடமை!! ஒவ்வொருவரின் கடமை!!! என்று அடிக்கடி நாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அல்லவா? இக்கடமைகளில் எதையாவது குறைந்த பட்டசம் ஓரிருவருக்காவது இதுசம்மந்தமாக விபரித்துள்ளோமா (பெரிய கடமைகள் அல்ல மேற்படி தலைப்பு சம்மந்தமான் விடயங்களை விபரிப்பது மட்டும்)என்று சற்று சிந்தித்துப்பார்போமானால்... உமது பதில் என்ன என்பதை வைத்து நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.....
how to i print this
ReplyDelete