Header Ads



சம்பளம் குறித்துபேசுவதில் சங்கடப்படும் தொழிலாளர்கள்

தொழிலாளர்களில் பலர், தாங்கள் வாங்கும் சம்பளம் குறித்து, வெளிப்படையாக தெரிவிக்க சங்கடப்படுகின்றனர், என, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இணைய தளம் மூலம் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தரும் நிறுவனமான, மான்ஸ்டர் டாட் காம், சமீபத்தில், உலக அளவில், சம்பளம் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், தாங்கள் வாங்கும் சம்பளத்தை வெளிப்படையாக தெரிவிப்பது என்பது, பெரும்பாலான தொழிலாளர்கள் மத்தியில், இன்னமும், ஒரு சங்கடமான விஷயமாக இருந்து வருவது உறுதிபடுத்தப்பட்டது.

இது குறித்து அந்நிறுவனத்தின் ஆலோசகர், எல்லின் ஸ்லேட்டர் கூறியதாவது: இந்த ஆய்வில், 3,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். சம்பளம் குறித்து கேட்கக்கூடாது; சொல்லக்கூடாது என்ற கொள்கையில் பலர் உறுதியாக இருக்கின்றனர். அதே நேரத்தில், தங்களது சுற்றுலா, உடல்நிலை பாதிப்பு, போனஸ் போன்றவை குறித்து, சக தொழிலாளர்களுடன் பகிர்ந்துகொள்ள இவர்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஒட்டுமொத்தமாக, 35 சதவீதம் பேர், தங்களது சம்பளம் குறித்து கேட்டாலே தர்ம சங்கடமாக உணர்கின்றனர். அதுபோல், 20 சதவீதத்தினர், சக தொழிலாளர்களுடன், பகிர்ந்து கொள்வதில் விருப்பம் இல்லாதவர்களாக உள்ளனர். அதே நேரத்தில், 18 சதவீதம் பேர், தங்களது சம்பளம் குறித்து மற்றவர்களுடன் பேச எவ்வித தயக்கமும் இல்லாதவர்களாக உள்ளனர். வட அமெரிக்காவில், 63 சதவீதம், கனடாவில், 61 சதவீத தொழிலாளர்கள், தங்களது சம்பளம் குறித்து வெளிப்படையாக தெரிவிக்க சங்கடப் படுபவர்களாக உள்ளனர். ஆனால், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்தப் பிரச்னை இல்லை. அவர்கள் மிகவும் வெளிப்படையாக, தாங்கள் வாங்கும் சம்பளம் குறித்து தெரிவிப்பவர்களாக உள்ளனர். பிரிட்டனில், 49 சதவீத தொழிலாளர்களும், ஜெர்மனியில், 64 சதவீதம் பேரும், இவ்வாறு வெளிப்படையாக உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.