Header Ads



பொலிஸ் துறையின் இலட்சணம் சந்தி சிரிக்கும் நிலையில் உள்ளது - மனோ கணேசன்

(Adt) வட மாகாணசபை தேர்தலின் போது பொதுநலவாய நாடுகளின் அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். அதேபோல் இன்று வட மாகாணத்தில் ஆளுநராக பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறி அகற்றப்பட்டு, அவ்விடத்தில் சிவில் நபர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். இவை எதிர்கட்சிகளின் கோரிக்கை. 

இவை சம்பந்தமாக எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் நிமித்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை எதிரணி தலைவர்கள் தேர்தல் ஆணையாளரை நேரில் சந்திக்க உள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, 

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் இன்று வட மாகாணத்துக்கு போலிஸ் அதிகாரங்கள் தேவை இல்லை என்று சொல்லும் நபர்கள் யார்? விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் இது தொடர்பில் முன்னணியில் உள்ளார்கள். இவர்கள்தான் இந்த நாட்டில் இன்று சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை இல்லாமல் செய்தவர்கள். இந்த நாட்டில் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு இருந்திருந்தால், மாகாணத்தில் மட்டும் அல்ல, மத்திய அரசாங்கத்திலும் பொலிஸ் அதிகாரங்களை பற்றி கவலைப்பட்டிருக்க தேவை இல்லை. 

சுயாதீனமாக செயல்படும் பொலிஸ்துறையை கண்காணிக்க சுயாதீன போலிஸ் ஆணைக்குழு இருக்க வேண்டும். அத்தகைய ஒரு சூழலில் வடமாகாண பொலிஸ் ஒருபோதும் சம்பந்தனின் பொலிசாக இருக்காது. அதேபோல் மத்திய அரசின் பொலிஸ் ஒருபோதும் மகிந்த பொலிசாக இருக்காது. 

ஆனால் இன்று பொலிஸ் துறையின் இலட்சணம் சந்தி சிரிக்கும் நிலையில் இருக்கின்றது. தெற்கிலே ஆளும்கட்சி அரசியல்வாதிகளிடம் பொலிஸ் அதிகாரிகள் அடி, உதை வாங்கி காயப்பட்டு மருத்துமனையில் இருக்கிறார்கள். இங்கே கொழும்பில் பொலிஸ் நிலையங்களில் கைதிகள் அடிப்பட்டு மரணமடைகின்றார்கள். போதாத குறைக்கு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் பாதாள உலக நபர்களுடன் சேர்ந்து அப்பாவி ஒருவரை கொலை செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். 

இத்தகைய ஒரு சீரழிந்து போயுள்ள பொலிசை வைத்துக் கொண்டுதான் விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் பொலிஸ் அதிகாரங்கள பற்றி பேசுகின்றார்கள். ஸ்ரீலங்கா பொலிஸ் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொலிசாக மாறியுள்ளது. இதை மாற்ற, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை கொண்டு வந்துவிட்டு, மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை கொடுக்க வேண்டாம் என்று இவர்கள் பேச வேண்டும். இல்லாவிட்டால், வடக்கில் மாகாணசபைகளிடம் இருந்த பறிக்கப்படும் பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் வழங்கப்பட்டு அது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொலிசாக வடக்கில் வட மாகாணசபைக்கு எதிராக செயல்படும். 

இதையே நாம் எதிர்கின்றோம். மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாணசபைக்கு சட்டத்தில் உள்ளதுபோல் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். வேண்டுமானால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, வட மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொலிஸ் அதிகாரங்களை பயன்படுத்தட்டும். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வட மாகாணசபைக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொலிசை பயன்படுத்த இவர்கள் திட்டம் போடுகின்றார்கள். பொலிஸ் சுயாதீனமாக இருக்க வேண்டும். மகிந்த பொலிசை நாம் எதிர்கின்றோம். நாளை வடக்கில் அது சம்பந்தனின் பொலிசாக மாறுமானால், அதையும் நாம் கண்டிப்பாக எதிர்ப்போம். 

இன்று தெற்கில் 50 மீனவர்கள் உயிர் இழந்து விட்டார்கள். இதற்கு இந்த அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். புயல் வருகிறது, சூறாவளி வருகிறது, சுனாமி வருகின்றது, கவனம் என்று மக்களுக்கு உரிய அறிவுறுத்தல் எச்சரிக்கைகளை வழங்க இவர்களுக்கு முடியவில்லை. 

இடர் நிவாரண அமைச்சர் இந்த நேரத்தில் நகைச்சுவை கதை பேசுகின்றார். தவறு கண்டுபிடிக்கப்பட்டால் ராஜினாமா செய்வாராம். யார் கண்டுபிடிப்பது அமைச்சரே என கேட்க விரும்புகின்றேன். தவறு நடந்துள்ளதும் அங்கு, விசாரணை நடத்துவதும் அங்கு, முடிவு அறிவிப்பதும் அங்கு, இந்நிலையில் எங்கே நியாயம் இருக்க போகின்றது? 

இந்த அமைச்சரும் இன்னொரு மகிந்ததான். இவர் மகிந்த அமரவீர. இவரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட மந்திரி. இன்று நவீன உபகரணங்கள் இல்லை. அவை இருந்திருந்தால் மீனவர்களுக்கு உரிய அறிவித்தல்களை வழங்கி அவர்களை காப்பாற்றி இருக்க முடியும் என்று சொல்கின்றார்கள். நவீன உபகரணங்கள் வாங்க பணம் இல்லையாம். நல்ல கதை இது. 

இதே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், மகிந்த ராஜபக்சவின் பெயரில், விமானம் வராத சர்வதேச விமான நிலையம் அமைக்க, கப்பல் வராத சர்வதேச துறைமுகம் அமைக்க, விளையாட்டு போட்டி நடக்காத சர்வதேச விளையாட்டரங்கம் அமைக்க, மில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்ய உங்களால் முடியும். 

ஆனால், அப்பாவி மீனவர்களின் உயிர் காக்க நவீன உபகரணங்கள் வாங்க உங்களிடம் பணம் இல்லை. இன்னொரு சுனாமி இலங்கை தீவை நோக்கி இந்த ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காலத்தில் வந்து விடக்கூடாது என பிரார்த்திக்கின்றேன். அப்படி வந்து விட்டால், லட்சக்கணக்கான மக்கள் மடியும் வரை இந்த அரசு பார்த்துக்கொண்டு இருக்கும். 

2 comments:

  1. சிந்திக்க வேண்டிய நல்ல பதிவு...!!!

    உங்களது நல்லரோக்கியத்துக்கும் காத்திரமான அரசியல் பங்களிப்புக்கும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. என்ன கின்னஸ் சாதனையை கேலி செய்கிறீர்கள்: உலகில் விமானம் தரை இறங்க முடியாத விமான நலையம், கப்பல் நங்கூரம் இடமுடியாத துறைமுகம், விளையாட முடியாத விளையாட்டு மைதானம். கொண்ட நாட்டு ஜனாதிபதியின் ஊர்: ஹம்பந்தொட்ட.

    ReplyDelete

Powered by Blogger.