மாகாண சபைகளை ஒழிப்பதற்கான கூட்டமைப்பு உருவாக்கம்
மாகாணசபைகள் முறைமையை ஒழிப்பதற்கான கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பு இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுபல சேனா, சிஹல ராவணய ஆகிய அமைப்புக்களும் சில சிங்கள முக்கியஸ்தர்களும் இந்த அமைப்பில் இடம்பெறுகிறார்கள்.
மாகாணசபைகள் முறையை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயற்படுவதற்காக இந்த அமைப்பு அமைக்கப்பட்டதாக அதன் நிறுவனர்கள் கூறியுள்ளனர்.
அரசியல் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பகிரும் நடை முறை தோல்வியடைந்துவிட்டதாக இன்றைய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறிய அந்த அமைப்பினர், ஆகவே நிர்வாக அதிகாரங்களே மாகாண சபைகளுக்கு பகிரப்பட வேண்டும் என்று கூறினார்கள்.
இந்த மாகாண சபைகள் முறைமை வடக்கு மக்களின் மனதை வெல்லத் தவறிவிட்டது என்று அங்கு உரையாற்றிய வணக்கத்துக்குரிய ஞானசார தேரர் கூறினார்.
விடுதலைப்புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடித்து 4 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும், தமிழ் மக்களின் நம்பிக்கையை தம்மால் வெல்ல முடியாது போய் விட்டது என்று கூறிய அவர், மாகாண சபையைப் பற்றி எந்த விதமான அக்கறையும் இல்லாமல் தமிழ் மக்கள் இருப்பதாகவும், தமது இடங்களில் நிம்மதியாக வாழவேண்டும் என்பதே அவர்களது அக்கறையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பலவிதமான குறைபாடுகளை உடைய 13வது திருத்தச் சட்டம் இலங்கையில் உள்ள எந்தவிதமான பிரச்சினைகளையும் தீர்க்காது என்றும் அவர் கூறினார்.
மாகாண சபைகள் முறைமையை தொடர்வதற்கு அரசாங்கம் நினைத்தால், அதன் குறைபாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தமது கூட்டமைப்பு அனைத்தையும் செய்யும் என்றும் அவர் கூறினார். bbc
அரசாங்கம் சில சில கட்சிகளுக்கு குழந்தைக்கு செல்லம் கொடுப்பதைப்போல கொடுத்து தமது பொழுதைப்போக்கிக்கொண்டிருந்தது அதேவிடயம் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக வரும் காலம் ஆரம்பித்துவிட்டது.
ReplyDelete