Header Ads



நாட்டில் இயற்கையின் சீற்றம் - படகுகள் மூழ்கின - சடலங்கள் மீட்பு

காலி, பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். நாட்டில் நிலவிவருகின்ற கடும் காற்றுடன் கூடிய மிகமோசமான காலநிலை காரணமாகவே இந்த படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

பலபிட்டி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 20 படகுகளில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு கடலுக்கு சென்ற 20 படகுகளில் 18 படகுகள் கடும் காற்று வீசியமையால் கடலுக்குள் மூழ்கிவிட்டன. அந்த படகுகளில் இருந்த மீனவர்களில் இருவர் கரைக்கு நீந்திவந்து சம்பவத்தை விபரித்துள்ளனர்.

இதனையடுத்தே மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையினருடன்  இணைந்து விமானப்படை ஹெலிக்கொப்டர் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் மூன்று கடற்படை படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடலுக்குச் செல்ல வேண்டாம்

நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மன்னார், பொத்துவில், காலி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

மீனவர்கள் போராட்டத்தால் தெஹிவளையில் பதற்றம்

தெஹிவளை பகுதியில் ரயில் வீதியை மறித்து மீனவர்கள் சிலர் போராட்டம் மேற்கொள்வதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு மீன்பிடிக்கச் சென்ற சில மீனவர்களை மீட்டுத் தருமாறு கோரியே மீனவர்கள் போராட்டம் செய்கின்றனர்.

இங்கு சிலர், மீன் பிடி படகுகளை ரயில் தண்டவாளத்தில் தரித்துவைத்து ரயில் போக்குவரத்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதால் ரயில் போக்கவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.