Header Ads



இதுவா ஊடக தர்மம்..?

(ஜெம்ஸித் அஸீஸ்)

அண்மைக் காலமாக நாட்டில் அதிகரித்திருக்கும் கொலைகள், தற்கொலைகள் பற்றிய புள்ளிவிபரங்களைப் பார்க்கின்றபோது தலையே சுற்றுகிறதுளூ நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்வி முள்ளாய் இதயத்தைக் குத்துகிறது.

தாய் பிள்ளையை, பிள்ளை தாயை, கணவன் மனை வியை, மனைவி கணவனை, காதலன் காதலியை, காதலி காதலனை... என்று கொலையும் தற்கொலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆன்மிக வறு மையின், கோழைத்தனத்தின், மனித வாழ்வின் யதார்த் தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியதன் விளைவுகள்தான் இவை.

இவை ஒரு புறம் இருக்க, இத்தகைய கொலைகள், தற்கொலைகள் பற்றிய செய்திகளை ஊடகங்கள் போட்டி போட்டு பிரசுரிக்கின்றன வெளிக் கொணர்கின்றன. பெரும்பாலான செய்திப் பத்திரிகைகள் முன்பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் கலர்ப் படத்தோடு பிரசுரம் செய்கின்றன. தொலைக்காட்சி செய்திகளில் இத்தகைய காட்சிகள் நீண்ட நேரம் ஒளிபரப்பப்படுகின்றன.

ஊடக தர்மத்துக்கு முரணான செய்தி அறிக்கையிடல் என்பதைத் தெரிந்து கொண்டும் இத்தகைய ஊடகங்கள் இவற்றுக்கு கூடிய முக்கியத்துவம் வழங்குகின்றமை கொலை, தற்கொலை போன்ற பெரும் பாவச் செயல்களின் பாரதூரத்தை மக்கள் சாதாரணமாகக் கருதும் நிலையைத் தோற்று விக்குமல்லவா?

ஊடகவியலாளர்களே, செய்திகளை முந்திக் கொண்டு வெளியிடுவதிலும் பிரசுரிப்பதிலும் உங்களது செய்திப் பத்திரிகை, செய்தி ஸ்தாபனம், தொலைக்காட்சி சேவை பிரபலமடைகிறது என்பதற்காக, எதையும் எந்த அசிங்கத்தையும் எந்தப் பயங்கரத்தையும் அறிக்கையிடுவதனால் என்ன நன்மை ஏற்படப் போகிறது என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா?

நாம்தான் முதலில் வெளியிட்டோம் என்பதைவிட எதனை, எப்படி வெளியிட்டோம் என்பதில் கவனம் செலுத்தத் தவறுவது ஏன்? 

நாளாந்தம் பத்திரிகை வாசித்து வந்த ஒருவர் அதில் இடம்பெறும் கொலை, தற்கொலை பற்றிய செய்திகளை வாசித்து வாசித்து மனம் நொந்து தனது வாழ்வில் நிகழ்ந்த ஓர் அற்ப நிகழ்வுக்காக அவரும் தற்கொலை செய்து கொண்டதாக கேள்விப்பட்டு வேதனையடைந்தேன்.

இதற்கு யார் பொறுப்புச் சொல்வது?

இப்படி ஊடகங்கள் படம்போட்டு, படம் காட்டி, விலாவாரியாக விபரித்து எத்தனை பேரைக் கொன்றிருக்குமோ! 

வல்லுறவு, கடத்தல் பற்றிய விவரணச் செய்திகளைப் படிக்கும், பார்க்கும் எத்தனை பேர் அத்தகைய பாதகச் செயல்களின்பால் தூண்டப்பட்டு சமூகத்தைச் சீரழிக்கிறார்களோ! 

இதனை யார் வெளியிடுவது?

அதிகாலையில் பத்திரிகை படிக்கும் ஒருவர் இத்தகைய செய்திகளை ஒவ்வொரு நாளும் படித்து வந்தால் அவர் உளவியல் தாக்கத்திற்கு உட்பட முடியுமல்லவா? அவரது மனோநிலையில் மாற்றம் ஏற்படுமல்லவா?

காசு கொடுத்து பத்திரிகை வாங்குவதும் மின்சாரம் செலவழித்து செய்தி பார்ப்பதும் மன அழுத்தத்தையும் விரக்தியையும் இலவசமாகவே தலையில் கட்டிக் கொள்வதற்கா? 

குற்றம் செய்வது பாவம். பெயர், ஊரோடு அவற்றைப் பகிரங்கப்படுத்துவதும் பாவம்தான்!

பொறுப்புள்ள ஊடகவியலாளர்களே, பொறுப்பாக நடந்து கொள்வதுதானே ஊடக தர்மம்!

1 comment:

Powered by Blogger.