Header Ads



தட்டிப் பறித்தல்..!

(தம்பி)

இரண்டு மாற்றங்களை 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் மேற்கொள்வதற்கு - அரசு ஆரம்பத்தில் முயற்சித்தது. ஆனால், அவை தொடர்பில் எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இப்போதைக்கு ஒரு திருத்தத்தை மட்டும் மேற்கொள்வதென தீர்மானித்து - அதற்கான முயற்சிகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு மாகாணசபைகளோ அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணசபைகளோ பரஸ்பரம் விரும்பும் பட்சத்தில் இணைந்து கொள்ள முடியுமென்று 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்தினை ரத்து செய்வதற்கு அரசு தற்போது தீர்மானித்துள்ளது.

19 ஆவது திருத்தச் சட்டமொன்றின் மூலமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மேற்படி சரத்து ரத்துச் செய்யப்படவுள்ளது. 

ஆயினும், மாகாணசபை விவகாரங்கள் தொடர்பில் - நாடாளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னர் - அது குறித்து அனைத்து மாகாணசபைகளினதும் அங்கீரத்தினை முதலில் பெறுதல் வேண்டும் என்பது சட்டமாகும். அந்தவகையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருதற்கு முன்னர், அனைத்து மாகாணசபைகளிடமும் அதற்கான அங்கீகாரத்தினைப் பெறுமாறு உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அதனால், 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றம் அடங்கிய பிரேரணைக்கு மாகாணசபைகளின் அங்கீகாரங்களைப் பெறும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் தென், வடமேல், வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைகள் மேற்படி பிரேரணைக்கு தமது அங்கீகாரங்களை வழங்கியுள்ளன. 

இதில் பகிடி என்வென்றால், வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளில் - குறித்த பிரேரணைக்கு ஆதரவாக மு.காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். 

13 ஆவது திருத்தச் சட்டத்தில் எந்தவித குறைப்புகளையும் மேற்கொள்வற்கு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்காது என – அந்தக் கட்சி அறிவித்துள்ள நிலையில்தான், வடமேல் மாகாண சபையின் எஸ். ஆப்தீன் எஹியா மற்றும் றிஸ்வி ஜவஹர்ஷா ஆகிய மு.கா. உறுப்பினர்கள் - 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும் பிரேரணைக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இதனால், வடமேல் மாகாணசபையில் மேற்படி பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த தமது இரண்டு உறுப்பினர்களையும், கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக மு.கா. அறிவித்துள்ளது. மத்திய மாகாணசபையில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர் - ஏற்கனவே மு.காங்கிரசிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்றும், அவரை மு.காங்கிரஸ் உறுப்பினராகக் கருத முடியாது என்றும் கட்சியின் செயலாளர் ஹசனலி கூறியுள்ளார். 

ஆனால், கட்சியிலிருந்து தம்மை இடைநிறுத்தியமையானது அநீதியான செயல் என்று - வடமேல் மாகாணசபை மு.கா. உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியா தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாயின் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு அதைச் செய்யுமாறும், ஆளும் தரப்பு உறுப்பினர் என்பதற்காகப் பெற்றுக்கொண்ட அனைத்து சலுகைகளையும் மீளளிக்குமாறும் தாம் வடமேல் மாகாணசபையின் ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டதாக எஹியா தெரிவித்தார். 

இந்த நிலையில், கட்சித் தலைவருடன் தொடர்புகொள்வதற்கு தொலைபேசி மூலம் தாம் முயற்சித்ததாகவும், ஆனால் தமது தொலைபேசி அழைப்புக்கு தலைவர் ஹக்கீம் பதிலளிக்கவில்லை என்றும், இதனாலேயே – தாம், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க நேர்ந்ததாகவும் எஹியா கூறியுள்ளார். 

ஆனால், இந்த இடத்தில் ஒரு விடயத்தினை தெரிவித்தே ஆகவேண்டும். அதாவது, மு.கா. தலைவர் தனது கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களை முன்னதாகவே அழைத்துளூ '13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும் பிரேரணைக்கு எதிராக நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என 'வெட்டொன்று துண்டிரண்டு' பாணியில் உத்தரவிட்டிருந்தால், கடைசி நேரத்தில் மு.கா. தலைமையை தொடர்பு கொள்ள முயற்சிப்பதும், அதற்கு தலைவர் பதிலளிக்காமல் விடுவதுமான நாடகங்கள் அரங்கேறியிருக்க மாட்டாது.

இதேபோன்றுதான், கிழக்கு மாகாணசபையில் மு.காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு மாறு செய்யும் வகையில், திவிநெகும சட்ட மூலத்துக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் வாக்களித்தமையை மறந்திருக்க மாட்டீர்கள். அப்போதும் இதேபோன்றதொரு நாடகம்தான் அரங்கேறியிருந்தது. கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாக ஏன் வாக்களித்தீர்கள் என்று கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர்களிடம் கேட்டபோதுளூ அவர்களும் இதே போன்றதொரு பதிலைத்தான் கூறியிருந்தார்கள். 'திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்வது என்று கேட்பதற்காக – கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். ஆனால், முடியவில்லை. அதனால்தான், நாம் அந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம்' என்றார்கள்.  

ஆனாலும், கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாக திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாய் வாக்களித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மீது எவ்விதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால், கட்சியின் நிலைப்பாட்டை மீறி 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக, எங்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைத்துள்ளார்கள். இது என்ன நீதி, இது என்ன நியாயம் என்று கேட்கிறார் - வடமேல் மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் எஹியா. கேள்வி சற்று குதர்க்கமானது என்றாலும் கூட – நியாயமானதாகும்.

இது ஒருபுறமிருக்க, ஆளுங்கட்சியில் இருந்து கொண்டு அரசின் கொள்கைகளுக்கு முரணாக அல்லது எதிராக நடக்கின்றவர்கள் - ஆளுந்தரப்பை விட்டு உடனடியாக விலகிச் செல்லலாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார். 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் அரசின் முயற்சியை – ஆளுந்தரப்புக்குள் இருந்து கொண்டே எதிர்க்கின்றவர்களை மனதில் வைத்துத கொண்டுதான் ஜனாதிபதி இவ்வாறு கூறியிருக்கின்றார் என்பதை அனுமானித்துக் கொள்வது சிரமமானதல்ல. அதாவது, 'எங்களுடன் இருப்பதென்றால் எங்கள் சொல்லைக் கேட்டு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் விலகிச் சென்று விடுங்கள்' என்கிறார் ஜனாதிபதி. 

இந்த நிலையில், ஜனாதிபதியின் கூற்றுக்கு மறுமொழி சொல்வது போல் - மு.காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி அறிக்கையொன்றினை வெளியிட்டிருக்கின்றார். அரசை விட்டு மு.கா. ஒருபோதும் விலகாது. வேண்டுமென்றால் ஆளுந்தரப்பிலிருந்து மு.காங்கிரசை ஜனாதிபதி விலக்கி விடட்டும் என்கிறார். 

'மு.காங்கிரசை நம்ப முடியாது. குறிப்பாக, ரஊப் ஹக்கீமை நம்பக் கூடாது. அவர் முக்கியமான நேரத்தில் காலை வாரி விடும் வகையிலானவர்' என்கிறதொரு மனப்பதிவு ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. ஏற்கனவே, ஒரு தடவை ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சியில் மு.காங்கிரஸ் சேர்ந்திருந்து விட்டு, பின்னர் ஒரு வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, எதிரணிக்குத் தாவியதை மறந்திருக்க மாட்டீர்கள். 

எனவே, மு.காங்கிரஸ்காரர்கள் இடையில் காலை வாரிவிட்டுச் செல்பவர்கள் என்கிற அவப்பெயரை இனி சம்பாதித்துக் கொள்ளக் கூடாது என்பதில் அந்தக் கட்சியின் தலைமை கவனமாக உள்ளது. அதாவது, தமது கௌரவத்தினை இழந்தாயினும் இம்முறை - நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் மு.கா. உறுதியாக இருக்கிறது. 

இதேவேNளை, கடந்த சில நாட்களில் த.தே.கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.கட்சி ஆகிவற்றுடன் மு.காங்கிரசின் தலைமை சந்திப்புகளை நடத்தியுள்ளது. இது – ஆளுந்தரப்பாருக்கு சந்தோசமான செய்தியாக இருக்காது. குறிப்பாக, த.தே.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை மு.கா. தலைவர் ஹக்கீம் சந்தித்துப் பேசியமையானது – ஆட்சியாளர்களுக்கு கடுமையான கடுப்பினை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. 

இந்த நிலையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் பிரேரணையினைக்கு எதிராக - கிழக்கு மாகாண சபையில் மு.கா. வாக்களிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

கிழக்கு மாகாணசபையில் - குறித்த பிரேரணையினை மு.காங்கிரஸ் எதிர்க்குமாயின், அந்தப் பிரேரணை தோல்வியடைந்து விடும். எனவே, அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதை தடுப்பதற்குரிய அத்தனை நடவடிக்கைகளையும் ஆட்சியாளர்கள் மேற்கொள்வார்கள். முதலில், மு.காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கும் நடவடிக்கைளைத்தான் துவங்குவார்கள். அந்த முயற்சி பலித்தால் ஆட்சியாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். சிலவேளை, கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர்கள் ஆட்சியாளர்களிடம் விலைபோகவில்லையாயின் - அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக அமையும் என்பதுதான் இங்குள்ள பெருத்த கேள்வியாகும். 

அரசு கொண்டுவரும் மேற்படி பிரேரணை கிழக்கு மாகாணசபையில் தோல்வியடைவதற்கான சாத்தியங்கள் இருப்பதால் - கிழக்கு மாகாணசபையை கலைத்து விடுவதற்கு ஆட்சியாளர்கள் ஆலோசித்து வருகின்றார்கள் என - சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்தச் செய்திகளை தட்டிக் கழித்து விடவும் முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் சகோதரர்களும் - தாம் எடுத்த எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்பதை நான் சொல்லி - நீங்கள் தெரிந்து கொள்ளும் நிலையில்லை. 

No comments

Powered by Blogger.